கணவனின் சொத்துக்கள் கைக்கு வருமா?
##~## |
கணவரைப் பிரிந்து, பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவே வாழும் பெண்களின் பிரதிநிதியாக, நியாயம் வேண்டுகிறேன் நான்!
எனக்குத் திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின்போது எனக்கு வயது 20. இந்த சின்ன வயதிலேயே, கணவரின் சந்தேகப் புத்தி, வக்கிரப் பேச்சு இவற்றுக்கிடையே போராடி, வாழ்க்கையை சகித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன். ஆனால், ஒருகட்டத்தில், 'சாவதே மேல்' எனுமளவுக்கு அவர் ரணப்படுத்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், ஐந்து வயது மகனோடு அவரைப் பிரிந்துவிட்டேன்.
அவருடன் வாழ்ந்தபோதும் சரி, பிரிந்து வாழும்போதும் சரி... எனக்கோ, என் பையனுக்கோ எந்தச் செலவும் அவர் செய்ததில்லை. அரசு நிறுவனம் ஒன்றில் மிகக்குறைவான சம்பளத்தில் வேலையில் உள்ள நான், கஷ்டத்துக்கு நடுவேதான் மகனுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் கணவர் இறந்துபோனார். இறப்பதற்கு கடைசி ஒரு வாரம் மட்டும் அவருடன் இருந்து பணிவிடைகள் செய்தேன்.

கணவரின் சொத்துக்கள் பற்றி எப்போதும் எனக்கு எதுவும் தெரிந்ததில்லை. விதவையாக நிற்கும் என்னிடம், 'உன் வீட்டுக்காரர் சொத்தை கேட்டு வாங்கு...’ என்று வலியுறுத்தினார்கள் சிலர். மகனை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பின் சுமையோடு இருக்கும் எனக்கும், அந்த பொருளாதார பலம் தேவைப்பட்டது. ஆனால், அவர் இறந்த பிறகு, அவர் வங்கிக் கணக்கில் தன் அப்பாவை 'நாமினி’யாகப் போட்டிருந்ததால், மிகப்பெரிய தொகையை எனக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்ட மாமனார், சிறு தொகையைக்கூட தர முன்வரவில்லை. மாமனார், மாமியாரோடு நாத்தனார்களும் சேர்ந்துகொண்டு, என்னையும் என் மகனையும் அரவணைக்கும் எண்ணம் இன்றி, பழிவாங்கும் நோக்குடன் நடந்துகொள்கிறார்கள்.
கணவரின் கொடுமைகளை எல்லாம் சகித்து வாழ்ந்து, அவரை விட்டுப் பிரிந்து மிகுந்த கண்ணியத்துடன் வாழ்ந்து, சிரமத்தில் மகனை வளர்த்து, இப்போது 30 வயதில் விதவையாக நிற்கும் என்னை, பழிவாங்க இவர்களிடம் என்ன காரணம் இருக்கிறது? எனக்கும் என் மகனுக்கும் உரிய சொத்துக்களைப் பெற, போராடத் தயாராகி வருகிறேன். ஆனால், சட்டஉதவி பெற பொருளாதாரச் சூழல் இடம்கொடுக்க மறுக்கிறது.
அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று வழிகாட்டுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 318ன் சுருக்கம்
''படிப்பு, தோற்றத்தில் சுமார்தான். எம்.காம் முடித்ததும் சென்னை வந்த நான், நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறேன். அடுத்த வருடம் 30 வயதை தொடவிருக்கும் நிலையில், வரன் தேடல் ஆரம்பமானது. படிக்காதவர், கறுப்பானவர், கடை வைத்திருப்பவர், சூப்பர் மார்க்கெட் வைத்திருப்பவர் என்றே வரன்களாக வந்தன. இதில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தவே... 'எம்.காம் படித்திருக்கும் என்னை, படிக்காதவரை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்களே' என்று சண்டை போட்டேன். ஆனால், 'உன் மொகரைக்கு இவன் கிடைக்கிறதே பெரிய விஷயம்' என்று பெற்றோரே சொல்ல, நொறுங்கிக் கிடக்கிறேன்.

கடை வைத்திருப்பவர்களை, கறுப்பானவர்களை எல் லாம் இளக்காரமாக நினைக்கவில்லை. அதற்காக, என் னுடைய எதிர்பார்ப்புக்கு பொருந்தாத வரனை எப்படி ஏற்க முடியும். கசப்போடு ஒருவரின் கைபிடிப்பதைவிட, திரு மணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.
சரியா என்று சொல்லுங்கள் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
நினைப்பதெல்லாம்..!
கல்வி அறிவு, வளர்ச்சிக்கு பயன்படக்கூடியது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. எந்த பெற்றோரும் தன் பெண்ணை பாழும் கிணற்றில் தள்ளிவிட மாட்டார்கள். ஆகவே, திருமணமே செய்யாமல் இருந்துவிடு வேன் என்பது ஏற்கத்தக்கதல்ல. 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...’ என்ற பாடலை மனதில் கொண்டு, பெற்றோர் தேடும் வரனை ஏற்றுக்கொண்டு வாழ்க் கையை இன்பமாக அமைத்துக் கொள்வதே சிறப்பு.
- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர்
உன் வாழ்க்கை உன் கையில்!
படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளும் அல்ல. படிக் காதவர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல. எனவே, நீ உன்னு டைய முடிவை மாற்றிக்கொள். பெற்றோரே இப்படி சொல்லி விட்டார்களே என்று நொறுங்கிப் போகாதே! கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. உன் வாழ்க்கை, உன் கையில், உனக் கென்று ஒருவன் பிறந்திருக்கத்தான் செய்வான். அதற்காக நீ உன்னையே வதைத்துக் கொள்ளாதே. அதிகமாக படித்த வர்களைவிட நல்ல குணமும், அன்பும் படிக்காதவர்களிடமே காணப்படுகிறது. இதையெல்லாம் புரிந்து, உன் பெற்றோர் தேடிய வரன்களிலேயே நல்ல வரனாக தேர்ந்தெடு. வாழ்க் கையை ரசிக்கக் கற்றுக்கொள். வாழ்க்கை இதோடு முடிந்துவிடப் போவதில்லை.
- கீதா பால்பாண்டியன், ஈஞ்சம்பாக்கம்