Published:Updated:

`50 நாள்களுக்குப் பிறகு ரிக்‌ஷா நண்பர்களுடன் இணைந்த காகம்!’ - புதுச்சேரி நெகிழ்ச்சி

புதுச்சேரி
புதுச்சேரி

ஊரடங்கால் தன்னைக் காப்பாற்றிய ரிக்‌ஷாக்கார நண்பர்களைப் பிரிந்த காகம், 50 நாள்களுக்குப் பிறகு திரும்பி வந்து அவர்களுடன் உணவருந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி, அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் வாடகைக்கு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள். அரவிந்தர் ஆசிரமத்துக்கு வரும் வெளிநாட்டினர் ரிக்‌ஷாவில் அமர்ந்து புதுச்சேரியின் வீதிகளை ரசிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், செல்வராஜும் அவரது நண்பர்களும் தினமும் காலை முதல் மாலை வரை அங்குதான் இருப்பார்கள். 5 வருடங்களுக்கு முன்பு இறக்கைகள் அடிபட்ட நிலையில் காகம் ஒன்று தரையில் தவழ்ந்துள்ளது. அந்தக் காகத்தை மீட்ட செல்வராஜும் அவரது நண்பர்களும் அதற்கு மருத்துவ உதவிகளைச் செய்து, காயங்களைக் குணப்படுத்தி மீண்டும் பறக்க விட்டார்கள். அன்றிலிருந்து அந்தக் காகம் அந்த நண்பர்களுள் ஒருவராக மாறியது.

ரிக்‌ஷா ஓட்டுநருடன் காகம்
ரிக்‌ஷா ஓட்டுநருடன் காகம்

அவர்களின் தோள் மற்றும் மடியில் அமர்ந்து அவர்கள் கொடுக்கும் உணவை கைகளிலிருந்தே எடுத்துச் சாப்பிடும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமானது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தனது ரிக்‌ஷாக்கார நண்பர்களை காணாமல் தவித்த காகம், உணவுக்காக வேறு இடத்திற்குச் சென்றது. இந்நிலையில் 50 நாள்களுக்குப் பிறகு அந்தக் காகம் திரும்பி வந்து அவர்களுடன் உணவருந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய செல்வராஜும் அவரது நண்பர்களும்,``அரவிந்தர் ஆசிரமத்துக்கிட்டதான் நாங்க ரிக்‌ஷா ஓட்டிக்கிட்டிருக்கோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்தக் காக்காவுக்கு றெக்கைல அடிப்பட்டு பறக்க முடியாம கெடந்துச்சி. அதை எடுத்து அதுக்கு வைத்தியம் பார்த்துப் பறக்க விட்டோம். ஆனால் அது எங்களைவிட்டுப் போகாம இங்கேயேதான் சுத்தி சுத்தி வந்துச்சி. அப்புறம் இங்க இருக்கற மரத்துலயே கூடு கட்டிக்கிச்சி. மூணு வேளையும் நாங்க சாப்பிடும்போது அதுவும் எங்ககூடவே சாப்பிடும். நாங்க குடுக்கற சாப்பாட்டை அதன் பிள்ளைகளுக்கும் எடுத்துட்டுப் போயி குடுக்கும். முட்டை, தோசை, மீன், ஐஸ்க்ரீம் இதுலாம் விரும்பிச் சாப்பிடும்.

ரிக்‌ஷா ஓட்டுநருடன் காகம்
ரிக்‌ஷா ஓட்டுநருடன் காகம்

எங்களையும், எங்க ரிக்‌ஷாவையும் விட்டு அது எங்கயும் போகாது. அதைப் பார்க்காமல் எங்களாலயும் இருக்க முடியாது. எங்களைப் பார்க்காமல் அதாலயும் இருக்க முடியாது. இந்த நேரத்துலதான் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு போட்டுட்டாங்க. வீட்டை விட்டும் வெளில வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்படியும் நான் போலீஸ்காரங்ககிட்ட சொல்லிட்டு காக்காவைப் பாக்க வந்தேன். ஆனால் இது இங்க இல்லைன்னதும் சாப்பிட்டுச்சோ இல்லையோனு எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சி. எங்களைப் பாத்துட்டா அது வரும்னு நினைச்சி, நானும் என் ஃப்ரண்ட்ஸும் மாறி மாறி வந்து பாத்தோம். ஆனால் அதைப் பாக்கவே முடியலை.

Vikatan

50 நாளைக்கு அப்புறம் நேத்துதான் அந்தக் காக்கா எங்கிட்ட வந்து ரிக்‌ஷாவுல உக்காந்துச்சி. அதப்பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சி. அதைப் பார்த்ததும் பசியில இருக்கறமாதிரி இருந்ததால சாப்பாடு குடுத்தேன். அதுவும் என் கையில இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்டுச்சி. குடுத்த தண்ணியும் குடிச்சுது. காக்கா திரும்ப வந்துடுச்சினு என் ஃப்ரண்ட்ஸுங்ககிட்டலாம் சொன்னதும் அவங்களும் சந்தோஷப்பட்டாங்க. கொரோனா பயத்தையெல்லாம் தாண்டி காக்கா திரும்பி வந்ததுல எங்களுக்கு ரொம்ப திருப்தியா நிம்மதியா ஆயிடுச்சி” என மகிழ்ச்சியுடன் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு