Published:Updated:

"கேட்கிறவங்களுக்கு கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்" - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம்

திருவாரூர் பக்தவத்சலம்
பிரீமியம் ஸ்டோரி
திருவாரூர் பக்தவத்சலம்

இசை

"கேட்கிறவங்களுக்கு கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்" - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம்

இசை

Published:Updated:
திருவாரூர் பக்தவத்சலம்
பிரீமியம் ஸ்டோரி
திருவாரூர் பக்தவத்சலம்
கர்னாடக இசையுலகில் இன்று முன்னணியில் உள்ள மிருதங்க வித்வான்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் திருவாரூர் பக்தவத்சலம். 64 வயது நிரம்பியவர். ஐம்பது வருடங்களாக வாசித்துவருபவர். இவர் உட்கார்ந்தால் கச்சேரிமேடை களைகட்டும். வாசிப்பு வசீகரிக்கும். மிகச் சில மிருதங்க வித்வான்கள் `தனி' வாசிக்கும்போது மட்டும் யாரும் எழுந்து போக மாட்டார்கள். அந்த மிகச் சிலரில் பக்தவத்சலமும் ஒருவர்! இவர் `தனி' ஆரம்பிக்கும்போது சன்னமாக வெளிப்படும் நாதம் காதுகளை வருடும். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து, க்ளைமாக்ஸ் எட்டும்போது கேட்போரை மிரட்டும். முடிந்ததும் எழும்பும் கரவொலி அடங்க நீண்ட நேரமாகும்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓரிரு வருடங்களுக்கு முன்பு மினி ஹால் ஒன்றில் பரத் சுந்தர் கச்சேரி. சீக்கிரமாகவே போய் உட்கார்ந்துவிட்டேன். திடீரென்று கதவு திறக்க, அரங்கம் முழுவதும் சுகந்த நறுமணம் பரவி குளிர்வித்தது. திரும்பிப் பார்த்தபோது பிரபல மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம். அகலமான ஜரிகைக்கரை வேஷ்டி; இஸ்திரி மடிப்பு கலையாத சந்தன கலர் ஜிப்பா; வெள்ளை வெளேர் மேல்துண்டு; பவுடர் பூசிய முகம்; நெற்றியில் விபூதிக் கீற்று; குங்குமப்பொட்டு... நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக கம்பீரமாக நடந்து வந்தார். பின்னாலேயே சீடர் ஒருவர் இரண்டு மிருதங்கங்களைச் சுமந்து வந்தார்.

ஆளுமை மிக்க இந்த வித்வானை அண்மையில் அவரது வீட்டில் சந்தித்்தபோது, அவர் பயன்படுத்தும் வாசனை திரவியம் பற்றித்தான் முதலில் கேட்டேன்.

‘‘இது ஒரு ஸ்பெஷல் பர்ப்யூம். பாரிசிலிருந்து வாங்கி வைத்திருக்கிறேன்’' என்றார் பக்தவத்சலம், மென் புன்னகையுடன்.

‘‘ஓ... நீங்க பிரான்ஸ் போயிருந்தபோது வாங்கி வந்தீங்களா?'' என்றேன்.

"கேட்கிறவங்களுக்கு 
கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்" - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம்

‘‘இல்லே... நம்ப பாரீஸ் கார்னரில்தான் வாங்குவேன். அதுல சில விஷயங்களைக் கலந்துப்பேன். இந்த ஃபார்முலாவை யாருக்கும் சொல்ல மாட்டேன். ரகசியம்'' என்றவர், ‘‘என்னுடைய வாசிப்பு நிறைய பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது... ஆனா, இந்த வாசனை லேடீஸ் உட்பட எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்று சொல்லிச் சிரித்தார்.

திருவேற்காடு கருமாரி அம்மன்தான் இந்தத் திருவாரூர்க்காரருக்கு இஷ்ட தெய்வம்.

‘‘எனக்கு மகமாயிதான் எல்லாம். கோபப்படும்போது, சந்தோஷப்படும்போது என்று எந்நேரமும் எனக்கு மகமாயிதான். மிருதங்க கிளாஸ் சிஷ்யன் சரியா வாசிக்கலேன்னாகூட ‘மகமாயி... ஏண்டா இப்படி தப்பும் தவறுமா வாசித்து என் உயிர வாங்குற’ என்றுதான் சத்தம் போடுவேன்'’ என்ற பக்தவத்சலம் ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தரும்கூட. நாங்கள் பேசிக்கொண்டிருந்த அறையில் பெரிய சைஸ் ராகவேந்திரர், சாட்சியாக அமர்ந்திருந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

‘‘இந்த ஆறு மாதமாக அரங்கத்தில் ரசிகர்களைப் பார்க்காமல், அவங்க கைத்தட்டல்களுக்கு மத்தியில் வாசிக்காமல் இருப்பது, பித்துப் பிடித்த மாதிரி ஆயிடுச்சு. பாடம் கத்துக்கிற பசங்களையும் வர வேண்டாம்னு சொல்லிட்டேன். சாதாரணமா ஸ்கைப் மூலமா நான் கிளாஸ் எடுக்கிறது இல்ல. இப்ப எடுக்கிறேன்’’ என்றார் பக்தவத்சலம்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒப்புக்கொண்டிருந்தபடி வெளிநாடுகளுக்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்தியாவில் வெளியூர், உள்ளூர்க் கச்சேரிகள் அனைத்தும் ரத்தாகிவிட்ட நிலையில் மற்ற பல இசைக் கலைஞர்கள் மாதிரி இவரும் வீடே கதியென்று இருக்கிறார். ஆன்லைன் கச்சேரிகளுக்காக அவ்வப்போது ஸ்டுடியோக்களுக்கு போய் வாசித்துவிட்டு வருவதோடு சரி.

நிகழ்காலத்துக்கு கமா போட்டுவிட்டு, கடந்த காலத்துக்குப் பயணப்பட்டார் திருவாரூர் பக்தவத்சலம்.

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் ஏழு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம் திருக்கண்ணமங்கை. இந்தக் கட்டுரை நாயகனின் அம்மா ஆனந்தவல்லியின் சொந்த ஊர். தாத்தா ராமதாஸ், பிரபல நாகஸ்வரக் கலைஞர். வைணவக் கலாசாரத்தைக் கடைப்பிடித்து வந்தவர். திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் மட்டுமின்றி செம்மங்குடியின் சுத்துப்பட்டு 18 கிராமங்களுக்கும் இவரே ஆஸ்தான நாகஸ்வர வித்வான்.

"கேட்கிறவங்களுக்கு 
கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்" - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம்

‘‘எனக்கு மூன்று வயது இருக்கும்போது, என் தந்தை பெருமாள் பிள்ளை காலமாகிவிட்டார். மதுரையைச் சேர்ந்தவர் இவர். சங்கீதம் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்த என் அம்மா வாய்ப்பாட்டு கற்றுக்கொள்வதற்காக திருவாரூர் சென்று வந்துகொண்டிருந்தார். அங்கே திருவாரூர் சேதுராமன் இவரது குரு. மதுரை ஸ்ரீரங்கம் அய்யங்கார், திருவாரூர் நமச்சிவாயம், டி.எம்.தியாகராஜன் ஆகியோரிடமும் அம்மா பாட்டு படித்திருக்கிறார்'' என்றார் பக்தவத்சலம்.

இந்த நேரத்தில் குடும்பம் திருவாரூருக்குப் புலம் பெயர்ந்தது. பக்தவத்சலத்தின் பெயருக்கு முன்னால் திருவாரூர் இணைந்து கொண்டதும் அதனால்தான். திருவாரூர் ஆனந்தவல்லி என்ற பெயரில் அம்மா கச்சேரிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். சகோதரர் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு மிருதங்கம் வாசிப்பார். வீட்டில் எந்நேரமும் சங்கீதம் ஒலித்துக்கொண்டு இருக்கும். நாகஸ்வரம், வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள்.

இளம் பக்தவத்சலத்துக்கு படிப்பைவிட இசையில் அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் மிருதங்கமும் தவிலும் இவரை ஈர்த்தன. மாமா கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்க வாசிப்பை உன்னிப்பாகக் கவனித்து தானும் அப்படியே வாசிக்க ஆரம்பித்தார். ஆதிதாளமும் ரூபகதாளமும் வரிசையில் வந்து விரல்களில் குடிகொண்டன. ‘‘அம்மாவும் என் சகோதரியும் என்னை அறைக்குள் அடைத்துப் படிக்க வைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் இசையை முழுநேரத் தொழிலாக எடுத்துக்கொண்டால், வாழ்க்கையில் முன்னேற முடியாது. பட்டதாரியாகி வேலைக்குப் போகவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. பகுதிநேரத் தொழிலாக வேண்டுமானால் இசையை வைத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்கள்'' என்றார் பக்தவத்சலம்.

எப்படியோ தட்டுத்தடுமாறி, எஸ்.எஸ்.எல்.சி முடித்து தஞ்சாவூர்க் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி சேர்ந்தார். பாடங்கள் மனதில் பதிந்தன... அதாவது மிருதங்கப் பாடம். பி.யூ.சிக்குப் பிறகு தொடர்ந்த பி.காம் படிப்புக்கு பாதியில் பை... பை சொல்லிவிட்டு, ‘தனக்கு வாழ்வாதாரம் லயம்தான்’ என்று முடிவு எடுத்துவிட்டார்.

தமது இருபதாவது வயதில் சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார் பக்தவத்சலம். துணைக்கு மிருதங்கமும் அதில் உழைத்து சாதிக்க வேண்டும் என்கிற வெறியும்.

இங்கே தனி அறையில் தங்கிக்கொண்டு அசுர சாதகம் செய்தார். நகரில் நடக்கும் கச்சேரிகளுக்கு எல்லாம் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். உச்சத்திலிருந்த சீனியர்களின் வாசிப்பை உள்வாங்கிக்கொண்டு, தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கொள்ள முனைந்து, அதில் மாபெரும் வெற்றியையும் கண்டார்.

‘‘மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் சென்னையில் உள்ள ஸ்ரீ தியாகராஜ வித்வான் சமாஜத்தில் என்னை வாழ்நாள் உறுப்பினராகச் சொன்னார். ‘அங்கே இசைக் கலைஞர்களின் தொடர்பு உனக்கு நிறைய கிடைக்கும். உன் மிருதங்க வாசிப்பு பிடித்தவர்கள், தங்கள் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக உன்னை வைத்துக்கொள்வார்கள்' என்றார் அவர். அப்படியேதான் நடந்தது.

சமாஜத்தில் ஒருமுறை அகண்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோது யேசுதாஸுக்கு வாசிச்சேன். பின்னர் எழுபதுகளில் அவருடன் முதல் கச்சேரி... அவருடனான கூட்டணி பல வருடங்களாக தொடர, இன்று வரை அவருக்கு வாசித்து வருகிறேன்’’ என்றார் பக்தவத்சலம்.

ஏணியின்றி யாரும் மேலே ஏற முடியாது. அந்த வகையில் பக்தவத்சலத்துக்கு உறுதுணையாக இருந்து உதவியவர்கள் பிரபல பாடகிகளான பாம்பே சகோதரிகள் (சி.சரோஜா, சி.லலிதா) பல சபாக்களில் பிரபல வித்வான்கள் இவருக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்தவர்கள். அதேபோல், மறைந்த புல்லாங்குழல் வித்வான் என். ரமணியும் பக்தவத்சலத்தின் கிடுகிடு வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறார். முக்கியமாக, ஜாகிர் உசேன் உள்ளிட்ட இந்துஸ்தானி பிரபலங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது ரமணியால்தான். ஒருமுறை, ‘நீங்க ஏன் சார் உங்க பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரைப் போட்டுக்கொண்டதில்லை’ என்று ரமணியிடம் கேட்டிருக்கிறார் பக்தவத்சலம். ‘அதுவா... எனக்கு சொந்த ஊர் திருவாரூர். என் தந்தை பெயர் நடேசய்யர். அதனால் டி.என்.ஆர் என்று என் பெயரைச் சுருக்க வேண்டியிருக்கும். நாகஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை டி.என்.ஆர் என்றே அழைக்கப்படுகிறார். அந்த மேதைக்கு சமமாக நானும் அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்றாராம் ரமணி.

"கேட்கிறவங்களுக்கு 
கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்" - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம்

‘‘நான் கடவுளை முழுவதுமாக நம்பினேன். உழைத்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். எனக்கு யாருடைய ஆதரவும் கிடையாது. வாய்ப்பு கேட்டு எந்த சபா வாசலிலும் நான் நின்றதில்லை. படிப்படியாக வளர்ந்தேன். நிலம் வாங்கி, இந்த வீட்டைக் கட்டினேன் (பெரிய பங்களா அது). மூன்று பெண்களை வளர்த்து ஆளாக்கினேன்'' என்கிற பக்தவத்சலம், டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா செம்மங்குடி, கே.வி.நாராயணசாமி மாதிரியான அன்றைய 5 ஸ்டார் பாடகர்கள் பலருக்கும் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்ததைப் பெருமையாகக் கருதுகிறார். இன்றைய இளவட்டங்களான குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா, பரத் சுந்தர், சந்தீப் நாராயணன் உள்ளிட்டவர்களுக்கும் வாசிக்கிறார்.

‘‘எல்லாம் சரி... நீங்கள் ஏன் இன்றைய பாடகிகளுக்கு வாசிப்பதில்லை?’’

இவர் மட்டுமல்ல... வேறு பல பிரபலங்களும் இன்று லேடீஸ் பாடும் கச்சேரிகளுக்கு வாசிப்பதில்லை.

நிமிர்ந்து உட்கார்ந்தார் பக்தவத்சலம். ‘‘ஆரம்பத்தில் நிறைய பாடகிகளுக்கு வாசிச்சுட்டுத்தான் இருந்தேன். முக்கியமா எம்.எஸ், எம்.எல்.விக்கு நிறைய வாசிச்சேன். அவங்க காலத்துக்குப் பிறகுதான் ஆண்களுக்கு மட்டுமே வாசிக்கிறது என்று தீர்மானமாக முடிவு எடுத்தேன். பெண்களுக்குப் பக்க வாத்தியமாக உட்கார வேண்டாம் என மனசுல பட்டது. இதுக்குமேலே எதையும் வெளிப்படையாகச் சொல்ல விரும்பலே... காலகட்டம் மாறி வர்றச்சே, மேடையில் மிருதங்கத்துக்கான அந்தஸ்து (ஸ்டேட்டஸ்) குறைஞ்சிடக் கூடாதுங்கறதுல நான் குறிப்பாய் இருந்தேன்.

இப்பவும் சொல்றேன்... என் மனசுக்குப் பட்டது என்றால், மறுபடியும் லேடீஸ் பாடுற மேடையில் நான் மிருதங்கம் வாசிப்பேன்’’ என்று விளக்கினார் பக்தவத்சலம்.

லய மதுரா என்பது இவர் நடத்திவரும் மிருதங்க ஸ்கூல். 50 மாணவர்கள் இங்கே மிருதங்கம் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் 25 பேர் மிருதங்கத்தைத் தொழில்முறையாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா, கனடாவில் 5 பேர் இவரது தயாரிப்பில் உருவாகி வருகிறார்கள்.

‘‘இன்னொரு கேள்வி...''

‘‘கேளுங்க...''

‘‘உங்க மிருதங்கம் வாசிப்பு ரொம்ப சத்தமா இருக்குன்னு சிலபேர் சொல்றாங்களே...?''

லேசாக குரல் உயர்த்தினார் பக்தவத்சலம்.

‘‘சிலர் சொல்றது என் காதுகளுக்கும் வந்தது. சில ஹால்ல என் வாசிப்பு சத்தம் அதிகம்னு நினைச்சா, அதுக்கு நிச்சயம் நான் காரணம் கிடையாது. நான் மானிட்டரை மட்டும்தான் பார்த்துப்பேன். சமீபகாலமாக, மானிட்டரையும் கட் பண்ணிடச் சொல்லிடுறேன். மற்றபடி ஹால் மைக்குல எப்படிக் கேக்குறதுன்னு எனக்கு ஐடியாவே கிடையாது. அது மைக் இன்சார்ஜோட வேலை... ஒவ்வொரு தடவையும் நான் மேடையை விட்டு கீழே இறங்கிப்போய் சரி பார்க்க முடியாதே... தவிர, கேட்கிறவங்களுக்குக் கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்னு நான் விரும்புறேன். சுருதி மாதா, லயம் பிதான்னு சொல்வதுண்டே....’’

சற்று நேரம் அமைதி ஆனார். புகைப்படக்காரர் போட்டோ எடுக்கத் தயார் ஆனார்.

‘‘அம்மாவைக் கூப்பிடு'' என்றார், அங்கு இருந்த தன் கடைசி மகளிடம். அழைத்து வந்தார்.

‘‘இவ என் மனைவி ராஜம். நாட்டிய குரு வழுவூர் ராமைய பிள்ளையின் பேத்தி... வழுவூர் சாம்ராஜின் மகள். இவதான் எனக்கு எல்லாமே. வீட்டில் எனக்கு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட மட்டும்தான் தெரியும். மத்தபடி வீட்டு விவகாரங்கள் மொத்தமும் ராஜம்தான் கவனிக்கறா. குடும்பத்தில் சங்கீத சம்பந்தம் தொடர்ந்து இருக்கணும் என்பதுதான் எங்கள் விருப்பம். எங்களோட ஒரு மகளைக்கூட வீணை தனம்மாள் குடும்பத்தில் கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்கோம்'' என்று சொன்ன பக்தவத்சலத்தின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

அவருடைய இரண்டு துறுதுறு பேரன்களும் புது டிரஸ் அணிந்து ஸ்மார்ட்டாக வர, போட்டோ ஷூட் ஆரம்பமானது!