Published:Updated:

என் டைரி - 333

திருந்தாத பிள்ளை... வருந்தாத நாளில்லை!

என் டைரி - 333

திருந்தாத பிள்ளை... வருந்தாத நாளில்லை!

Published:Updated:

ருப்படாத ஒரு மகனைப் பெற்ற அம்மா நான். அவனுக்கு 10 வயதிருக்கும்போது, என் கணவர் இறந்துவிட்டதால், அதிக செல்லம் கொடுத்து வளர்த்தேன். கணவர் விட்டுச்சென்ற துணிக்கடைதான் குடும்பத்துக்கு ஆதாரம். மகன் வளர வளர... பிடிவாதம், அகம்பாவம், ரவுடித்தனம் என்று ஊருக்கே பிடிக்காத பிள்ளையாகத்தான் வளர்ந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, குடியையும் பழகிக்கொண்டான். குடித்துவிட்டு தகராறுகள் இழுத்து வரும் அவனுக்காக, காவல்நிலையத்துக்கு அலைந்துகொண்டிருந்த வேளையில்தான், ஒரு பெண்ணைக் காதலிப்பதாக வந்து நின்றான்.

என் டைரி - 333

'திருமணமானால் திருந்திவிடுவான்' என்று கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தேன். திடீரென அவனே திருமணத்தை நிறுத்தினான். ஏதேதோ காரணம் சொன்னான். பின், தனக்குப் பொறுப்பு வந்துவிட்டதெனக் கூறி, தொழிலைப் பார்த்துக்கொள்வதாக அவன் சொல்ல... கடன் வாங்கி, வீட்டை அடமானம் வைத்து, துணிக்கடையைப் புதுப்பித்து, அவன் பெயரில் எழுதிக்கொடுத்தேன். அவனோ, கடையை கவனித் துக்கொள்ளாமல் கல்லாவில் காசு எடுத்து குடித்து, ஊர் சுற்றுவதிலேயே குறியாக இருந்தான்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான்' என்று மீண்டும் முயற்சித்த நான், உறவுக்காரப் பெண்ணை மணமுடித்து வைத்தேன். முதல் மூன்று மாதங்கள் வரை என் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு சமர்த்தாக இருந்தான். அதன்பிறகு, வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்துவிட்டது. குடித்துவிட்டு என்னையும் மருமகளையும் துன்புறுத்தினான். இன்னொரு பக்கம் கடன் அதிகமாகி துணிக்கடையும் கைவிட்டுப் போனது. வீடும் கடனில் மூழ்கியது.

வாடகை வீட்டில், வயிற்றுப் பாட்டுக்கே சிரமப்பட்ட போதும், குடியை நிறுத்தவில்லை. வேலைக்குச் சென்று பிழைப்பை ஓட்டிய என் மருமகளையும் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ய, ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் விவாகரத்து பெற்றுவிட்டாள். இதையடுத்து, ஏற்கெனவே திருமணம் நின்றுபோன அந்தப் பெண்ணோடு சிறிது நாட்கள் பழக்கமாக இருந்தான். அவளும் புறக்கணித்துவிட, இப்போது பெட்டிக்கடை வைத்து பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் என் உழைப் பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இந்நிலையில், புதிதாக ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணை தனியாக அழைத்து எச்சரித்தபோது, ''உங்கள் மகனை அளவுக்கதிகமாக நேசிக்கிறேன். அவரை நானே மாற்றுகிறேன்'’ என்று சினிமா வசனம் பேசினாள். இந்தப் பெண்ணை திருமணம் செய்துவைத்தால், திருந்திவிடுவதாக மகனும் சொல்கிறான். தாய் மனது இதற்கு ஆசைப்பட்டாலும், இந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடுமோ என்று பரிதவிக்கிறேன்.

என்ன செய்யட்டும் சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 332-ன் சுருக்கம்

''என் மகனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த பக்கத்து வீட்டுப் பெண் அவள். அப்பா இல்லாதவள். அவளுடைய அம்மா வெளிநாட்டில் இருக்கும் இன்னொரு மகளைப் பார்க்க போகும்போதெல்லாம் எங்கள் வீடுதான் அவளுக்கு கதி. திடீரென ஒருநாள் அவளைக் காதலிப்பதாகவும், அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றும் பதறினான் மகன். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் புரிந்துகொள்ளவில்லை. அவளோ, இவன் காதலித்ததை கண்டுகொள்ளாமல் வெளிநாட்டு மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொள்வேன் என்றாள். 'நீ செய்ற பிசினஸ்ல நான் நினைக்கிற சொகுசு வாழ்க்கை வாழ முடியாது’ என்றெல்லாம் பேசியவள், 'தூக்குல தொங்கு’ என்றும் வெறுப்பை அள்ளிக் கொட்டினாள். இதையடுத்து, தூக்கில் தொங்கியேவிட்டான் என் மகன். மகனின் நடவடிக்கைகளை சரிவர கவனிக்காமல், 26 வயதில் அவனை பலிகொடுத்துவிட்டோம். இந்த ஆறாத துயரத்தால், என் மகன் எடுத்த முடிவை நோக்கியே 52 வயதாகும் என் மனமும் செல்கிறது. என்ன செய்யட்டும் தோழிகளே?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 333

 100

ஆன்மிகத்தை நாடுங்கள்!

பல வருடங்கள் உங்கள் குடும்பத்துடன் பழகி... உதவியும், உபசரணையும் பெற்ற அந்தப் பெண், நன்றி மறந்தது மட்டுமல்லாமல், உதாசீனப்படுத்தி உங்கள் மகனைத் தற்கொலைக்கும் தூண்டியிருக்கிறாள். மகனை இழந்த உங்கள் சோகம் அளவிட முடியாதது. ஆனால், இதற்குத் தீர்வு தற்கொலை அல்ல. அறிந்தோ, அறியாமலோ செய்த பாவத்தால் புத்திரசோகத்தில் தவிக்கிறீர்கள். உங்கள் துக் கத்தை மாற்ற ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள். நல்ல நீதிநூல்களைப் படியுங்கள். மற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள்.. மனப்புண் தானாக ஆறும்.

- என்.ரங்கநாயகி, கோவை

சக மனிதர்களைப் படியுங்கள்!

உங்கள் துன்பத்துக்கு எப்படி ஆறுதல் கூறினாலும் அது உங்கள் மனத்தை சாந்தப்படுத்தாது. உங்கள் இழப்புக்கு யார் காரணம், எது காரணம் என்ற ஆராய்ச்சியும் இப்போது தேவையில்லாதது. ஆனால், நீங்கள் வாழும் இந்த நாட்கள் மிகவும் துன்பகரமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதாவது ஓர் அனாதை ஆசிரமத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ சென்று சிறிது நேரம் செலவிடுங்கள். நிறைய மனிதர்களிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது சக மனிதர்களின் துன்பங்களை அறிய உங்களுக்கு உதவும். நம்மைவிட கஷ்டப்படுபவர்களும் உலகில் உள்ளனர் என்ற உண்மையை உணர்த்தும்.

- அம்பிகா, சென்னை-60

தனிமையைத் தவிருங்கள்!

உங்களது இதய ரணத்தை ஆற்றும் வலிமை எந்த வார்த்தைகளுக்கும் இருக்க முடியாது; காலத்தால் மட்டுமே அது முடியும். நமது சக்திக்கு அப்பாற்பட்டுப்போன விஷயங்களை வினைப்பயன் என்று தேற்றிக்கொள்ள முயற்சிப்பதைத் தவிர வேறு வழியுமில்லை! எனவே, தனிமையைத் தவிருங்கள். மனமும் உடம்பும் தேறிவரும் நிலையில் நெருங்கியவர்களோடு புனித யாத்திரை மேற்கொள்ளுங்கள். உங்கள் மனம் அமைதிபெற வாழ்த்துக்கள்.

- கலைச்செல்வி வீரக்குமார், உறையூர்