Published:Updated:

‘போற்றி’ பாடிடும் பெண்ணே!

சுஹாஞ்சனா
பிரீமியம் ஸ்டோரி
சுஹாஞ்சனா

‘ஒருபோதும் பாடுவதை நிறுத்தாதீங்க. அது இறைவன் கொடுத்த வரம். இசையிலேயே நீங்க நிறைய சாதிக்கலாம்’

‘போற்றி’ பாடிடும் பெண்ணே!

‘ஒருபோதும் பாடுவதை நிறுத்தாதீங்க. அது இறைவன் கொடுத்த வரம். இசையிலேயே நீங்க நிறைய சாதிக்கலாம்’

Published:Updated:
சுஹாஞ்சனா
பிரீமியம் ஸ்டோரி
சுஹாஞ்சனா

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சுஹாஞ்சனா லேசான பதற்றமும் உணர்வுப்பெருக்கும் நிறைந்தவராகத் தெரிந்தார். அவர் கண்களின் ஓரத்தில் முத்தைப்போல ஒரு துளி நீர் திரண்டிருந்தது. சாமி சிலைக்கு சாத்தியிருந்த மாலையைக் கொண்டு வந்து அர்ச்சகர் அவருக்கு அணிவித்து, பாடுமாறு சொன்னார்.

சுஹாஞ்சனாவிடமிருந்து, ‘தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்னும் கம்பீரமான குரல் வெளிப்பட்டது. அவர் பாடி முடித்ததும் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தன் பணியைத் தொடங்கிவிட்ட திருப்தி அவர் முகத்தில் நிறைந்திருந்தது.

‘போற்றி’ பாடிடும் பெண்ணே!

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று அரை நூற்றாண்டுக் காலம் நடைபெற்ற சமூகநீதி சமத்துவப்போராட்டத்தின் மைல்கல், ஆகஸ்ட் 14, 2021. தன் ஆட்சியின் நூறாவது நாளையொட்டி அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்துச்சாதியினருக்கும் பணிநியமன ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதே நாளில் பெண் ஓதுவாராகப் பணிநியமன ஆணை பெற்றவர்தான் சுஹாஞ்சனா. அவருக்கும் அவர் கணவர் கோபிநாத்துக்கும் நம் வாழ்த்துகளைச் சொன்னோம். அவர்களின் ஒரு வயது மகள் வன்சிகா சக்தி மலர்போலச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“சின்ன வயதிலிருந்தே கோயிலுக்குப் போகிறபொழுதெல்லாம் நானும் எனக்குத் தெரிந்த சில பாடல்களை சத்தமாகப் பாடுவேன். பூஜை இல்லாத நேரங்களில்தான் பாடுவேன். பூஜையின் போதும் பாடணும்னு தோன்றியது. ஆனா அதை அந்தந்தக் கோயில்களில் இருக்கும் ஓதுவார்கள்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் நான் என் மனதுக்குள், ‘இறைவா, இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா...’ என்று வேண்டுவேன். அதற்கு பதில் சொல்வது போல் தான் எனக்கு இறைவன் நல்ல குருவை அடையாளம் காட்டினார். கரூர் குமார சுவாமிநாதன் ஐயாவிடம் ஐந்து ஆண்டுகள் திருமுறை களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

‘போற்றி’ பாடிடும் பெண்ணே!

மங்கையர்க்கரசியார் அறநெறி அறக்கட்டளை என்கிற அமைப்பில் அறநெறி ஆசிரியையாகப் பணிக்குச் சேர்ந்தேன். அறநெறி ஆசிரியைன்னா பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுக்கணும். அதேபோன்று கரூரில் இருக்கும் பள்ளியிலும் இந்த சேவையைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டுக்குப் போய்விட்டால் இறைவனுக்கு இசைத்தொண்டு செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தால் திருமணம் குறித்த பேச்சுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். அப்போதான் இவங்க பெண் பார்க்க வந்தாங்க.

என்கிட்ட பேசும்போது கோபிநாத் முதலில் சொன்னதே... ‘ஒருபோதும் பாடுவதை நிறுத்தாதீங்க. அது இறைவன் கொடுத்த வரம். இசையிலேயே நீங்க நிறைய சாதிக்கலாம்’ என்றுதான். அதுதான் எனக்கு அவங்க மேல மரியாதையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு சம்மதித்தேன். திருமணத்துக்குப் பின் சென்னைக்கு வந்துட்டேன். எங்கே இறைவன் சந்நிதியில் பாட வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்று வருத்தம் தொடங்கியபோதுதான் ஓதுவார் பணிக்கான அறிவிப்பு வெளியானது. என் குடும்பத்தினர் ஊக்கப்படுத்தி விண்ணப்பிக்கச் சொன்னார்கள். அதன் பலன்தான் முதல்வர் ஐயா கையால இந்த ஆர்டர் கிடைத்தது. என் பணியை இன்று தொடங்கிவிட்டேன்” என்று பெருமையோடு சொன்னார்.

‘போற்றி’ பாடிடும் பெண்ணே!

கருணாநிதி முதல்வ ராக இருந்தபோது அங்கயற்கண்ணி என்பவர் திருமூக்கிச்சரம் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் முதல் பெண் ஓதுவராக நியமிக்கப் பட்டார். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணிசெய்த அவர், திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றபோது அந்தப் பணியைத் தொடர முடியாமல்போனது. அதன்பின் பெண் ஓதுவார் ஒருவர்கூட இல்லாமல் இருந்த நிலையில் தற்போதைய அரசு, பெண் ஒருவரை ஓதுவார் ஆக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓதுவாராக சுஹாஞ்சனா பாடும் வீடியோக்களைக் கடவுள் நம்பிக்கையற்றவர் களும்கூட பெருமகிழ்ச்சியுடன் பகிர்கின்றனர். காரணம், அது வெறுமனே பக்தியின் குரல் மட்டுமல்ல, பாலின சமத்துவத்தையும் சாதியாதிக்க எதிர்ப்பையும் உரத்து ஒலிக்கும் தமிழகத்தின் தனித்துவக்குரல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism