Published:Updated:

என் டைரி - 305

நாற்பது வயதில் கல்யாண ஆசை!ரீடர்ஸ்

##~##

சதியான குடும்பம் என்னுடையது. வீட்டுக்கு செல்ல மகள் நான். படிப்பில் அதிக ஆர்வம். அது, கல்லூரிப் பருவத்தில் வெறியாக மாற, எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பேன். என் திறமைக்கான அங்கீகாரமாக அரசாங்க வேலையை நிர்ணயித்துக்கொண்டு, அதற்காகவே உழைக்க ஆரம்பித்தேன். திருமணம் பற்றி பெற்றோர் நச்சரிக்க, ''வேலைதான் எனக்கு வாழ்க்கை. திருமணம் வேண்டாம்'' என்று உறுதியாக மறுத்துவிட்டேன்.

ஒருவழியாக இலக்கை அடைந்து அரசாங்கப் பதவியில் அமர்ந்தபோது, என் வயது 34. அந்த அளவில்லா மகிழ்ச்சியில், திருமண வயதை நான் கடந்திருந்த விஷயம் என்னை பாதிக்கவில்லை. ''கல்யாணம்தான் வாழ்க்கையா... நல்ல வேலை, சம்பளம், பதவி உயர்வு என்று சமூகத்தில் நமக்கான அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளலாம்'' என்று எனக்குச் சொல்லிக்கொண்ட சமாதானத்தையே, குடும்பத்தினருக்கும் சொன்னேன். கெஞ்சி, மிரட்டி, அழுது ஓய்ந்த அவர்கள், ''உன் வாழ்க்கை, உன் பாடு'' என்று ஒரு கட்டத்தில் விட்டுவிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் டைரி - 305

இப்போது 40 வயதின் அருகில் இருக்கிறேன். இதுவரை எந்த ஆணிடமும் வராத ஈர்ப்பை, முதல் முறையாக ஓர் ஆணிடம் உணர்கிறேன். உடன் வேலை பார்ப்பவர். என்னைவிட 6 வயது மூத்தவர். அவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாகி, நிறைய பகிர்ந்துகொள்கிறோம். 85% பதவி உயர்வுக் கான மேல் படிப்பை பற்றிதான். இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதால்,  'இவரை வாழ்க்கைத் துணை ஆக்கிக்கொண்டால் என்ன’ என்று யோசிக்கிறது என் மனம். 'நாளைக்கு நம்மை பார்த்துக்க ஒரு குழந்தை வேணும்’ என்று இதுவரை இல்லாத எண்ணமெல்லாம் இப்போது வந்து என்னை தொந்தரவு செய்கிறது.

40 வயதில் எனக்கு வந்திருக்கும் இந்த ஆசையை வீட்டினரிடம் எப்படிச் சொல்ல என்று என் மனம் தவிக்கிறது. இன்னொரு பக்கம், அந்த நண்பரிடமும் சொல்ல முடியவில்லை. ''அப்படி ஒரு நினைப்பெல்லாம் எனக்கு இல்லையே...'' என்று அவர் சொல்லிவிட்டால், அந்த அவமானத்தை எப்படி எதிர்கொள்வது என்கிற அச்சம்தான் காரணம்.

''இது காதல் இல்ல. ஏன்னா, இப்போ முக்கால்வாசி நேரம் மேல் படிப்பை பற்றியே பேசுற நீங்க ரெண்டு பேரும் கணவன் - மனைவி பந்தத்துல நுழைந்து, அதோட மற்ற எல்லா சுக துக்கங்களையும் சேர்ந்து சந்திச்சு கரையேறிடுவீங்களானு யோசிச் சுக்கோ'' என்று எச்சரிக்கிறாள் என் தோழி.

மொத்தத்தில் ஏகத்துக்கும் குழம்பித் தவிக்கிறேன் தோழிகளே. எனக்கு ஒரு பாதையைக் காட்டி, என் எதிர்காலம் சிறக்க உதவுங்களேன்!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 305

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 304ன் சுருக்கம்

''பெற்றோரைப் பறிகொடுத்த என்னை, சித்திதான் வளர்த்து திருமணம் செய்து வைத்தார். இது, உறவுகள் மீதான நம்பிக்கையை எனக்கு வளர்த்தெடுத்தது. ஆனால், 'உறவுகள் இல்லாமலிருப்பதே நல்லது' என்று இப்போது தோன்றுகிறது.

வெறும் டிப்ளமா மட்டுமே படித்திருக்கும் கணவருக்கு சாதாரண வேலைதான். ஆனால், நாத்தனார்களோ... மெத்தப் படித்த பேராசிரியைகள். தாத்தாவின் சொத்துக்கள் அனைத்தும் என் கணவர் பெயரில் இருக்க... அதற்காக ஆசைப்பட்டு, மாமியாரும் நாத்தனார்களும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. எட்டு ஆண்டாகியும் எனக்குக் குழந்தை இல்லை. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எனக்கும் கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தி எங்களைப் பிரித்தனர். சில மாதங்களுக்கு பிறகு எதார்த்தமாக சந்தித்தபோது, மனம்விட்டுப் பேசி ஒன்று சேர்ந்தோம். அதனால், 'சொத்தில் பங்கு கிடையாது' என்று அவருடைய வீட்டினர் மிரட்டியதோடு, தாலியைக்கூட கழற்றிக் கொடுக்கச் சொல்லி கேட்க... அப்படியே செய்துவிட்டு, 'உறவே வேண்டாம்' என்று விலகி நிற்கிறோம். எங்கள் சொத்துக்களை சட்டப்படி மீட்க வழி சொல்லுங்கள் தோழிகளே!

வாசகி ரியாக்ஷன்

நீதி ஜெயிக்கும்!                                                                                                                         பரிசு:

என் டைரி - 305

100

சொத்து உன் கணவர் பெயரில் இருப்பதால்... உன்னுடைய மாமியாரோ, நாத்தனார்களோ ஒன்றும் செய்துவிட முடியாது. முதலில் நீங்கள் இருவரும் நல்ல மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள். வெகுவிரைவில் உனக்கு தாயாகும் பாக்கியம் கிட்ட வாழ்த்துக்கள். அதன்பிறகு நல்ல வக்கீலிடம் பிரச்னையை ஒப்படையுங்கள். கூடவே, பாதுகாப்புக்காக போலீஸிலும் புகார் செய்யுங்கள். நிச்சயம் நீதி ஜெயிக்கும்! 

என் டைரி - 305

பேரனுக்கே சொந்தம்!

இந்தத் தோழியின் பிரச்னை பற்றி, சென்னையிலிருக்கும் மாவட்ட முன்னாள் நீதிபதி எஸ்.பூதநாதனிடம் சொன்னபோது... ''சொத்துக்களைப் பொறுத்தவரை, தாத்தாவின் சுயசம்பாத்தியத்தில் பெற்றதாக இருக்கும்பட்சத்தில், அவர் அதையெல்லாம் பேரனுக்கு எழுதி வைத்துவிட்டார் என்றால், அதற்கு அடையாளமாக செட்டில்மென்ட் அல்லது உயில் கண்டிப்பாக இருக்கும். இவ்வாறு எழுதப்பட்டிருந்தால், அவை சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று இதுவரை எந்த நீதிமன்றத்திலும் அறிவிக்கப்படவில்லை என்றால்... யார் பெயருக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறதோ... அவர் மட்டுமே அதற்கு முழு உரிமையாளர் ஆவார். குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட எவரும் உரிமை கோர இயலாது. வேறு எவரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உரிமையியல் நீதிமன்றத்தில் விளம்புகை (அறிவித்தல்) வழக்குத் தொடுக்கலாம். ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு உறுத்துக் கட்டளை (Mandatory Injunction for Eviction)கோரலாம். இதுவரை அந்த சொத்தை அனுபவித்ததற்காக, அவர்களிடம் இருந்து வாடகையும் கோரிப் பெற சட்டத்தில் இடம் உண்டு. யாரேனும் அச்சொத்தில் நுழைய முற்பட்டால், அதைத் தடுப்பதற்கு நிரந்தர உறுத்துக் கட்டளையும் (Permanent Injunction)  கோரி பெறலாம்'' என்று வழிகாட்டினார்!

- சு.பாரதி, அரும்பாக்கம்