மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 334

என் டைரி - 334

என் தோழி, கறுப்பாக இருப்பாள். இதனால் 27 வயதாகியும் வரன் தகையவில்லை. இந்நிலையில், திருமணத் தகவல் வெப்சைட்டில் பதிந்திருந்த அவளின் புகைப்படம் மற்றும் விவரங்களைப் பார்த்து, 'எங்களுக்கு உங்க பெண்ணைப் பிடிச்சிருக்கு, இரண்டொரு நாள்ல பொண்ணு பார்க்க வர்றோம்...’ என்று போன் வந்தது. இரண்டே நாளில் சொன்னபடி வந்தவர்கள், 20-ம் நாளிலேயே முகூர்த்தத்தை முடித்துவிடலாம் என்றனர்.

என் டைரி - 334

அவர்கள் காட்டிய அவசரம் காரணமாக, 'ஏதோ வில்லங்கம் இருக்குமோ?' என்கிற சந்தேகம் வந்தது தோழியின் பெற்றோருக்கு. இதற்குள் தோழியின் மொபைல் எண்ணை வாங்கிப் பேச ஆரம்பித்திருந்த மாப்பிள்ளை, ''உங்க வீட்டுல, உன்னைக் கல்யாணம் பண்ணி வெளியில அனுப்பறதுக்கு விரும்பல. உன் அம்மா, அப்பா, அக்கா, அண்ணாவை எல்லாம் பார்த்துக்க, உன்னை வீட்டோடவே வெச்சுக்கலாம்னு நினைக்கிறாங்க. அதனாலதான் இத்தனை வயசாகியும் உனக்குக் கல்யாணம் முடிக்கல. என்னைக்கூட ஏதேதோ சொல்லித் தட்டிக்கழிக்கப் பார்க்கிறாங்க'' என்றெல்லாம் மூளைச்சலவை செய்துவிட்டான். இதையெல்லாம் சொல்லி தோழி சண்டை போட, நொந்துபோன பெற்றோர், குறித்த முகூர்த்தத்திலேயே மணம் முடித்தனர்.

வரவேற்பு, மறுவீடு என்று சடங்குகளை எல்லாம் தவிர்த்துவிட்ட மாப்பிள்ளை வீட்டார், எங்களை அவர்கள் வீட்டுக்குப் பெயருக்குகூட அழைக்கவில்லை. பெண்ணையும் மாப்பிள்ளையையும் இங்கேயும் அனுப்பி வைக்கவில்லை. போன் தொடர்புக்கும் ஆயிரம் கண்காணிப்பு. மூன்று மாதங்கள் கழித்து ஒருவழியாக அவளை ஒரு கோயிலுக்கு வரச் செய்து சந்தித்தபோது, கொட்டித் தீர்த்து அவள் அழுதபோதுதான் தெரிந்தது... அவள் ஏமாந்து போன கதை!

தன்னை டபுள் டிகிரி என்று சொன்னவன், உண்மையில் படித்தது பத்தாவது வரை மட்டுமே. 32 வயது என்று சொல்லியிருந்தவனின் வயது 42. பான்மசாலா, சிகரெட், எந்நேரமும் குடி என அனைத்து கெட்ட பழக்கங்களும் உண்டு. ஒழுங்கான சம்பாத்தியமும் இல்லை. இவற்றை எல்லாம்விட, ஒரு பெண்ணைக் காதலித்து, கல்யாணம் வரை சென்றிருக்கிறது. இவனைப் பற்றிய உண்மையெல்லாம் தெரிந்து திருமணத்தைப் பாதியிலேயே அவள் நிறுத்திவிட, ''நீ போனா என்னடி, ஒரே மாசத்துல நான் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் முடிச்சுக் காட்டுறேன் பாரு'' என்று அவளுக்கு விட்ட சவாலுக்குப் பலியாகிப் போனாள் என் தோழி.

''எந்த சந்தோஷமும், நேர்மையும், அன்பும் இல்லாத இவன்கூட இன்னும் எதுக்குடி இருக்கே?'' என்று நான் பிறந்த வீட்டுக்கு அழைக்க, ''பெத்து வளர்த்த அப்பா, அம்மாவை நம்பாம அவங்க மேல பழிபோட்டு, பத்து நாள் போன்ல பேசினவனை நம்பி வந்த எனக்கு இந்த தண்டனை வேணும்தான். நான் வாழாவெட்டியா வந்து அவங்கள கஷ்டப்படுத்த மாட்டேன். இதுதான் என் விதி...'' என்று பிடிவாதமாகச் சென்றுவிட்டாள்.

தோழியை எப்படி மீட்க அந்தப் புதைகுழியில் இருந்து?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 334

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 333-ன் சுருக்கம்

''மகனுக்கு 10-வயது இருக்கும்போதே என் கணவர் இறந்ததால், அதிக செல்லம் கொடுத்து அவனை வளர்த்தேன். அடங்காத பிள்ளையாக வளர்ந்தவன், குடித்துவிட்டு தகராறு செய்வது, காவல்நிலையம் போவது என தீராத தலைவலியாகிப் போனான். இடையில் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக வந்து நிற்க, 'திருமணமானால் திருந்திவிடுவான்' என நான் சம்மதித்த வேளையில், திடீரென திருமணத்தை நிறுத்திவிட்டான். பிறகு, எங்களுக்கு ஜீவாதாரமாக கணவர் விட்டுச்சென்ற துணிக்கடையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டவன், பொறுப்பு வந்தவன் போல இருந்தான். ஆனால், நாளாக ஆக... பழையபடி குடித்துவிட்டு ஊர் சுற்ற ஆரம்பித்தான். அவனைத் திருத்துவதற்காக உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தேன். ஆனால், குடிக்கு அடிமையாகி அவளை இவன் துன்புறுத்த... விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டாள். துணிக்கடை கை விட்டுப்போனதோடு, வீடும் கடனில் மூழ்கிவிட்டது. இப்போது பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன். இதிலும் என் உழைப்பைச் சுரண்டுகிறான். ஒரு பெண்ணைக் காதலிப்பதாக வேறு சொல்கிறான். அந்தப் பெண்ணை எச்சரித்தபோது, அவள் அவனை மாற்றுவதாக சினிமா வசனம் பேசுகிறாள். தாய் மனம் ஆசைப்பட்டாலும், ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடுமோ என்று பரிதவிக்கிறேன்.''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வான்றுக்கும் பரிசு:

என் டைரி - 334

 100

 நிச்சயம் திருந்துவான்!

'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்ற பழமொழிக்கேற்ப, நிச்சயமாக உன் மகன் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவன் நேசிக்கும் பெண்ணின் மூலமாகவே அவனுக்கு அறிவுரைகளைச் சேர்க்க முயற்சி செய். வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தால்தான் குடும்பம் நடத்தமுடியும் என்பதையும் அவனிடம் எடுத்துரைக்கச் சொல். அவன் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு திருமணம் செய்து வை.

- எஸ்.பாரதி, அரும்பாக்கம்

துணிந்து முடிவெடுங்கள்!

உங்கள் மகன் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கட்டத்தில் நிற்கிறீர்கள். இந்த சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். 'நான் ஒரு வருடம் டைம் தருகிறேன். ஒழுங்காக ஒரு வேலைக்குப் போய் குடியை மறந்து வாழ்ந்தால், இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறேன். இல்லாவிட்டால், நீ என் பிள்ளையு மில்லை... நான் உன் தாயுமில்லை!’ கூறுங்கள். மீறினால், துணிந்து முடிவெடுங்கள்.

- மு.சுலைஹா, கீழக்கரை

முயற்சி திருவினையாக்கும்!

நீங்கள் கவலைப்படாமல் திருமணம் செய்துவைக்கலாம். அந்தப் பெண்ணே உத்தரவாதம் கொடுப்பதால், அவள் மீது நம்பிக்கை வையுங்கள். எதற்கும் தயங்காமல் இறைவன் மீது பாரத்தைப் போடுங்கள். பெண்ணால் முடியாதது எதுவுமில்லை. முயற்சி திருவினையாக்கும். பையனுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்றால் எதுவும், நன்றாகவே நடக்கும். வாழ்த்துகள் சகோதரி!

- ராஜி குருசுவாமி, ஆதம்பாக்கம்