Published:Updated:

`கொலகொலயா முந்திரிக்கா', பல்லாங்குழி, பரமபதம்! - குதூகலித்த திருச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்

பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பர்ய விளையாட்டுகளை அரசுப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு விளையாடியது ரசிக்கும்படியாக இருந்தது.

விளையாடும் மாணவர்கள்
விளையாடும் மாணவர்கள்

திருச்சி மாவட்டம், மணிகண்டத்தை அடுத்த பள்ளக்காடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பாரம்பர்ய விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக, அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, அவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்குத் திரண்டு வந்தனர். பள்ளிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் மற்றும் பெற்றோரை பள்ளி மாணவர்கள், சிலம்பம் சுற்றியும் பறை இசை முழங்கியும் வரவேற்பு கொடுத்தனர்.

பரமபதம்
பரமபதம்

மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் சுமதி, கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

35 ரக சோளவிதைகளுடன் பாரம்பர்ய விதைத்திருவிழா!

“ மாணவர்களின் திறமையைப் பெற்றோர்தான் அடையாளம் காண வேண்டும். தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களைத் திறமையுள்ளவர்களாக வளர்த்தெடுப்பதில் பெற்றோருக்கு முக்கியப் பங்கு உள்ளது. குறிப்பாக, பாரம்பர்ய விளையாட்டுகள் குழு மனப்பான்மையை உருவாக்கும். மாணவர்களைத் தனிமைப்படுத்தாது.

கபடி
கபடி

ஆகவே, பாரம்பர்ய விளையாட்டுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் விதமாக, இதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்குப் பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

அடுத்து, பல்லாங்குழி, தாயம், ஆடு புலி ஆட்டம், பம்பரம், கபடி, டயர் ஓட்டுதல், கொலகொலயா முந்திரிக்கா, பரமபதம், ஒத்தையா... இரட்டையா, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை ஆர்வமாக விளையாடினர்.

வெற்றிபெற்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர் வாரி அணைத்துக் கொஞ்சினர். வெற்றியைத் தவறவிட்ட மாணவர்களை அவர்களின் பெற்றோர் உற்சாகமூட்டி, அடுத்த விளையாட்டுகளில் கலந்துகொள்ளச் செய்தனர். அதைவிட, விளையாடும் மாணவர்களின் ஆர்வத்தை அப்படியே செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் உறவினர்களுக்கு அப்டேட் செய்துகொண்டே இருந்தார்கள்.

டயர் உருட்டுதல்
டயர் உருட்டுதல்

பட்டம் விடுதல், கோழிக் குண்டு, கில்லி தாண்டு, சில்லாக்கு, நொண்டி விளையாடுதல், கயிறு இழுத்தல் , பச்சைக் குதிரை சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். மாலைவரை துளியும் உற்சாகம் குறையாமல் விளையாடினர். உண்மையில் பாரம்பர்ய விளையாட்டுகள், குழு மனப்பான்மையை உருவாக்கும் என்பதை உணர்த்தியது இந்த விழா.