Published:Updated:

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

டி.கே.மூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
டி.கே.மூர்த்தி

இசை

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

இசை

Published:Updated:
டி.கே.மூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
டி.கே.மூர்த்தி

வாழும் காலத்திலேயே, தான் வசிக்கும் தெருவுக்குத் தன் பெயர் சூட்டப்பட்ட அபூர்வர், மிக மிக மூத்த மிருதங்க வித்வான் டாக்டர் டி.கே.மூர்த்தி. வயது 98. (இருபது வருடங்களுக்கு முன் அப்போது கவுன்சிலராக இருந்த தியாகராஜன், தெருவுக்குப் பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்தாராம்.)

மடிப்பாக்கம், நியூ குபேரன் நகரில் உள்ள டாக்டர் டி.கே.மூர்த்தி தெருவில் கடைசி வீடு. மகன் ஜெயராமனும், 19 வயது சீடர் கௌசிக்கும் அருகிலிருக்க, நேர்காணலுக்குத் தயார்நிலையில் சுத்தபத்தமாக அமர்ந்திருந்தார், மூர்த்தி. அகல ஜரிகை வேஷ்டி, அடர் நிறத்தில் ஜிப்பா, நெற்றியில் நெடுக்குவாட்டில் சந்தனக் கீற்று, குங்குமப் பொட்டு. ஜெயராமன் அறிமுகப்படுத்த, மெலிதாகப் புன்னகைத்து வணக்கம் சொன்னார்.

போட்டோகிராபர் முதல் மாடி சென்று லொகேஷன் பார்த்து ஓகே சொல்ல, படியேறி வந்து சிறு சோபாவில் மிடுக்காக உட்கார்ந்தார் மூர்த்தி. ஆடம்பரம் எதுவுமற்ற அறை அது. நீண்ட நெடு வாழ்வில் அனைத்தும் அனுபவித்தாயிற்று. பரிசும், பொருளும் வாங்கியாகிவிட்டது. உள்நாடு, வெளிநாடுகளில் பயணித்தாகிவிட்டது. இனி பகட்டு, படாடோபம் எதற்கு என்பதுபோல் அமைதியும் நிறைவுமாகக் காணப்படுகிறார் டி.கே.மூர்த்தி.

``மனுசனா பிறந்த யாரும் தப்பு செய்வது சகஜம்தான். நானும் இதற்கு விலக்கு கிடையாது. அப்போ எனக்கு 25 வயது. அதுவரைக்கும் செய்த தப்புக்கெல்லாம் மன்னிப்புக் கேட்கணும்னு தோணித்து. பாடகர் திருவெண்காடு ஜெயராமனையும், வீணை வாசுவையும் அழைச்சுண்டு காஞ்சி மடத்துக்குப் புறப்பட்டேன்.''

ரெகார்டரை ஓடவிட்டதுபோல் சரளமாக ஆரம்பித்தார் டி.கே.மூர்த்தி. கடந்த காலத்துக்குப் பயணித்து, பழைய சம்பவங்களை அடுக்கடுக்காக விவரித்த அவரின் நினைவாற்றல், வியக்கவைத்தது.

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

``நாங்கள் சென்றிருந்த சமயம் மகாபெரியவா காஞ்சிபுரத்தில் இல்லை. ஹைதராபாத் யாத்திரையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்தே நாங்க மூணு பேரும் ஹைதராபாத்துக்கு ரயில் ஏறிட்டோம். அங்கு விஜயா பிரஸ் வளாகத்தில் தங்கியிருந்தார் காஞ்சி முனிவர். அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருந்தார். `வாழ்க்கைல நான் நிறைய தப்பு பண்ணிட்டதா தோணுது. அதுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்க பெரியவாகிட்ட வந்திருக்கேன்'னு சொன்னேன். ஆழமாகப் பார்த்தார் அந்த மகான். `தப்பு பண்ணிட்டேன்னு சொல்லிட்டாலே பாவம் போயிடுத்துன்னு அர்த்தம்' என்றார்.''

சம்பவத்தை நினைவூட்டிச் சொல்லும்போது குரல் கம்மியது மூர்த்திக்கு. சீடன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். அன்று இரவு அங்கேயே தங்கினார்கள் மூவரும். மறுநாள் பூஜை முடிந்ததும் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

டி.கே.மூர்த்திக்கு சால்வையும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அணிவிக்கப்பட்டது. தங்கக்காசும் தரப்பட்டது. அதில் ஒரு பக்கம் அம்பாள் உருவம், மறுபக்கம் `மிருதங்க பூஷண்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வானாகவும் நியமிக்கப்பட்டார் மூர்த்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளுக்கு கிட்டத்தட்ட 65 வருடங்கள் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார், நூற்றாண்டின் விளிம்பில் இருக்கும் இந்த லய வித்வான்.

எம்.எஸ் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது எப்படி?

``எனக்கு அப்போ பதினைந்து, பதினாறு வயசு இருக்கும். தஞ்சாவூரில் என் குரு வைத்தியநாத ஐயரின் வீட்டில் நான் குரு

குலவாசம் இருந்த சமயம். ஒருநாள் வீட்டுக்கு எம்.எஸ் வந்தார். பகல் உணவு முடிந்ததும் என்னை அறிமுகம் செய்துவைத்தார் குரு. அன்று மாலை குருவின் வீட்டில் சிறு கச்சேரி செய்தார் எம்.எஸ். நான் மிருதங்கம் வாசித்தேன். வாசிப்பு அவருக்குப் பிடித்துவிட, பாட்டு ராணியின் வலதுபக்கம் உட்கார எனக்கு இடம் கிடைத்துவிட்டது'' முகம் பூரித்தார் மூர்த்தி.

திருவனந்தபுரத்துக்கு கிழக்கில் 25 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நெய்யாற்றின்கராவில் 1924-ல் பிறந்தவர் டி.கே.மூர்த்தி. இசைக் குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறை. அப்பா பாடகர் தாணு பாகவதர். கச்சேரி இருக்கும் நாள்களில் மகனையும் உடன் அழைத்துச் செல்வாராம் இவர். அப்போதெல்லாம் பார்வையாளர்களின் கண்களில் பட வேண்டும் என்பதற்காக, சின்ன பெஞ்ச் போட்டு மூர்த்தியை உட்கார வைப்பார்களாம்.

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

வாசித்துப் பழக மிருதங்கம் ஒன்று வேண்டும் என்று கேட்டு மூன்றாவது வயதில் அம்மாவை நச்சரித்திருக்கிறார் மூர்த்தி. உறவும் நட்பும் இவரை வாய்ப்பாட்டில் பழக்கவே விரும்பியிருக்கின்றன. ஆனால், மூர்த்தியோ மடியைவிட்டு மிருதங்கத்தை இறக்குவதாக இல்லை.

``எனது ஒன்பதாவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் சேரும் வரை எனக்கு நானே குரு. யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நானேதான் வாசித்துப் பழகினேன்'' என்று சிரித்தார்.

ஒருமுறை கேரளாவில் நடந்த ஹரிகதா கச்சேரி ஒன்றில் மூர்த்தி மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டிருக்கிறார், தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர். சிறுவனின் வாசிப்பு அவரைக் கவர்ந்திருக்கிறது. தன் அரவணைப்பில் மூர்த்தியை இணைத்துக் கொண்டுவிட்டார். ``தஞ்சாவூரில் குருவிடம் நான் சேர்ந்தபோது, பாலக்காடு மணி ஐயர் ஏற்கெனவே அங்கே மாணவர்... பாடகர் டி.எம்.தியாகராஜனின் சகோதரர் தம்புசாமியும் குருவிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டிருந்தார்'' என்று கூடுதல் விவரம் தந்தார் மூர்த்தி.

குரு இவரை `சிட்டு' என்றுதான் அழைப்பாராம். காரணம், சீடனின் வாசிப்பில் விரல்கள் சிட்டுக்குருவி மாதிரி படபட விறுவிறுவென்று இருந்ததால்! அதைத் தொடர்ந்து செம்மங்குடி, எம்.எஸ் போன்றவர்களும் மூர்த்தியைச் செல்லமாக `சிட்டு' என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சென்னை ஆர்.ஆர் சபாவில் 1937-ல் முசிறி சுப்பிரமணிய ஐயர் கச்சேரி. பாப்பா வெங்கட்ராமய்யா (வயலின்), டி.கே.மூர்த்தி (மிருதங்கம்), பாலக்காடு மணி (கஞ்சிரா). சபா நிர்வாகிகள் கடிகார வடிவில் போஸ்டர் அச்சடிக்க விரும்பியிருக்கிறார்கள். 12, 3, 6, 9 எண்களுக்கு அருகில் கலைஞர்களின் பெயர்களை இடம்பெறச் செய்ய திட்டம். மூர்த்தியின் ஒரிஜினல் பெயரான கிருஷ்ணமூர்த்தியை அதில் அடக்க இயலவில்லை. `இனிமே உன் பெயரை டி.கே.மூர்த்தி என்றே வச்சுக்க...' என்று சுருக்கிவிட்டவர் பாலக்காடு மணி ஐயர்!

பேட்டியின்போது நான் மாஸ்க் வழியே கேட்கும் கேள்விகளில் ஒன்றிரண்டு மூர்த்திக்குச் சரியாகப் புரியாமல் போனால், அவர் காதருகே வந்து தெளிவுபடுத்தி உதவினார் மகன், டி.கே.ஜெயராமன். இவரும் மனைவி வைதேகியும் பெரியவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு வேளையும் மருந்து எடுத்துக் கொடுத்து, ஒவ்வோர் இரவும் ரத்த அழுத்தம், ஆக்சிஜன் லெவல் பார்த்து வருகிறார்கள். அதில் மாற்றம் ஏதும் இருப்பின் டாக்டரின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள். சில காலம் முன்பு வரை மாடி அறையில்தான் தங்கிவந்திருக்கிறார் டி.கே.மூர்த்தி. ``படியேறி இறங்கிக்கொண்டிருக்க வேண்டாம் என்று சமீபமாகத்தான் அப்பாவை கீழ்த் தளத்துக்கு அழைத்து வந்துவிட்டோம்....'' என்ற ஜெயராமன், ஆல் இந்தியா ரேடியோவில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுடைய மகன் கார்த்திகேய மூர்த்தியும் இசை அமைத்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்.

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

சின்னஞ்சிறு வயதில் கிடைக்கப்பெற்ற பரிசுப் பொருள்கள் யாருக்கும், எப்போதும் நினைவில் இருக்கவே செய்யும். அத்தகைய சம்பவங்கள் சிலவற்றை டி.கே.மூர்த்தி இன்னும் மறக்கவில்லை. பள்ளியில் படித்த நாள்களில் (சொற்பமான நாள்கள்தான்) இன்றைய கஜல் பாடகர் ஹரிஹரனின் தந்தை செல்லமணி, மூர்த்திக்கு கிளாஸ்மேட்! சித்திரை திருநாள் மகாராஜா ஒருமுறை பள்ளிக்கு வந்தபோது, இருவரையும் கச்சேரி செய்யச் சொல்லியிருக்கிறார் தலைமையாசிரியர். அது மகாராஜாவைக் கவர்ந்துவிட, இரண்டு சுட்டிகளுக்கும் தங்கப்பதக்கம் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார்.

இன்று வரை பிரபலமாகக் கருதப்பட்டுவரும் எம்.எஸ் பாடிய ஐ.நா சபை கச்சேரியில் மிருதங்கம் வாசித்தவர் டி.கே.மூர்த்தி. விக்கு விநாயகராம் கடம். நிகழ்ச்சியில் தனி ஆவர்த்தனம் முடியும் சமயம், வாசிக்கும்போதே தாளம் கொஞ்சமும் தப்பாமல் கடத்தைத் தூக்கிப்போட்டுப் பிடித்து வாசிக்க விக்குவுக்கு யோசனை சொன்னவர் டி.கே.மூர்த்தி. ``அன்று தனி முடிந்ததும் அரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டியதை என்னால் மறக்கவே முடியாது'' என்று சொன்ன மூர்த்தியின் முகத்தில் அத்தனை பெருமிதம்!

ஒரு சமயம், மைசூர் அரண்மனைக்கு குருவுடன் சென்று வாசித்தார் டி.கே.மூர்த்தி. அன்று மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரி. கேட்டு மகிழ்ந்த மகாராஜா, இளம் மூர்த்தியின் மிருதங்க வாசிப்பைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஆயிரம் ரூபாய் (அந்த நாளில்!) அளித்து, அங்கவஸ்திரம் அணிவித்து மகிழ்ந்தாராம்.

``அந்த ஒரு கச்சேரியை என்னால மறக்கவே முடியாது...'' என்று டி.கே.மூர்த்தி ஆரம்பித்தபோது, நான் உட்கார்ந்திருந்த நாற்காலியை அவருக்கு அருகில் நகர்த்திக்கொண்டேன்.

``மியூசிக் அகாடமியில் சஞ்சய் சுப்பிரமணியன் பாட்டு. நான் மிருதங்கம் வாசிச்சேன்... ஒண்ணேகால் மணி நேரம் கடந்திருக்கும். திடீர்னு அப்படியே சரிஞ்சு விழுந்துட்டேன். கொஞ்சம் நேரத்துக்கு எனக்கு எதுவும் தெரியலே...'' என்று அந்த திக் திக் நிமிடங்களை விவரித்தார் டி.கே.மூர்த்தி.

அன்று ஆடியன்ஸில் ஒருவராக, நரம்பியல் நிபுணர் பி.ராமமூர்த்தியும் இருந்திருக்கிறார். மேடையேறிச் சென்று மூர்த்தியை அவர் சோதித்தபோது, வலதுபக்கம் செயலிழந்து போயிருப்பது தெரிந்தது. தன் மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொல்லிவிட்டு காரில் விரைந்தார் டாக்டர்.

``நான் மிருதங்கம் வாசிக்கத்தான் பிறந்திருக்கேன். வலது கை செயலிழந்து போய் என்னால் வாசிக்க முடியாமல் போயிட்டா, அதுக்கப்புறம் நான் உயிருடன் இருந்து பலனில்லை. என்னை அனுப்பி விடுங்க'' என்று டாக்டரிடம் சொல்லியிருக்கிறார் டி.கே.மூர்த்தி.

மிருதங்க பூஷண் டி.கே.மூர்த்தி

``கவலையே வேண்டாம்... இன்னும் பத்து நாள்ல நீங்க மறுபடியும் வாசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்'' என்று நம்பிக்கை அளித்திருக்கிறார் டாக்டர் ராமமூர்த்தி.

மூளையில் ரத்த உறைவு. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தங்கிவிட்ட வடுவை தலைகுனிந்து காட்டிவிட்டு, ``சொன்னபடியே என்னை மறுபடியும் வாசிக்கவைத்துவிட்டார் டாக்டர் ராமமூர்த்தி'' என்று குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் சிரித்தார் டி.கே.மூர்த்தி.

தன் மிருதங்க வாழ்க்கையில் ஏராளமான சீடர்களைத் தயார் செய்திருக்கிறார் இவர். இலங்கை அகதிகள் முகாமிலிருந்து சாயிசுரேகா என்ற ஆறு வயது சிறுமி மிருதங்கம் கற்கும் ஆர்வத்துடன் இவரிடம் வந்து சேர்ந்திருக்கிறாள். இப்போதும் மிருதங்கம் பயில்வதைத் தொடர்கிறார். இன்று பிஸியாக இருக்கும் மிருதங்க வித்வான் B.சிவராமன் மூர்த்தியின் பல வருட மாணவர். கஞ்சிரா அனிருத் ஆத்ரேயாவும் மூர்த்தி பல்கலையில் தயாரானவர்.

அன்றைய நேர்காணல் நிறைவுற்றது. படியிறங்கும்போது கால் தடுக்கி விடாமலிருக்க உஷாராக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டார் மூர்த்தி. படிக்கட்டு கைப்பிடியைப் பிடித்து கவனமாக அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படியாக இறங்கிவந்தார். பதினாறு, பதினைந்து, பதினான்கு என்று படிக்கட்டுகளில் நம்பர் குறைந்துகொண்டே வர, வயதும் குறைந்து வருவதுபோலிருந்தது மிருதங்க மேதை டி.கே.மூர்த்திக்கு!