தப்பாய் போன அப்பா... அதே வழியில் கணவன்!
காதல் திருமணம் செய்துகொண்டவள் நான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, இருவரிடையே எழுந்த எண்ணற்ற கருத்து வேறுபாடுகளால், காதல் காலாவதியாகிப் போய், நிர்க்கதியாக நிற்கிறேன்!
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். பொதுவாக புது மணப்பெண்கள் கை நிறைய வளையல், புதுப்புடவை, வகிட்டில் குங்குமம் என்று மணமான சில வாரங்களுக்கு மகிழ்ச்சியான மலர்ச்சியுடன் இருப்பார்களே... அப்படியான தோற்றத்தில்தான் செல்ல ஆரம்பித்தேன். ஆனால், 'வேலைக்குப் போறப்ப எதுக்கு இத்தனை அலங்காரம்..?’ என்று கணவரிடம் முதல் திரியைப் பற்ற வைத்தார்கள் மாமியாரும் நாத்தனாரும்.
'கம்மல் மட்டுமே போதும். வளையல், மோதிரம் என தங்க நகைகளை அணிந்து செல்லக்கூடாது' என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில், 'புதுப் புடவைகள் அணிந்து செல்லக் கூடாது' என்றொரு உத்தரவு. இயல்பில் 'கலகல’வெனப் பேசுபவள் நான். அதனால், 'அடிக்கடிச் சிரிக்கக்கூடாது, அதிர்ந்து பேசக்கூடாது' என்று தொடர்ந்து புதுப்புது தடை உத்தரவுகளாக அமல்படுத்திக்கொண்டே வந்தவர்கள், ஒரு கட்டத்தில் வேலைக்கே தடை போட்டார்கள். மாமியாரும், நாத்தனாரும் எதிர்பார்த்தது போலவே, காதல் தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு என்கிற பெரும் தூண் அட்டகாசமாக எழுந்து நின்று சிரிக்க ஆரம்பித்தது. கணவருடைய ஈகோவும் சேர்ந்துகொள்ள, டார்ச்சர் கொடுக்கவும் துவங்கிவிட்டார்.

அம்மாவை அனாதையாக விட்டுச்சென்ற அப்பா காரணமாக, ஏற்கெனவே ஆண்கள் பற்றி என் அடிமனதில் படிந்திருந்த கோபம், கணவரின் இத்தகைய செயல்களால் தலைக்கேறியது. 'துளியும் நிம்மதி இல்லாத, பரஸ்பர நம்பிக்கை இல்லாத, அன்பில்லாத, சுதந்திரம் இல்லாத என... எதுவுமே இல்லாத இந்த வாழ்க்கையை வாழ்வதைவிட, பிரிந்துவிடுவதே மேல்' என்று கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து விவாகரத்து வாங்கிய நான், இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு, 'நான் உண்டு... வேலை உண்டு' என்று வாழ்கிறேன் ஒரேயொரு குழந்தையுடன்.
இப்போது தனிமைத் துயர் வாட்டுகிறது. எனக்காக அன்பு செலுத்த, அழ, இன்ப - துன்பங்களில் பங்கெடுக்க யாருமே இல்லை என்பது ரணமாக உறுத்துகிறது. 'தகப்பன் இல்லை என்கிற வருத்தம், நம்மைப் போலவே குழந்தைக்கும் வந்துவிடக் கூடாது' என்று யோசிக்கும்போது, நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது.
என் நிலை அறிந்து, புரிந்து வாழ்க்கை கொடுக்கக்கூடிய ஒருவரைத் தேடலாம் என்று அவ்வப்போது யோசிக்கிறேன். ஆனால், 'புதிதாக வருபவரும் அப்பா, முன்னாள் கணவன் போலவே அமைந்துவிட்டால் என்ன செய்வது?' என்ற பயம் அந்த யோசனைகளுக்கு அணை போடுகிறது!
என்ன செய்யட்டும் தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 323ன் சுருக்கம்
''63 வயதான நான், ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர். மணமான நாள் முதலே மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமை. கணவரும் அவர்களை விட்டுக்கொடுக்காமல் என்னையே குற்றவாளியாக்கி புண்படுத்துவார். இதுபற்றி என் பிறந்த வீட்டார் கேட்டபோது, அசிங்கமாகத் திட்டி அவமானப்படுத்தியதால், அவர்கள் ஒதுங்கிவிட்டனர். குழந்தை பிறந்தாலாவது வாழ்வில் ஒரு பற்று கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால், அந்த பாக்கியமே எனக்கு வாய்க்கவில்லை. டாக்டரிடம் பரிசோதிக்கவோ, சிகிச்சைக்கோ என்னையும் அழைத்துப்போனதில்லை, அவரும் சென்றதில்லை. இதுபற்றி கேட்டால்... அடி, உதை! இதுமட்டுமல்ல... 60 வயதாகியும் என்மீது சந்தேகப்படுகிறார்.
எனவே, 'பொறுத்தது போதும்’ என்று விவாகரத்துக்கு துணிந்திருக்கிறேன். ஆனாலும், 'இந்த வயசுல கோர்ட், கேஸ் என்று அசிங்கப்படணுமா?’ என்று சராசரி பெண் புத்தி பின்னுக்கு இழுக்கிறது. என் பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்கள் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
அடங்கிப் போக வேண்டாம்!
குட்டக் குட்ட குனிந்தால்... வேதனைக்கு முடிவிருக்காது. ஓர் அரசு ஊழியராக இருந்த உங்களுக்கு வரும் ஓய்வூதியம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோபலத்தை நிச்சயம் உங்களுக்குத் தரும். எனவே, கணவருடைய அநியாய செயல்களுக்கு நீங்கள் அடங்கிப்போகத் தேவையில்லை. தவறை எதிர்த்து குரல் கொடுங்கள். இந்த வயதுக்கு மேல் விவாகரத்து என்பது தேவையில்லை. உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்துகாட்டுங்கள். ஓடுகிறவரைத்தான் நாய் துரத்தும். நின்று முறைத்துப் பாருங்கள், அடங்கிப் போகும். உங்கள் கணவரிடமும் இதே முறையைக் கையாளுங்கள்... வெற்றி உங்களுடையதாகட்டும்!
- வந்தினி, கோவை
டைவர்ஸ் தேவையில்லை!
சிலரது வாழ்க்கை ஏனோ கஷ்டத்தில் ஆரம்பித்து கஷ்டத்திலே முடிவடைகிறது. அதில் நீங்களும் ஒருவர். பிறவிக்குணத்தை மாற்ற முடியாமல் தோற்றுப்போய் நிற்கிறீர்கள். குழந்தை பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் கௌரவம் அவரைத் தடுத்திருக்கிறது. நீங்களாவது டெஸ்ட் செய்து கொண்டிருக்கலாம். இல்லையென்றால், டெஸ்ட் டியூப் பேபி போன்ற முறைகளையாவது முயற்சித்திருக்கலாம்.
மற்றபடி இத்தனை வயதுக்குப் பிறகு டைவர்ஸ் தேவையில்லாத ஒன்று. தனித்து வாழும் பணபலம், மனபலம் இருந்தால், நல்ல முதியோர் இல்லத்தை தேர்வு செய்து சேர்ந்துவிடுங்கள். அவருக்கு சொத்து இருக்குமானால், டைவர்ஸ் அப்ளை செய்தால் ஜீவனாம்ச தொகையும், சொத்தும் பெறலாம். இரண்டுமே நல்ல பலனை தரும். இனிவரும் காலங்களை அமைதியுடன் கழித்துவிட்டு செல்ல உதவும்.
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82

தாராளமாக விவாகரத்து வாங்கலாம்!
- ந.செல்லம் தமிழரசன், வழக்கறிஞர், சிவில் கோர்ட், திருச்சி:
''வயது 63 ஆவதால், யாரிடம் குறை இருக்கிறது என்கிற மருத்துவ ரீதி யிலான பரிசோதனையை இனி பார்க்க இயலாது. மற்றபடி இத்தனை வயதிலும் கணவரிடம் அடி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கணவரோ, அவர் குடும்பத்தினரோ உங்களைத் துன்புறுத்தினால்... பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம். மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் சமூக நலத்துறையின் சமூக நல அதிகாரியிடம் புகார் கொடுக்கலாம். முதலில் இருதரப்பையும் அழைத்து விசாரிப்பார்கள். கவுன்சலிங் கொடுத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்கள். முடியாதபட்சத்தில், புகாரை கோர்ட்டுக்கு பரிந்துரை செய்வார்கள். அங்கு நீங்கள் ஜீவனாம்சமோ, குடியிருக்கும் உரிமையோ, மருத்துவ செலவோ அல்லது நஷ்டஈடோ கேட்க லாம். கோர்ட்டு உத்தரவை போலீஸ் உதவி யுடன் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
சந்தேக கணவனின் இம்சைகளை இத் தனை ஆண்டுகாலமாக நீங்கள் பொறுத்துக்கொண்டிருப்பது... பெண்களுக்கே உரிய இயல்பாகும். ஆனால், அதைஎல்லாம் உதறிவிட்டு, தாராளமாக நீங்கள் விவாகரத்து பெறமுடியும்!''