மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 298

என் டைரி - 298

என் டைரி - 298
##~##

னக்கு இப்போது 40 வயதாகிறது. கல்லூரி செல்லும் மகனும் இருக்கிறான். ஆனால், ஆரம்பத்திலிருந்தே கணவனுடனான இல்லற வாழ்க்கை... நரக வாழ்க்கையாகிப் போனதுதான் வேதனை. அது இன்றளவும் தொடர்வது... பெரும்வேதனை!

 ஆரம்பத்திலிருந்தே அவன் அயோக்கியன், ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவன். வேலை பார்த்த இடத்தில் திருடி, வேலை பறிபோய், என் நகைகளை எல்லாம் விற்றுத் தின்று, தினமும் குடித்துவிட்டு அடித்து... என படாதபாடு படுத்தினான். மகனுக்காக அத்தனையும் சகித்துக் கொண்டேன். பிறந்த வீட்டில் வசதியானவர்கள் என்றாலும், இவனைப் பற்றி அவர்களிடம் குறை சொல்லவோ, பணம் கேட்கவோ செய்ததில்லை. நானே ஏதாவது வேலைக்குச் செல்ல... அதை வைத்தே நானும் மகனும் பசியாறினோம்.

அவன், மோசமான கணவன் என்பதைவிட, மோசமான தந்தையாக இருந்ததைத்தான் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. என் மகனை ஒருநாளும் தூக்கிக் கொஞ்சியதில்லை. ஒரு பிஸ்கட் கூட வாங்கிக் கொடுத்ததில்லை. என்ன வகுப்புப் படிக்கிறான் என்பதுகூட அவனுக்குத் தெரியாது. 'இப்படியும் ஓர் அப்பன் இருப்பானா’ என்று அழுகையும் ஆத்திரமுமாக வரும்.

என் டைரி - 298

இந்நிலையில், 'வெளிநாடு போகிறேன்' என்றபடி திடீரென கிளம்பிப் போனான். ஆனால், ஒருநாளும் பணம் அனுப்பியதில்லை. விடுமுறையில் மட்டும் வந்துவிடுவான் வீட்டுக்கு. சொந்த சம்பாத்தியத்தில் வண்டி ஓடியதால்... நானும் அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் என் மீது சந்தேகப்பட ஆரம்பித்ததைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரேஷன் கார்டு மாற்றுவது, மகனுக்கு கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்கித் தருவது போன்ற வெளிவேலைகளை எனக்குச் செய்துகொடுத்து உதவுவது... என்னுடைய சித்தப்பா மகன்தான். அவனைப் போய் சந்தேகப்பட்டான் இந்தப் பாதகன். பால்ய வயதில் இருந்த என் பையனிடம், 'மாமா வீட்டுக்கு வந்தா எங்க படுப்பான்? அம்மா எங்க படுப்பா? நீ எங்க தூங்குவே..?’ என்றெல்லாம் விசாரித்தான். அவனின் சந்தேகப் பேய், என்னை அளவுக்கு மீறி ஆட்டி வைத்தது.

ஒரு கட்டத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும், என் மகன் மூலமாக, என் அம்மா வீட்டுக்குத் தெரியவர, கொதித்துப் போனவர்கள், 'இதற்கு மேலும் சேர்ந்து வாழ்வதில் பலன் இல்லை' என்று விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிட்டனர். 'நிம்மதி வந்தது’ என நினைத்தேன் என் வாழ்வில். ஆனால், 'என் மகனை உங்கிட்ட இருந்து பிரிக்கிறேன் பார்’ என்று என்னிடம் சபதம் போட்டுச் சென்றவன், இப்போது அதை செய்து கொண்டிருக்கிறான்.

இதுவரை மகனுக்காக ஒரு பைசாவைக்கூட செலவழிக்காதவன், இந்த நான்கு ஆண்டுகளாக அவனுக்குத் தேவையில்லாத ஆடம்பரங்களை எல்லாம் செய்துகொடுத்து... அவனை தன் பக்கம் இழுத்திருக்கிறான். புத்தாடை, பைக், தினமும் திரைப்படம், சிகரெட், செலவுக்கு காசு என்று பையனை மதி மழுங்கடிக்கிறான். என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாக சொல்லிக் கொடுத்து வெறுக்க வைக்கிறான். என் மகனும், அவனை வளர்த்தெடுக்க இத்தனை காலமாக நான் அனுபவித்த துன்பங்களையெல்லாம் மறந்து, அப்பன் பக்கம் சென்றுவிட்டான்.

மொத்தத்தில், தன்னைப் போலவே மகனையும் சீரழித்துக் கொண்டிருக்கிறான். எப்படி மீட்க என் பிள்ளையை அந்தக் கயவனிடமிருந்து?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...      ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 298

100

என் டைரி 297ன் சுருக்கம்

என் டைரி - 298

''கணவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. இரண்டு பிள்ளைகள். குறைகள் எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பம். கணவரின் சம்பாத்தியத்தில் அகலக்கால், ஆடம்பரம் ஏதுமின்றி சிக்கனமாக குடும்பம் நடத்தி, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமித்து வருகிறேன். ஆனால், ஆடம்பர வாழ்க்கை காரணமாக தொழிலில் நொடித்துப் போன அவருடைய தம்பி... இதற்கெல்லாம் வேட்டு வைக்கிறார். 'ஐந்தாயிரம் கொடு, பத்தாயிரம் கொடு’ என்று வாங்க ஆரம்பித்து, இப்போது, தொழில் தொடங்க லட்சத்தில் பணம் கேட்க... நான் சேமித்த பணம், என் நகைகள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டார் என்னவர். இவருடைய தம்பியிடம் சொந்த வீடு, நகைகள், சேமிப்பு என அத்தனையும் பத்திரமாக இருக்கின்றன. ஆனால், சொந்தவீடுகூட இல்லாத எங்களிடம் பணம் பறிக்கிறார். இந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னாலும்... 'அவன் என் தம்பி... இதில் நீ தலையிடாதே’ என்கிறார் கடுப்பாக.

'தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும்' என்பதை எப்படி புரிய வைப்பேன்?''

வாசகிகள் ரியாக்ஷன்...

எடு, புதியதோர் ஆயுதத்தை!

உங்கள் குடும்பப் படகை கவிழ்க்க நினைக்கும் கணவரின் தம்பிக்கு பதிலடி கொடுக்க... கணவரின் மனதை மாற்ற... ஒரு புதிய ஆயுதத்தை நீங்கள் கையில் எடுப்பதுதான் சரியானதாக இருக்கும். பொய் சொல்லக் கூடாதுதான் என்றாலும், சிக்கலில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. நீங்களும் உங்கள் குடும்பத்தார் கஷ்டத்தில் இருப்பதாகவும், அதற்கு கொஞ்சம் பண உதவி செய்யுமாறும் கணவரிடம் கேளுங்கள். உங்கள் தம்பி, தங்கை என்று யாரையாவது விட்டு உருக்கமாக பேசச் சொல்லுங்கள். இது உண்மை என்று அவர் நம்பும் அளவுக்கு இருப்பது முக்கியம். 'தம்பிக்கு கொடுக்கும்போது... இவர்களுக்கும் கொடுக்கத்தான் வேண்டும்' என்கிற நிலையை உருவாக்குங்கள். இரண்டு பக்கமும் சமாளிக்க முடியாமல் தவிக்கும்போது, நிச்சயமாக விழித்துக் கொண்டுவிடுவார். 'நம் குடும்பமே நமக்கு கதி' என்று நிச்சயமாக மாறிவிடுவார்!

- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்

திசை திருப்புங்கள்... கரை தென்படும்!

ப்படிப்பட்ட 'பாசமலர்'களிடம்... முரட்டுத்தனம் செல்லுபடியாகாது. வீட்டில், இதற்கு முன்பு இருந்ததைவிட, இன்னும் கூடுதலாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள். சமையல் முதல்... குழந்தைகளின் டிரெஸ் வரை அனைத்திலும் மிகவும் எளிமை மற்றும் சிக்கனத்தைப் புகுத்துங்கள். கணவர் கேட்டால், ''ஏற்கெனவே சேமித்து வைத்ததெல்லாம் கொடுத்தாயிற்று... நாளை நமக்கென்று வீடும், குழந்தைகளின் எதிர்கால தேவையும் நிறையவே இருக்கிறது. சிறுதுளி பெருவெள்ளம்... அதனால்தான் இந்த சிக்கனம்'' என்று நாசூக்காக சொல்லுங்கள். அடுத்த கட்டமாக... ''வீட்டிலேயே ஊறுகாய், தையல், எம்ப்ராய்டரி, டியூஷன் என்று சிலருடன் சேர்ந்து சுயதொழில் செய்யப் போகிறேன். அதற்கு பணம் தேவைப்படுகிறது கொடுங்கள். எல்லாம் நாளைக்கு நம்மளோட பிள்ளைகளுக்காகத்தான்’ என்று உரக்கச் சொல்லுங்கள். இப்படியெல்லாம் திசை திருப்பினால்தான், படகு கரை சேரும்!

- பி.பத்மா, கோயம்புத்தூர்