மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 251

பணம் பறிக்கும் உறவுகள்... பறிபோகும் நிம்மதி !

 வாசகிகள் பக்கம்

என் டைரி - 251

தன் குடும்பத் தேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், நானும் என் கணவரும் எங்கள் சம்பாத்தியத்தில் அவருடைய அப்பா, அம்மாவை மட்டுமல்லாது... மூன்று தங்கைகளையும் தாங்க முடியாமல் தாங்க ஆரம்பித்தோம். தற்போது, அதுவே பெரும்பாரமாக எங்களை அழுத்த... மீள வழியில்லாமல் மூழ்குகிறோம்!

பெற்றோர் மற்றும் மூன்று தங்கைளை கடந்த இருபது ஆண்டுகளாக தன் முதுகில் சுமந்து, தனக்கென சல்லிக்காசுகூட சேர்க்காதவர் அவர். எங்களுக்குத் திருமணமானபோது, மூன்று நாத்தனார்களுமே டீன் ஏஜ் பெண்கள்தான். தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நானும் அவரும் சேர்ந்துதான், அவர்களைப் படிக்க வைத்தோம். என் நகைகளைப் போட்டே, சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து இரு நாத்தனார்களுக்கும் மணமுடித்தார் என் மாமியார். ''மாப்பிள்ளைகளுக்கு சாதாரண வேலைதான். தங்கச்சிங்களை நீதான் பார்த்துக்கணும்’ என்று என் கணவரிடம் சத்தியப்பிரமாணம் செய்யாத குறையாக வாக்கு வாங்கிவிட்டார் மாமனார். அதிலிருந்து இன்று வரை சம்பளம் வாங்கிய கையோடு, மாமனார் வீடு, இரண்டு நாத்தனார் வீடுகளுக்கும் பங்கிட்டு அனுப்புவதுதான் முதல் வேலையாக வைத்திருக்கிறார்.

 

##~##

இது எதற்குமே நான் எதிர்ப்பு தெரிவிக்காமல்தான் இருந்தேன். ஆனால், அவருடைய உறவுகள் எங்களை ஏ.டி.எம். மெஷினாகவே பாவிக்க ஆரம்பித்து நெருக்கடி கொடுப்பதையே வேலையாக வைத்திருப்பதுதான் வேதனையைக் கூட்டுகிறது. ஏதாவது காரணத்தால், பணம் அனுப்ப ஒரு நாள் தாமதமானாலும், உடனே போன் போட்டு ஆளாளுக்கு சண்டை பிடிக்கிறார்கள். கடைசித் தங்கையை பிஹெச்.டி. வரை படிக்க வைத்தார். அவளோ, ''நான் ஒருவரை விரும்புறேன். என் கல்யாணத்துக்கு என்ன செய்யணுமோ... அதை செஞ்சிடு'' என்று ஆர்டரே போடுகிறாள்.

மாமியார், மாமனாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் வேறு மென்னியைப் பிடிக்கின்றது. எங்களின் மொத்த சாம்பத்தியம் 50 ஆயிரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேல் அவருடைய உறவுகளின் குடும்பத்துக் காகவே செலவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே எங்களின் ஒரே டீன் ஏஜ் மகனின் படிப்புச் செலவு ஜெட் வேகத்தில் எகிற, கடனிலேயே காலம் ஓட்டுகிறோம் நாங்கள்.

இது எதையும் புரிந்து கொள்ளாமல், 'கடமை'யிலேயே கண்ணாக இருக்கிறார் கணவர். 'நமக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அதையும் நாம் பார்க்க வேண்டும்’ என்று அவருக்கு எப்படி நான் புரிய வைப்பது...? பணம் பறிக்கும் உறவுகளிடம் இருந்து எப்படி மீள்வது?

- ஊர், பெயர் வெளியிட

விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

 என் டைரி 250-ன் சுருக்கம்

என் டைரி - 251

''தாத்தா, பாட்டி, மாமனார், மச்சான்கள், நாத்த னார்கள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவள் நான். பெரியவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக காலமாகி விட, இன்று நான்கு சுவர்களுக்குள் தனிமைப்பட்டுக் கிடக்கிறேன். வேலை நிமித்தம் ஒவ்வொரு குடும்பமும் வேறு வேறு ஊர்களுக்கு குடி பெயர்ந்துவிட்டன. மும்பையில் செட்டிலாகி இருக்கும் ஒரே மகன், 'எங்ககூட வந்திருக்கங்கம்மா’ என்கிறான். ஆனால், என் இன்னொரு அம்மாவாக இருக்கும் வயோதிக மாமியாரை விட்டுச் செல்ல மனமில்லை. அவரையும் அழைத்து செல்லலாம் என்றால்... 'கடைசி காலத்துல இந்த வீட்டையும், ஊரையும் விட்டு வர முடியாதும்மா’ என்று பிடிவாதமாக மறுக்கிறார். இந்த நிலையில் நான் என்ன செய்வது?''

 என் டைரி 250-க்கான

வாசகிகளின் ரியாக்ஷன்...

 தவிடு பொடியாகும் தனிமை!

'தீதும் நன்றும் பிறர் தர வாரா’. நல்லவை, தீயவை நமக்கு நாமே உண்டாக்கி கொள்வதுதான். முதலில், 'தனிமை' என்கிற நினைப்பை தூக்கி எறியுங்கள். வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மாமியார்தான் முக்கியம். அவருக்குப் பிறகு மகனோடு செட்டில் ஆகலாம். உங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுங்கள். புது உறவு கிடைக்கும். பேரக் குழந்தைகளிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுங்கள். விடுமுறை நாட்களில் அவர்களை ஊருக்கு வரவழைத்து ஆசைதீர சமைத்துப் போடுங்கள். உங்களைப் போல் தனிமையில் உள்ளவர்களைச் சந்திப்பது, கோயிலுக்குச் செல்வது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவது என்று நேரத்தைச் செலவழி யுங்கள். தனிமை என்பது தானே தவிடு பொடியாகும்.

- ம.விஜிமகேஷ், வளநாடு

புத்துணர்ச்சி பிறக்கும்!

இன்றும் கிராமங்களில் அனைத்துச் சொந்தங்களும் ஒன்றுகூடி உறவை பலப்படுத் துவதற்காகத்தான் விழாக்களை நடத்துகின்றன. எனவே, விழா, பண்டிகை காலங்களில் உறவுகள் அனைவருக்கும் போன் செய்து வருடத்துக்கு ஒரு முறையோ... அல்லது இருமுறையோ உங்கள் ஊருக்கு வரவழையுங்கள். அந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு பாருங்கள்... அவர்கள், அடுத்த வருடம் இதே நாள் எப்போது வரும் என்று ஏங்கி, நாட்களை எண்ணி காத்துக் கொண்டிருப் பார்கள். நீங்களும் ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் கழிக்க ஆரம்பிப்பீர்கள்!

- தயாள செல்வி, சென்னை-92

இயந்திர மும்பை அவசியமா?

மும்பையில் இயந்திரத்தனமான வாழ்க்கை. மகன், மருமகள்... வேலைக்கும், குழந்தைகள்... பள்ளிக்கும் சென்ற பிறகு, மோட்டுவளையை பார்த்தபடி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பீர்கள்? இத்தனை காலமாக சொந்த ஊரில் சுதந்திரமாக குடித்தனம் செய்யும் உங்களுக்கும், தன் போக்கில் தனிக் குடித்தனம் செய்து வரும் உங்கள் மருமகளுக்கும் எந்த அளவுக்கு மனம் ஒன்றிப் போகும்?

கிராமத்து வீட்டு, திண்ணையில் அமர்ந்து அக்கம் பக்கத்தாருடன் பேசிச் சிரித்து, கூடத்தில் அமர்ந்து மாமியாருக்கு உணவு பரிமாறி... ஆஹா, அற்புதமான வாழ்க்கை அல்லவா! மும்பை சென்றுவிட்டால் இந்த சந்தோஷத்தை எல்லாம் துறக்க நேரிடுமே... நீங்கள் தயாரா?

- மிதிலா கண்ணன், சென்னை-42

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 251

100