Published:Updated:

``சினிமா ஆசை, அப்போ திருமணம் செய்துக்கல!'' - சென்னை ரயில் நிலைய புல்லாங்குழல் கலைஞரின் கதை

புல்லாங்குழல்
News
புல்லாங்குழல்

அவரது தற்போதைய ஆசையெல்லாம், சற்றே விரிசல் விட்டிருக்கும் தனது புல்லாங்குழலைச் சரிசெய்ய வேண்டும். பல்லாவரம் சந்தையில் `30 ரூபாய்க்கு வாங்கிய, எம்பி3 பிளேயரில் எப்படியேனும் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா பாடல்களைக் கேட்டுவிட வேண்டும் என்பதுதான்.

சென்னை திரிசூலத்தின் மின்சார ரயில்நிலையத்தின் சுரங்கப்பாதை வழியாக ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்பவர்கள் அந்தப் புல்லாங்குழல் ஓசையைக் கேட்டிருப்பீர்கள். காலையும் மாலையும் மக்கள் அதிகமாகச் சென்று வரும் நேரங்களில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் இரு கண்களை மூடி லயித்தபடி அங்கே புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருப்பார்.

புல்லாங்குழல்
புல்லாங்குழல்

அவர் அருகே அவருடைய கிழிந்து நைந்துபோன ஜோல்னா பை, அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் தட்டில் அவருக்கான அன்றைய வரும்படி சில்லறைகள் சிதறிக்கிடக்கும். மெல்லிய இருள் ஒன்றை பற்றிக்கொண்டபடி இருக்கும் லாந்தர் விளக்கின் ஒளி போலத்தான் சுரங்கப்பாதையில் அந்தப் புல்லாங்குழல் ஓசையும் கேட்கும். காலையில் பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களையும், மாலையில் களைத்துப்போய் வீடு சேர்பவர்களையும் சற்று நிதானப்படுத்துவது அவர் வாசிக்கும் அந்த மூங்கில்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"இதயம் ஒரு கோயில்

அதில் உதயம் ஒரு பாடல்"

என இளையராஜாவின் குரலை மெல்லிய புல்லாங்குழல் இசையாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தோம்...

புல்லாங்குழல்
புல்லாங்குழல்

தன்னிடம் இருந்த செய்தித்தாள்களை விரித்து அதில் நம்மை அமரச் சொல்லிவிட்டு பேசத் தொடங்கினார்.

"என் பெயர் ஆரோக்கியம். 52 வயசாகுது. பதினோறாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். சொந்த ஊர் பல்லடம். சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டராகுற கனவோட சென்னைக்கு வந்தேன். எத்தனையோ பேரை கைவிட்ட தமிழ் சினிமா என்னையும் கைவிட்டிருச்சு.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர முயற்சி பண்ணினேன். ஆனால் அது நடக்கலை. நிறைய முயற்சி எடுத்தேன். ஆனா, எந்த முயற்சியும் நிறைவேறலை. சினிமா கனவுக்காக அப்போ திருமணம் செய்துக்கல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கட்டத்துல கோயம்புத்தூருக்கு திரும்பிட்டேன். கூடப்பிறந்தவங்க, கோவையிலதான் இருக்காங்க. அவங்க வீட்டுல தங்கி, பட்டறையில வேலைபார்த்தேன். அப்போதான் காதல் திருமணமும் செய்துகிட்டேன். மிகவும் வயசான பிறகு செய்துகொண்ட திருமணம். ரெண்டு வருஷம் அத்தனை காதலோட வாழ்ந்தோம். முதல் குழந்தைக்கான பிரசவத்துல மனைவி இறந்துட்டாங்க. அவங்களோட இறப்பு என் வாழ்க்கையைத் தலைகீழாக மாத்திடுச்சு. அதுவரைக்கும் நமக்காக ஒருத்தங்க இருக்காங்கனு இருந்த நம்பிக்கை, பிடிப்பு அத்தனையும் போயிடுச்சு. அவங்க நினைப்பு மனசை ரொம்ப வாட்டவும் கிளம்பிச் சென்னைக்கே வந்துட்டேன். இங்கே வந்து சின்னச் சின்னதாக நிறைய கூலி வேலைகள், ஹோட்டலில் வேலை செய்தேன். அப்புறம்தான் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினேன்" என்கிறார்.

புல்லாங்குழல்
புல்லாங்குழல்

இடையே சிலர் அவரது தட்டில் சில்லறை போடவும். மீண்டும் வாசிக்கிறார்.

"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்

வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்

கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்"

என நடுநடுவே சிறப்பாக வாசிக்கிறார். இசை ஓய்ந்த அமைதி சுரங்கப்பாதையை நிரப்புகிறது. அதை உடைத்துக்கொண்டு மீண்டும் இசைக்கத் தொடங்குகிறார்.

"இப்படி வாசித்தால் வரும் சில்லறைதாங்க நமக்கு வயித்துப்பிழைப்பு. இதில் கிடைக்கும் ஐம்பது ரூபாய்தான் நமக்குச் சாப்பாட்டுக்கு! சாப்பாடு கிடைக்காத நேரங்களில் இந்தப் புல்லாங்குழல் இசைதான் நமக்குச் சாப்பாடு (சிரிக்கிறார்). என் அப்பா பெயர் மாறன். இறந்துட்டாரு. அருமையாகப் புல்லாங்குழல் வாசிப்பாரு. அவர் வாசிப்பதைப் பார்த்துதான் நானும் புல்லாங்குழல் வாசிக்கக் கத்துக்கிட்டேன். மற்றபடி நமக்கு முறையான சங்கீதப் பயிற்சி எதுவும் கிடையாது. ராகம் தாளம் எதுவும் தெரியாது. நான் வாசிக்குறதைப் பார்த்துட்டு மதுரையைச் சேர்ந்த புல்லாங்குழல் செய்யற சின்ன வீரன் சார் எனக்காகச் செய்துகொடுத்தார். அவர் அருமையாகப் புல்லாங்குழலும் வாசிப்பார். தொடக்கத்தில் இப்படி உட்கார்ந்து சில்லரைக் காசுக்காக வாசிக்கிறோமே என்று ஒருமாதிரி வருத்தமாக இருந்தது. ஆனால் இங்கே உட்கார்ந்து வாசிப்பது எனக்குப் பல்கலைக்கழகம் மாதிரி, நான் வாசிப்பதைக் கேட்கறவங்க எனக்குச் சில்லரை போட்டுவிட்டுப் போறாங்க. நான் இங்கே உட்கார்ந்து வாசிக்கும்போது நிறைய கத்துக்கிறேன். இதே பாட்டை அடுத்தமுறை என்னால இன்னும் சிறப்பா வாசிக்க முடியுது" எனச் சொல்லிச் சிரிக்கிறார் அந்த ஐம்பது வயது இசை மாணவர்.

அவரது தற்போதைய ஆசையெல்லாம் சற்றே விரிசல் விட்டிருக்கும் தனது புல்லாங்குழலைச் சரிசெய்ய வேண்டும். பல்லாவரம் சந்தையில் முப்பது ரூபாய்க்கு வாங்கிய பாடல் கேட்கும் எம்பி3 ப்ளேயரில் எப்படியேனும் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா பாடல்களைக் கேட்டு விட வேண்டும் என்பதுதான். விடைபெற்றோம்.

தூரத்தில் புல்லாங்குழல் "உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே" என உருகிக் கொண்டிருந்தது.