Election bannerElection banner
Published:Updated:

ஜப்பான்: `7 வருடங்களுக்கு முன் இறந்த தந்தை; கூகுள் எர்த்தில் கண்ட காட்சி!’ - நெகிழ்ந்த நெட்டிசன்

கூகுள் எர்த்
கூகுள் எர்த்

ஜப்பானில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன தனது தந்தையின் புகைப்படத்தை கூகுள் எர்த்தில் பார்த்திருக்கிறார்.

கூகுள் எர்த் என்பது விர்ச்சுவல் குளோப் மூலம் புவிப் பரப்பில் துல்லியமான செயற்கைக்கோள் புகைப்படங்களைக் காட்டுகிறது. கூகுள் எர்த்தின் ஸ்ட்ரீட் வியூ மூலம் நாம் தெருக்களில் நடந்து செல்வதுபோலவே 360° அனுபவத்தைப் பெறலாம். இந்தப் பயன்பாட்டை உலக அளவில் பலரும் பயன்படுத்திவருகின்றனர். அப்படி, கூகுள் எர்த்தை பயன்படுத்தும்போது பலரும் அவர்களின் வீடு, தெரு என்று முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்க இயலும்.

கூகுள் எர்த் புகைப்படம்
கூகுள் எர்த் புகைப்படம்
Twitter

இந்த கூகுள் எர்த் மூலம் உலக அளவில் பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியான ஒரு சம்பவம்தான் தற்போது ஜப்பானில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தனது தந்தையின் புகைப்படத்தைக் கூகுள் எர்த் பயன்படுத்தும்போது அவரின் மகன் பார்த்திருக்கிறார்.

``இந்த கொரோனா பேரிடர் காலத்தில் எனக்குச் செய்வதற்கு எதுவும் இல்லை. அதனால், எனது பெற்றோரின் வீட்டை கூகுள் எர்த் மூலம் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்து தேடிக் கண்டுபிடித்தேன். அப்படிப் பார்க்கும்போது ஏழு வருடங்களுக்கு முன் இறந்து போன என் தந்தையை அங்கு காண முடிந்தது. அப்படியே சற்று நேரம் சென்று பார்க்கும்போது என் அம்மா நடந்துவருவதையும் காண முடிந்தது. என் அம்மா வரும்வரை அமைதியாகக் காத்துக்கொண்டிருந்தார் என் கனிவான தந்தை" என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அதாவது குறைந்தது ஏழு வருடங்களுக்கு முன்னர் எப்போதோ ஒரு முறை அந்தத் தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது. அதில் அவரின் தந்தையும் தாயும் பதிவாகியிருக்கிறார்கள். தன் தந்தையின் வீட்டைப் பார்க்கையில், அதே படம் அவருக்குக் காண்பித்ததால் பரவசம் அடைந்திருக்கிறார்.

இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரீ-ட்வீட் மற்றும் 6.9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அந்த ட்வீட் பெற்றிருந்தது. மேலும், `கூகுள் எர்த்திலிருந்து இந்தப் புகைப்படங்களை அகற்ற வேண்டாம்’ என்ற கோரிக்கையையும் அவர் வைத்திருந்தார்.

கூகுள் எர்த்-ல் இதற்கு முன்னரும் பல்வேறு புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வைரலாகியிருக்கின்றன. மக்கள் தங்களின் சொந்த ஊர், அவர்களின் தெருக்கள் மற்றும் வீடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பிடித்தமான பகுதிகளையும் காண்பதற்கு இந்த கூகிள் எர்த் தளத்தைப் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு