Published:Updated:

மாநிறமாகப் பிறந்தது... மாபாவமா ? !

மாநிறமாகப் பிறந்தது... மாபாவமா ? !

மாநிறமாகப் பிறந்தது... மாபாவமா ? !

மாநிறமாகப் பிறந்தது... மாபாவமா ? !

Published:Updated:

வாசகிகள் பக்கம் 
என் டைரி - 286 

##~##

விரோதம் பாராட்டும் மாமியாராலும்... ஊர்வம்பு பேசும் வீணர்களாலும் ரணமாகிக் கிடக்கிறது என் வாழ்க்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. மாமியார், மாமனார், கல்லூரியில் படிக்கும் நாத்தனார் என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். என் நாத்தனாரும், கணவரும் நல்ல நிறமாக, மிக அழகாக இருப்பார்கள். இதைப் பற்றிய பெருமை என் மாமியாருக்கு உண்டு... நான் மாநிறமாக, ஓரளவு அழகாக இருப்பேன் என்பது முக்கிய காரணம்!

திருமணமான புதிதில் வீட்டுக்கு வரும் அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும், ''ராஜகுமாரன் மாதிரி அழகா இருக்குற உன் பையனுக்கு, இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டியே...'' என்று கிசுகிசுப்பார்கள் என் மாமியாரிடம். கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டாலும், கணவரிடம் முறையிடுவேன். அத்தனை அன்பாக இருக்கும் அவர், ''விடு... நீயும், உன் அன்பும்தான் எனக்கு அழகு!'' என்பார் ஆறுதலாக. என் மனது குளிர்ந்துவிடும்.

ஆனால், என் மாமியார் இந்த விஷயத்தையே குத்திக்காட்டி என்னைக் காயப்படுத்த ஆரம்பித்தார். கண்ணுக்குத் தெரியாமல் வம்பு பேசியவர், காலப்போக்கில் என் முன்பாகவே, ''என் பையனுக்கு நீ எல்லாம் பொருத்தமா..? ஏதோ விதி முடிச்சு போட்டிருச்சு'' என்பார். வீட்டுக்கு வருபவர்களுக்கும் அவர் அப்படிப் பேச இடம் கொடுக்க, ''உன் மக னுக்கு ஊரு உலகத்துல பெண்ணா கிடைக்கல'’ என்று  அவர்களும் மென்று விழுங்கி காதுபடவே பேச ஆரம்பித்தார்கள். என் நாத்தனாரோட ஒப்பிட்டும் மட்டம் தட்டிப் பேசினார்கள்.

மாநிறமாகப் பிறந்தது... மாபாவமா ? !

இப்படி, என்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்ததுடன், அப்படிப் பேசுபவர்கள் மீதான வெறுப்பையும் வளர்த்துக் கொண்டே வந்தது. நான் வீட்டிலேயே துணி தைத்துக் கொடுப்பேன் என்பதால், அன்று என்னிடம் துணி தைக்கக் கொடுக்க சில பெண்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், ''என் மகளைத் தர்றேன்னு சொன்னேன்... கேட்டியா..?'' என்று நக்கலாக பேச, ''என்ன செய்ய... என் தலையெழுத்து!'' என்று என் மாமியார் தலையில் அடித்துக்கொள்ள, எனக்கு உச்சிக்கு ஏறிவிட்டது வெறி. ''துணியெல்லாம் தைத்து தர முடியாது... எல்லாரும் இங்க இருந்து போங்க'' என்று கத்திவிட்டு ரூமுக்குள் சென்றுவிட்டேன்.

''வயித்துல புள்ள பூச்சி இருக்கா... வாய் மட்டும் நீளுது'' என்று திட்டிய என் மாமியார், கணவர் வந்ததும் நடந்ததைப் பற்ற வைத்தார். ''நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்ல... இப்படியா இங்கிதம் தெரியாம நடந்துப்ப..?'' என்று கணவரும் பேச, அந்த நொடியில் வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனக்கு.

அடுத்தவர் குடும்பத்தில் நுழைந்து கணவன் - மனைவி ஜோடிப் பொருத்தத்தை அளக்கும் நஞ்சுகளையும், தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மாமியாரையும் எப்படி சமாளிக்க..?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு

என் டைரி 285ன் சுருக்கம்

மாநிறமாகப் பிறந்தது... மாபாவமா ? !

''தினக்கூலி கணவர், நான்கு பிள்ளைகள் என கஷ்டத்தில் தவித்தபோது, மூத்த பெண்ணை, அவளது விருப்பமே இல்லாமல் சென்னைக்கு வீட்டு வேலைக்காக அனுப்பினேன். ஆனால், ஆறே மாதத்தில் அவள் காணாமல் போனது... கொஞ்ச நாட்களில் திடீர் என்று கணவரும் இறந்து போனது... குடும்பத்தையே குலைத்துப்போட்டுவிட்டது. சமாளித்து வாழ்ந்த நான், சின்ன மகளின் படிப்புக்காக சென்னை வந்தபோது, இன்ப அதிர்ச்சியாக மூத்தவளைப் பார்த்தேன். 'எனக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். நீ உன் வேலையை பார்த்துக்கிட்டு போ’ என்று கத்தித் தீர்த்துவிட்டு போயேவிட்டாள்!

நான் அவளை சென்னைக்கு அனுப்பியது தவறாகவே இருந்தாலும், என்னை மன்னிக்க மாட்டாளா?'

வாசகிகள் ரியாக்ஷன்...

தவறும் இல்லை... சரியும் இல்லை!

நல்லவேளையாக பத்திரிகைகளில் படிப்பதுபோல, வேலை செய்யும் இடத்திலும், அங்கிருந்து வெளியேறிய பின்னரும் உன் பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. அதற்கே நீ சந்தோஷப்படத்தான் வேண்டும். தன் சம்பளத்தில் நீங்கள் எல்லாம் சந்தோஷமாக இருந்ததாக அவள் நினைத்ததால் பொங்கிய கோபமே அவளிடம் தற்போதும் இருக்கிறது. அதை தவறென்றோ... சரியென்றோ சொல்ல முடியாது. அதைப் பற்றி இனியும் குழப்பிக் கொள்ளாமல், அவள் நன்றாக வாழ்கிறாள் என்பதை மட்டும் மனதில் ஏற்றிக்கொண்டு மற்ற பிள்ளைகள் வாழ்வில் கவனம் செலுத்து!

- ஸ்வர்ணா திருமூர்த்தி, தஞ்சாவூர்

நீ செய்தது தவறு!

அவள் கெஞ்சியும்கூட, அவளை வேலைக்கு அனுப்பியிருக்கக் கூடாது. ஆண் குழந்தைகளுக்கே அந்த கோபம் இருக்கும் எனும்போது... பெண் குழந்தையான அவள் கோபப்பட்டதில் தவறே இல்லை. ஒரு பெண் குழந்தையாக... தாயைப் பிரிந்த கோபம், அவள் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி, இன்று வரையிலும் ஆறாமலே இருக்கிறது. அதெல்லாம் உன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே சரியாகிவிடும் என்று நீ நினைப்பது தவறு. அவள் மனதில்பட்ட காயம் நாளடைவில் ஆறக்கூடும். காலம் அதற்கான மருந்தை போடக்கூடும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்!

- ஜானகி ரங்கநாதன், சென்னை-4

மற்றவர்களை யோசி!

உன் சுயநலத்துக்காக அவளை வேலைக்கு அனுப்பவில்லை என்பதுதானே உண்மை. அப்படியிருக்கும்போது ஏன் வீணாக கவலைப்படுகிறாய்? அதேசமயம், இளவயதிலிருக்கும் அவளுக்கு இந்த உண்மைகள் புரியவும் வாய்ப்பில்லை. எனவே, தற்போதைக்கு அவளை மனதில் இருந்து உதறிவிட்டு, மற்ற பிள்ளைகளின் வாழ்வைப் பற்றி மட்டுமே யோசி. அதுதான் உனக்கும் நல்லது... குடும்பத்துக்கும் நல்லது!

- சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism