Published:Updated:

என் டைரி - 335

கண்ணீரைத் துடைப்பதா... கல்யாண மாலை சூடுவதா..?

பிரீமியம் ஸ்டோரி

னியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் 27 வயது பெண் நான். வயதான பெற்றோர், ஒரு தங்கை அடங்கிய என் குடும்பத்துக்கு என் வருமானம்தான் ஆதாரம். எனவே, தங்கையின் திருமணம் முடிந்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தான் ஒருவரைக் காதலிப்பதாக தங்கை கூறினாள். அவர் நல்ல வேலையில் இருந்ததால், பெற்றோரைச் சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்.

என் டைரி - 335

ஆனால், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தாற்போல, 'மனவேறுபாடு காரணமாக திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்' என்று குண்டைத் தூக்கிப்போட்டாள் தங்கை. அவரை மறந்து புதுவாழ்க்கை வாழப்போவதாகவும் சபதம் எடுத்தாள்.

இந்தச் சமயத்தில், தங்கையைப் பெண் கேட்டு தூரத்து உறவினர் ஒருவர் வர, 'எனக்கு முதலில் திருமணம் நடந்தால்தான், அக்கா தன் திருமணத்துக்கு சம்மதிப்பாள்’ என்கிற எண்ணத்தில், அவரைத் திருமணம் செய்துகொண்டாள். ஒரு மாதத்துக்குள்ளாகவே குடும்ப நண்பர் ஒருவரின் மகனுக்கு என்னைப் பெண் கேட்டு வந்தனர். நான் மட்டும்தான் பெற்றோருக்குத் துணை என்றபோதிலும், அந்தக் குடும்பத்தினர் என் பெற்றோர் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்ததால், கல்யாணத்துக்கு சம்மதித்தேன். அடுத்த மாதமே மணநாள் குறிக்கப்பட, குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்திருந்த சமயம்... எங்கள் தலையில் இடி இறங்கியது.

ஒருநாள் நள்ளிரவில் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் தங்கை. பதறிப்போய்  விசாரித்தோம். என் தங்கையும் அவள் கணவரும் இயல்பாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில், 'இதற்கு முன் நீ யாரையாவது காதலித்தாயா..?’ என கேட்டிருக்கிறார். இவளும் நடந்ததைச் சொல்ல, செல்போனில் ரகசியமாக பதிவு செய்தவர், அதிலிருந்து தினமும் குடித்துவிட்டு வந்து இவளை தாறுமாறாகத் திட்டியிருக்கிறார். உச்சபட்சமாக, வீட்டை விட்டே துரத்தியும்விட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

தங்கையும், பெற்றோரும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், திருமண பந்தத்தில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால், திருமணத்தைத் தள்ளிப்போட மறுக்கிறார் என் மாப்பிள்ளை. தங்கையின் மனக்காயத்துக்கு மருந்து போடுவதற்காக, என் திருமணத்தைத் தள்ளிவைப்பதில் உறுதியாக இருப்பதா... அல்லது எனக்கும், என் பெற்றோருக்கும் ஆதரவுக் கரம் நீட்டும் நல்லவரை குறித்த நாளில் கைபிடிப்பதா என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேன்.

எனக்கு நல்வழி காட்டுங்கள் தோழிகளே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 335

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 334-ன் சுருக்கம்

''என் தோழிக்கு கல்யாண வயது கடந்து, ஆண்டுகள் சில உருண்ட நிலையிலும் வரன் கிடைக்கவில்லை. வெப்சைட்டில் அவளுடைய புகைப்படம், விவரம் பார்த்து, இரண்டே நாட்களில் பெண் பார்க்க வந்தவர்கள், '20-ம் நாளில் முகூர்த்தம் முடிக்கலாம்' என்று கூறிச் சென்றனர். இந்த அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்திய சூழலில், தோழியின் மொபைல் எண்ணுக்கு அழைத்த மாப்பிள்ளை, அவளை மூளைச்சலவை செய்து, குறித்த முகூர்த்தத்தில் கைபிடித்துவிட்டான். மூன்று மாதம் கழித்துத் தோழியைக் கோயிலில் சந்தித்தபோதுதான் தெரிந்தது, அவள் ஏமாந்த கதை. டபுள் டிகிரி படித்ததாக சொன்னவன், படித்தது 10-ம் வகுப்பு மட்டுமே! எல்லா கெட்டப் பழக்கங்களும் வேறு அத்துப்படி. இவன் காதலித்த ஒரு பெண், இவனுடைய நடவடிக்கைகள் தெரிந்து, பாதியிலேயே திருமணத்தை நிறுத்தியிருக்கிறாள். 'ஒரே மாசத்துல கல்யாணம் முடிச்சி காட்டுறேன் பாரு’ என்று அவளிடம் விட்ட சவாலுக்கு, பலியாகியிருக்கிறாள் என் தோழி. 'பெத்து வளர்த்தவங்களை நம்பாம, கழுத்தை நீட்டின எனக்கு இந்த தண்டனை வேணும்' பிடிவாதமாகக் கிடக்கிறாள் தோழி. இந்தப் புதைகுழியில் இருந்து அவளை மீட்பது எப்படி?''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வான்றுக்கும் பரிசு:

என் டைரி - 335

 100

 விவாகரத்து வாங்கச் சொல்!

உன் தோழி அறியாமல் செய்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. வயது, படிப்பு, வேலை என்று எதுவுமே பொருத்தமில்லாத ஒருவனோடு ஏமாந்து வாழ வேண்டாம், வெளியே வரச்சொல். சட்டப்படி விவாகரத்து வாங்கிக்கொண்டு, வேறு ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்துகொள்ளச் சொல். கெட்டவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.

- சங்கீதா, சென்னை-78

அவளுக்குத் தேவை ஆறுதல்... தைரியம்!

தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தன்னைத் தானே வருத்திக்கொள்வது தவறான செயல். எத்தனை காலத்துக்கு பலிகடாவாக இருக்க முடியும்? முதலில், நடந்த விஷயங்களைத் தோழியின் வீட்டுக்குத் தெரிவியுங்கள். அவர்களுடன் சென்று தோழியை அழைத்து வந்து ஆறுதலும், தைரியமும் கொடுங்கள். உங்கள் தோழி புதைகுழியிலிருந்து மீண்டு, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்.

- டி.எஸ்.ரேவதி, தஞ்சாவூர்

துயரங்களைச் சுமப்பது தவறு!

'பெற்றோரை மதிக்காததோடு, அவர்கள்மீது வீண் பழியும் போட்டுவிட்டோமே’ என்கிற குற்ற உணர்வில் வாடுவதுடன், வாழாவெட்டியாகி அவர்களுக்கு பாரமாக இருக்கவும் விரும்பவில்லை உன் தோழி. இதற்காகவே இத்தகைய கொடூரனின் செயல்களை தாங்கிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள் இங்கே நிறையவே இருக்கின்றனர். இவரைப் போன்றோரை பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. வாழ வேண்டிய வயதில் துயரங்களைச் சுமக்க முடிவெடுப்பது பெரும் தவறு. பாசமிக்க பெற்றோரை நம்புங்கள்... அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

- பியானோ வால்ட்டர், விருகம்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு