கைகளில் கிருமிகள் இருக்கும், அடிக்கடி கைகளைக் கழுவுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து விலகியிருக்க முடியும் என்பதை கொரோனா காலம் நமக்கெல்லாம் உணர்த்திவிட்டது. ஆனால், கைகளுக்கு இணையாக நம் முகத்திலும் பூச்சிகள் உயிர் வாழ்வது உங்களுக்கெல்லாம் தெரியுமா? முகத்தில் மற்றும் சருமத்தில் வாழும், கண்ணுக்குப் புலப்படாத எட்டுக் கால்களைக் கொண்ட இந்த நுண்ணுயிரியின் பெயர்தான், டெமோடெக்ஸ் (Demodex). இந்தப்பூச்சிகளின் உறைவிடமே மனித சருமத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள்தான். அந்தத் துவாரங்களில் தங்கிக் கொண்டு, முகத்தின் சருமத்தில் சுரக்கும் சீபம் எனப்படும் எண்ணெய்ப்பசை திரவத்தை உண்டு வாழும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம்முடைய சருமத்தில் சுமார் 1.5 லிருந்து 2.5 மில்லியன் பூச்சிகள் வரை இருக்குமாம். இத்தனை பூச்சிகள் இருந்தாலும், இவை மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. மனித சருமத்தில் இவை வாழ்வதால் நம் பெற்றோரிடமிருந்தும், நெருங்கிய உறவுகளிடமிருந்தும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.
இதன் ஆயுள்காலம் வெறும் 20 நாள்கள் மட்டுமே. இந்தக் குறுகிய காலத்தில் இவை கழிவுகளைக்கூட வெளியேற்றுவதில்லை. மேலும் எதிர்ப்பாலின பூச்சியை மற்றொரு துளையில் சந்தித்து, சந்ததியை உருவாக்க 24 முட்டைகள் வரை இடும். நீங்கள் என்னதான் பாடுபட்டு, முகத்தைத் தேய்த்துக் கழுவினாலும் இவை உங்கள் முகத்தைவிட்டுப் போவதில்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை.