Published:Updated:

Kumki Elephant Story: குட்டைக் கொம்பனைத் தேடும் கும்கி கலீம்! | Operation 100

ஆபரேஷன் 100

இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே கலீமால் யானை ஆப்ரேஷனில் ஈடுபடமுடியும் என்பதால், சின்னதம்பியை கலீம் போல உருவாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Kumki Elephant Story: குட்டைக் கொம்பனைத் தேடும் கும்கி கலீம்! | Operation 100

இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே கலீமால் யானை ஆப்ரேஷனில் ஈடுபடமுடியும் என்பதால், சின்னதம்பியை கலீம் போல உருவாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Published:Updated:
ஆபரேஷன் 100

மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, சிறுமலை, வத்தலகுண்டு, நத்தம் பகுதிகளில் யானைகள் மிகுந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில் பயணிக்கும் ஒருவர் யானையைப் பார்க்காமல் பயணத்தை முடிக்க முடியாது. யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் இந்தப் வனப்பகுதிகளில் சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகம் வசிக்கின்றன. கோடைகாலங்களில் வறட்சி, தண்ணீர் தட்டுபாடு ஆகிய காரணங்களால் மலையடிவாரங்களில் உள்ள விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அப்போது நிகழும் விலங்கு-மனித எதிர்கொள்ளல் மனிதர்கள், விலங்குகள் என இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

கோம்பை
கோம்பை

திண்டுக்கல் மாவட்டத்தின் மலையடிவாரப் பகுதிகளில் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருந்த இந்த விலங்கு-மனித எதிர்கொள்ளல், சமீப காலங்களில் தொடர்கதையாகி இருக்கிறது. கன்னிவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணைப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் தொந்தரவு எல்லைமீறிக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யானை தாக்கி 3 உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த மாதம் கோம்பை அருகே சுற்றித்திரிந்த யானைகளை வனப்பாதுகாவலர் சுந்தரம் விரட்டியபோது யானையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இன்னொரு உயிர் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கில், அப்பகுதியில் உலவும் குட்டை கொம்பன் யானைகளை விரட்ட பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம், சின்னதம்பி என்ற இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கும்கிகளில் ராஜாவான கலீம் இதுவரை 99 ஆபரேஷன்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அட்டகாசம் செய்யும் யானைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் கில்லாடி எனப் பெயர் பெற்ற கலீம், தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அடங்காத யானைகளை விரட்டவும், பிடிக்கவும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. 57 வயதாகும் கலீமுக்கு இது 100-வது ஆபரேஷன். ஒருகாலத்தில் விளைநிலங்களைச் சேதப்படுத்துவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்த சின்னத்தம்பியோ, இன்று விளைநிலங்களைச் சேதப்படுத்தும் யானைகளை அடக்கும் கும்கியாக உருவெடுத்திருக்கிறது; சின்னத்தம்பிக்கு இது முதல் ஆபரேஷன்!

யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்

பெரும் போராட்டத்துக்குப் பிறகு கோவையில் 2019-ல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, டாப்சிலிப்பில் விடப்பட்டது. பிறகு அங்கிருந்து வனத்திற்குள் விடப்பட்ட சின்னதம்பி, மீண்டும் அதன் சேட்டையைத் தொடங்கியதால் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டு மீண்டும் டாப்சிலிப்புக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கும்கி ஆவதற்கான முறையான கூண்டு மற்றும் வெளிப்பயிற்சிகள் சின்னத்தம்பிக்கு வழங்கப்பட்டன. ஆப்ரேஷன் நடக்கும்போது சண்டை போட வேண்டிய சூழல் அதிகம் உண்டு என்பதால், ஆபரேஷனில் கலீம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைச் சின்னதம்பி பார்த்துக் கற்றுக்கொள்ள சின்னத்தம்பி இப்போது கன்னிவாடி ஆபரேஷனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறது. பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு கும்கியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், கன்னிவாடி ஆபரேஷனில் கலீமுக்குத் துணையாக தன்னுடைய முதல் ஆபரேஷனில் களமிறங்குகிறது. இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே கலீமால் யானை ஆப்ரேஷனில் ஈடுபடமுடியும் என்பதால், சின்னதம்பியை கலீம் போல உருவாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குட்டை கொம்பன் மற்றும் அதனுடன் சுற்றும் யானைகள் கும்கிகளின் வாசனையைப் பிடித்து கும்கி முகாம் பகுதிக்கு வர வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வந்தால் முகாம் பகுதியில் வைத்தே குட்டை கொம்பனைப் பிடித்துவிடலாம் என்பதால், கன்னிவாடி மலையடிவாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்ட இடங்களுக்குக் கலீமும், சின்னதம்பியும் அழைத்துவரப்பட்டன. இந்தப் பின்னணியில் சமீபத்திய நிகழ்வாக, குட்டை கொம்பன் மலையிலிருந்து இறங்கி வீடு ஒன்றின் பின்பகுதியை உடைத்து அரிசி, உப்பு, புளியைத் தின்றுவிட்டு அருகே உள்ள விளைநிலத்தில் நின்றுகொண்டிருந்தது. அந்த வீட்டினுள் தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். யானை மட்டும் வீட்டின் முன்பகுதியில் நுழைந்திருந்தால் 4 பேரும் பலியாகி இருப்பார்கள். அவர்கள் கட்டிலுக்கு அடியே பதுங்கிக்கொண்டு வனத்துறைக்குப் போன் மூலம் தகவல் தெரிவித்திருக்கின்றனர். வனத்துறை சம்பவ இடத்துக்கு விரைவதற்குள் குட்டை கொம்பன் சோலார் வேலியை உடைத்துகொண்டு தப்பிவிட்டிருக்கிறது. தற்போது 8 யானைகளுடன் குட்டை கொம்பன் உலவிக் கொண்டிருப்பதாக வனத்துறை கூறுகிறது. மே 1-ம் தேதி வரவழைக்கப்பட்ட கும்கிகள் கன்னிவாடி அருகே கோம்பையில் உள்ள முத்துபாண்டி கோயில் பகுதியில் முகாம் அமைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்குதொடர்ச்சி ஆடலூர், பன்றிமலை. கே.சி.பட்டி, பாச்சலூர், பள்ளத்து கால்வாய், தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, அண்ணாநகர் உட்பட 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் விவசாய பகுதிகளிலும் தொடர்ந்து பல குழுக்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.

கும்கி
கும்கி

கே.சி.பட்டி பகுதியில் 9 யானைகள் சுற்றி வந்ததாகக் கூறப்படும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியிருக்கும் நிலையில், மக்களிடம் அச்சம் வலுப்பெற்றிருக்கிறது. மேலும் தாண்டிக்குடி பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த மரத்தில் ஏறி எடுத்த காணொலியும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தொடர்ந்து யானைகளின் அட்டகாசத்தால் கொடைக்கானல் கீழ்மலை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து யானைக் கூட்டத்தை வனத்தினுள் விரட்ட கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

யானைக் கூட்டம் மலையடிவார கிழக்குப் பகுதியில் உள்ள தென்னை, மா உள்ளிட்டவைகளை அழித்தும், குடியிருப்புகளை உடைத்து அரிசி, உப்பு உள்ளிட்டவைகளையும் தின்றுவருகின்றன. ஆனால் வனத்துறையினரோ கும்கிகளை அழைத்துவந்து மேற்குபகுதியான முத்துபாண்டி கோயில் அருகே முகாம் அமைத்துள்ளனர். கடந்த 12 நாட்களாகக் கும்கிகளுக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாயும், அங்குள்ள குழுவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். கும்கிகள் வரவழைக்கப்பட்ட பிறகும்கூட முகாம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகேகூட விளைநிலத்தில் புகுந்து 9 யானைகள் அட்டகாசம் செய்தன. இதை வனத்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. அண்மையில் வனத்துறையைச் சேர்ந்த ஒருவர் இறந்தபிறகே கும்கிகளை அழைத்துவந்துள்ளனர். இதுவும் வெறும் கண்துடைப்பாவே உள்ளது என்று அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

பாகன் மணி
பாகன் மணி

இந்த வனப்பகுதி பெரும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் வனத்துக்குள் யானைகளை விரட்ட முடியாத நிலை உள்ளது. ஆனால் வனத்துறை விரட்டுகிறோம் என்ற பெயரில் யானைக் கூட்டத்தை கோபப்படுத்துவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். வனத்துறையின் இந்த நடவடிக்கையால் மிரண்டு போகும் யானைகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னிவாடி, ஆத்தூர், பன்றிமலை உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றுக்கொண்டு இருக்கின்றன.

கன்னிவாடி அருகே பண்ணைபட்டி, கோம்பை பகுதிகளில் தென்னை, வாழை, இலவம், மா, முந்திரி விவசாயம் நடைபெற்றுவருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் யானைகள் நடமாட்டம் இங்கு அதிகரித்திருக்கிறது. குட்டை கொம்பன் மட்டுமே ஒரே நேரத்தில் 100 தென்னை மரங்களை சாய்த்துவிடுவதாகவும், சோலார் வேலி அமைத்தும் எவ்வித பயனும் இல்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், தேவையான உணவு கிடைப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக இவ்விடத்தைவிட்டு யானை கூட்டம் வெளியேறாமல் இருப்பதால், நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.

யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்

கடந்த இரண்டு வாரங்களாக யானைகளைக் கண்காணித்து வருகிறோம். மனிதர்களைத் தாக்குவது, அரிசிக்காக வீடுகளைச் சேதப்படுத்துவது என அட்டகாசம் செய்துகொண்டிருந்த குட்டை கொம்பனைக் காணவில்லை. அதைத் தேடுவதற்கு இரு குழுக்கள் அமைத்துள்ளோம். அந்தக் குழுக்கள் குட்டை கொம்பனைத் தேடிவருகின்றனர். எட்டு யானைகள் ஆடலூர் வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளோம். தற்போது கும்கிகளை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்கின்றனர் வனத்துறையினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism