Published:Updated:

`பேய்ப் பட வீடு; பாட்டி குடிசை; கஞ்சா லாரி!'- வேர்களால் பின்னிப் பிணைந்த சென்னை வீடுகள் #SpotVisit

சில நேரங்களில் சில மனிதர்களால் கைவிடப்படும் அவர்களுக்கு தேவையில்லாத பொருள்களைக்கூட இயற்கை அழகான பொருள்களாகத் தனக்கேற்ப மாற்றிவிடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு கலைஞன் மற்றவர்களிடமிருந்து வேறுபடும் புள்ளி, எல்லாவற்றையும் வேறொரு பரிமாணத்தில் பார்ப்பதுதான். கிழிந்து கிடக்கும் காலணிகள் நம் கவனத்தை ஈர்க்கப்போவதில்லை. அதே நேரம் அதே காலணிகள் ஓவியனின் தூரிகைகள் வழியாக ஓவியமாகும்போதோ, புகைப்படங்களாகப் பதிவு செய்யப்படும்போதோ பல்வேறு விஷயங்களைச் சொல்லும் கருவாக மாறுகிறது. இந்த வகையில் அன்றாடம் நம்மில் பலர் கடந்து சென்ற, கவனிக்காத வேர்கள் நிரம்பிய கட்டடங்கள் மற்றும் வாகனங்களை அலுவலகப் புகைப்படக் கலைஞர் வி. ஸ்ரீநிவாசுலு எதேச்சையாகப் பார்த்துள்ளார். அந்த இடங்களுக்கு சின்ன டிராவல் செய்து புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளோம்.

புகைப்படங்கள் சொல்லும் கதைகள் என்ன?

சென்னை தொழிலாளர்கள் சங்கம்
சென்னை தொழிலாளர்கள் சங்கம்

சென்னை அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு சில கி.மீ தூரங்களில் இருக்கும் பட்டாளம் பகுதியின் ஸ்ட்ராகன்ஸ் சாலையில் மாலை நேரத்தில் சென்றுகொண்டிருந்தோம். மரங்களுக்கு இடையில் தெரிந்த ஜன்னல்களைப் பார்த்து அதன் அருகில் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே அருகிலிருந்தவர்களிடம் பேசினோம். ``நொம்ப காலமா இப்படித்தான் இருக்கு. இந்தக் கட்டடம் தொடர்பா கோர்ட்ல வழக்கு நடந்துகிட்டு இருக்குனு சொல்றாங்க. நான் 25 வருஷத்துக்கும் மேல இங்கதான் இருக்கேன். இந்தக் கட்டடமும் இப்படித்தான் இருக்கு" என்று சிரிக்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர்.

அந்தக் கட்டடம் சென்னை தொழிலாளர்கள் சங்கக் கட்டடமாகச் செயல்பட்டு வந்துள்ளது. திவான் பகதூர்.ப.கேசவபிள்ளை என்பவரால் 1931-ம் ஆண்டு இந்தக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 90 வருடங்கள் பழைமையான இந்தக் கட்டடத்தை பல வருடங்களுக்கு முன்பு கைவிட்டுள்ளனர். ஸ்ட்ராகன்ஸ் சாலையின் நெருக்கமான கட்டடங்களுக்கு மத்தியில் இந்தக் கட்டடம் உள்ளது. இரண்டு மாடிகளுடன் இருக்கும் இந்தக் கட்டடத்தை ஆலமரத்தின் வேர்கள் பின்னி பிணைந்துள்ளன.

கரடிக்கு நிகழ்ந்ததே யானைக்கும் நிகழ்ந்தது... உலகை உலுக்கிய 3 புகைப்படங்கள்!

ஆலமரத்தின் உள்ளே கட்டப்பட்ட வீடுபோல வேர்கள் கட்டடத்தை மறைத்து கட்டியணைத்தபடி நிற்கிறது. அந்த வழியில் செல்பவர்கள் அனைவரையும் வேர்களுக்கும் கட்டடங்களுக்குமான பிணைப்பு ஒருநிமிடம் பிரம்மிப்பாகப் பார்க்க வைக்கிறது. ``பிறந்ததுல இருந்தே இந்தக் கட்டடம் இப்படித்தான் இருக்கு. பேய்ப்படம் எடுக்கலாம். உண்மையிலேயே பேய் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதுவரை அந்தப் பக்கமே போனதில்லை" என்று திகிலாகப் பேசுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொருவர்.

லாரி
லாரி

இதைத் தொடர்ந்து, வியாசர்பாடி பகுதிக்குச் சென்றோம். போதைப் பொருள் தடுப்புப் பிரிவின்கீழ் அரசாங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட லாரி ஒன்றை அப்பகுதியில் பார்த்தோம். வெகுநாள்களாக நின்றுகொண்டிருக்கும் அந்த லாரியைப் பிளந்தபடி வளர்ந்துநிற்கிறது மரங்கள். மூச்சுத் திணறியபடி வளர்ந்திருக்கும் மரங்கள் நிரம்பிய லாரியைப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ``அதிகாரிகள் எல்லா வண்டியையும் எங்க இடம் இருக்கோ அங்க வந்து போட்டுறாங்க. எவ்வளவோ சொல்லிட்டோம். அதிகாரிகள் கேக்கமாட்டேங்கிறாங்க. இவையெல்லாம் வளரும் மரத்துக்கும் கெடுதல். சுற்றுச்சூழலுக்கும் கெடுதல் எங்களுக்கும் கெடுதல்" என்று சலித்தபடி சொல்லி எங்களைக் கடந்து செல்கிறார்.

`இது வரலாறு காணாத பேரழிவு!' - கலங்கவைக்கும் ஆஸ்திரேலியக்  காட்டுத்தீயின் சாட்டிலைட் புகைப்படங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியே, குடிசைபோல வளைந்து நிற்கும் ஆலமரத்தின் வேர்களை எனக்குத் தெரியும் என்றபடியே, புகைப்படக்காரர் மின்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றார். குடிசையின் மேற்பகுதி வழியாகப் படர ஆரம்பித்த ஆலமரத்தின் வேர்கள் விரிந்து குடிசையை அப்படியே பற்றிக்கொண்டுள்ளது. அந்தக் குடிசை அழிந்த பின்னரும் வேர்கள் அந்த அடையாளத்தை அணைத்தபடி நிற்கிறது. இதைப் பற்றி அப்பகுதி மக்கள், ``பாட்டி ஒருவர் ரொம்பநாள் இங்கிருந்த குடிசையில் வாழ்ந்தாங்க. அதுக்கு பக்கத்துல ஆலமரமும் இருந்துச்சு. அந்தப் பாட்டி இறந்து பல வருஷம் ஆச்சு, குடிசையும் அப்படியே போச்சு. ஆனால், குடிசை இருந்த மாதியே ஆலமரத்தின் வேர்கள் நிற்குது பாருங்க" என்று கண்ணத்தில் கைவைத்தபடி கூறினார்.

குடிசையின் அடையாளத்தைக் காட்டியபடி நிற்கும் வேர்கள்
குடிசையின் அடையாளத்தைக் காட்டியபடி நிற்கும் வேர்கள்

சென்னையில் பழைமை வாய்ந்த மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இந்தக் கட்டடங்களின் மீது இயற்கை காட்டும் அன்பு மற்றவர்களின் கவனத்தை அந்தக் கட்டடங்களை நோக்கி திரும்ப வைக்கிறது. சில நேரங்களில் சில மனிதர்களால் கைவிடப்படும் அவர்களுக்குத் தேவையில்லாத பொருள்களைக்கூட இயற்கை அழகான பொருள்களாகத் தனக்கேற்ப மாற்றிவிடுகிறது. அப்படியான இடங்கள்தான் இவை.

இதேபோல இயற்கை அரவணைத்துக்கொண்ட உங்களுக்கு தெரிந்த இடங்கள் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க!

`பேய்ப் பட வீடு; பாட்டி குடிசை; கஞ்சா லாரி!'- வேர்களால் பின்னிப் பிணைந்த சென்னை வீடுகள் #SpotVisit மேலும் விவரங்களுக்கு : http://bit.ly/38gwGfY

Posted by Vikatan EMagazine on Monday, March 2, 2020
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு