Published:Updated:

`யாருக்காவது கல்யாணம் நடந்தால்தான் நல்ல சாப்பாடு!'- தொண்டு நிறுவன உதவியால் கலங்கிய குழந்தைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மஞ்சுளா குடும்பம்
மஞ்சுளா குடும்பம் ( எம்.விஜயகுமார் )

"ஒவ்வொரு நாளும் என் ஆயுளை எண்ணிகிட்டு இருக்கிறேன். என் குழந்தைகளின் நிலையை நினைக்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கு" - வறுமையும் நோய் கொடுமையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மஞ்சுளாவின் குடும்பம்...

'' அண்ணா... எங்களை யாரும் கடைக்குக் கூட்டிகிட்டுப்போய் எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. எங்க ஊரிலே யாருக்காவது கல்யாணம் நடந்தால்தான் நல்ல சாப்பாடு கிடைக்கும், எங்கம்மா வாங்கிட்டு வந்து எங்களுக்குக் ஊட்டி விடுவாங்க'' என்கிறார்கள் மஞ்சுளாவின் குழந்தைகள்.

மஞ்சுளா குடும்பம்
மஞ்சுளா குடும்பம்
எம்.விஜயகுமார்

''எனக்குப் பிறகு என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் யார் சோறு போடுவாங்க?'' - கலங்கும் மஞ்சுளா என்ற தலைப்பில் கடந்த 14-ம் தேதி விகடன் இணையதளத்தின் மூலமாக... ''ஒவ்வொரு நாளும் என் ஆயுளை எண்ணிகிட்டு இருக்கிறேன். என் குழந்தைகளின் நிலையை நினைக்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கு." - என்று வறுமையாலும் நோய்க் கொடுமையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி டு காக்காபாளையம் ரோட்டில் உள்ள ஸ்டாலின் நகரில் வசிக்கும் மஞ்சுளாவின் குடும்பக் கண்ணீர் கதையைப் பதிவிட்டு இருந்தோம்.

அதில் மஞ்சுளாவின் காதல் கணவர் கோபாலகண்ணன் சென்டரிங் வேலை செய்துகொண்டிருக்கும்போது பிளேவுட் அவர் தலையில் விழுந்து அடிபட்டு நரம்பு மண்டலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக இருப்பதையும், தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவால் உணவருந்த முடியாத நிலையில் டியூப் வழியாகக் கூழ் காய்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டைக்குள் இறக்கிவிட்டு தன்னுடைய ஆசை குழந்தைகளையும் கணவனையும் காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளைக் கூட்டிப் பெருக்கி, கழிவறையைச் சுத்தம் செய்து அதில் கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்து ஒவ்வொரு நாளும் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருப்பதையும், இவர்களுடைய 9 வயது மகள் சாதனாவும், 7 வயது மகன் ரோகித்தின் சோகம் சூழ்ந்த நிலைமையையும், 'மகள் சாதனாவுக்கு அடிக்கடி வலிப்பு வந்து கீழே விழுகிறார்.

சாதனா
சாதனா
எம்.விஜயகுமார்

அவளைத் தூக்கிவிடவோ, மருத்துவமனைக்குக் கூட்டிப் போகவோகூட ஆள் இல்லை' என்ற மஞ்சுளாவின் இயலாமையான நிலைமையையும் தெரிவித்தோம். அதையடுத்து மஞ்சுளாவின் குடும்பத்துக்கு பலரும் உதவ முன் வந்திருக்கிறார்கள்.

இதுபற்றி கரூர் இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, ''இத்தகவல் முதன்முதலில் விகடன் தளத்தில் வந்ததும் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு அக்குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம். மஞ்சுளாவின் வீட்டுக்குள் நுழையும்போது அவரின் குழந்தை ரோகித் சாப்பிடாமல் அழுது அடம்பிடித்துக் கொண்டிருந்தான். விசாரித்தபோது மஞ்சுளா சாப்பிட சொல்லுவதாகவும், சாப்பாட்டில் துர்நாற்றம் வீசுவதால் சாப்பிட மறுத்து குழந்தை அழுதுகொண்டிருப்பதும் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தச் சாப்பாட்டைப் பார்த்தோம். நிச்சயம் யாராலும் அந்தச் சாப்பாடு சாப்பிட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசியது. முதல் கட்டமாகக் குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக ஹோட்டலுக்கு கூட்டிகிட்டுப் போய் அவர்கள் விரும்பிய பிரியாணியை வாங்கிக் கொடுத்தோம். குழந்தைகள் சாப்பிட்டு விட்டு, ' அண்ணா... எங்களை யாரும் கடைக்குக் கூட்டிகிட்டுப் போய் எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. எங்க ஊரிலே யாருக்காவது கல்யாணம் நடந்தால்தான் நல்ல சாப்பாடு கிடைக்கும். எங்கம்மா வாங்கிகிட்டு வந்து எங்களுக்கு ஊட்டி விடுவாங்க' என்றார்கள்.

உதவிகள்
உதவிகள்
எம். விஜயகுமார்

அதையடுத்து முதல் கட்டமாக அந்தக் குடும்பத்துக்கு 6 மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, மிளகாய், உப்பு என மளிகைச் செலவு 12,000-க்கு வாங்கிக் கொடுத்தோம். அதன் பிறகு மகள் சாதனாவுக்கு சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்தோம். பரிசோதனை செய்த மருத்துவர், ''மூளையில் சுருக்கம் இருப்பதால் வலிப்பு வருகிறது.

நல்லவேளை சரியான நேரத்தில் கூட்டி வந்துவிட்டீர்கள். இதை மருந்து, மாத்திரையிலேயே குணப்படுத்த முடியும். இதைக் கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் மனநலம் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது' என்றார். அதையடுத்து சாதனாவுக்கு நல்ல சிகிச்சை கொடுக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனை
எம். விஜயகுமார்

மஞ்சுளா தொண்டை புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா வாழ் இந்தியர் உணவு முறையில் சிகிச்சை கொடுப்பதற்காக உணவுகளை அனுப்புவதாகத் தெரிவித்து இருக்கிறார். மேலும், மஞ்சுளாவின் கணவர் கோபாலகண்ணனுக்கும் சிகிச்சை கொடுக்க இருக்கிறோம். இந்தக் குடும்பத்தின் நிலையை வெளி உலகத்திற்குக் காட்டிய விகடனுக்கு நன்றி. நீங்கள் தெரிவிக்காமல் இக்குடும்பம் பரிதாபமான நிலையிலேயே இருந்திருக்கும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு