முதுகுவலிக்கு மூல காரணம்!

மோ.அருண் ரூப பிரசாந்த்  

 

டம்புக்குத் தலை மாதிரி, பைக்குக்குப் பிரதானமாக விளங்குவது ஹேண்டில் பார். இதை ஹேண்டில் செய்வதில் இருக்கும் நுணுக்கங்களை விளக்க முன் வந்தார் வேளச்சேரியைச் சேர்ந்த பைக் மெக்கானிக் யோகநாதன்.

பொதுவாகவே, ஒரு பைக்கின் ஆயுட்காலம் வரை ஹேண்டில் பார் எந்தப் பிரச்னையும் இல்லாமல் உழைக்கும். ஆனால், பைக் கீழே விழுந்து வளைந்து விட்டால் மாற்றித்தான் ஆக வேண்டும். பைக்கில் டூ-பீஸ், த்ரீ பீஸ், ஸ்போர்ட்ஸ், பட்டர்ஃப்ளை, நார்மல், டர்ட் பைக் எனப் பல வகை ஹேண்டில் பார்கள் உள்ளன. ஹேண்டில் பார் என்பது சீட்டிங் பொசிஷன், பைக்கின் நீளம், ரைடரின் கம்போர்ட் என அனைத்தையும் மனதில் வைத்துதான் வடிவமைக்கப் படுகிறது. ஹேண்டில் பார் 'பெண்ட்’ ஆவது எல்லோருக்கும் நேர்வதுதான். பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கும்போது தவறி விழுந்தோ, சைடு ஸ்டாண்டு சரியில்லாமல் கீழே விழுந்தோ ஹேண்டில் பார் வளைந்து விடலாம். 'லேசாகத்தானே வளைந்து இருக்கிறது, இதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது’ என்று நினைத்து அலட்சியம் காட்டக் கூடாது. ஏனென்றால், பைக் ஓட்டும்போது இரு கைகளுக்குமான பேலன்ஸ் தவறும். இதனால், கடுமையான தோள்பட்டை வலி ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

'ஹேண்டில் பார் ஆல்ட்ரேஷன் செய்கிறேன் பேர்வழி’ என இன்னொரு பைக்கில் இருக்கும் ஹேண்டில் பாரைப் பொருத்தக் கூடாது. ஏனெனில், ஒவ்வொரு பைக்கின் நீள அகல உயரம், உட்காரும் முறை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பைக் ஓட்டுபவரின் உடலுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதை மனதில் வைத்து, ஹேண்டில் பார் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து வடிவமைக்கப்படுகிறது. வேறு பைக்கில் இருக்கும் ஹேண்டில் பாரைப் பொருத்தும்போது, அந்த பைக்கின் நீள அகல உயரத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருப்பது, நம் பைக்குக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியே பொருத்தினால், காலப்போக்கில் முதுகுவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் வந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

ஹேண்டில் பார் மாற்றியே ஆக வேண்டும் என்றால், உங்கள் பைக்குக்கு ஏற்ற ஹேண்டில் பார்கள் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும். அதையும், நன்கு ஹேண்டில் பார் பற்றி அறிந்த வல்லுனரின் பரிந்துரையோடு பொருத்தலாம். சரியாக ஆராயாமல் பொருத்தினால் பைக்கைத் திருப்பும்போது பெட்ரோல் டேங்கில் இடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹேண்டில் பார் ஆல்ட்ரேஷன் ஃபேஷனாக இருந்தது. ஆனால், இப்போது பைக்கின் பர்ஃபாமென்ஸில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். வெளி மார்க்கெட்டில் ரக வாரியாக கிடைக்கும் ஹேண்டில் பார்களின் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும்.

பைக்குக்குப் பொருந்தாத ஹேண்டில் பார் பொருத்தினால், கேபிள்கள் அனைத்தும் முறுக்கேறும் என்பதுடன் மைலேஜும் பாதிக்கும். அதேபோல், பைக்கைச் சுத்தம் செய்யும்போது, முடிந்த அளவு உப்பு நீர் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹேண்டில் பார் சீக்கிரம் துருப்பிடிக்க வாய்ப்பு உண்டு. ஃபோர்க் மற்றும் ஹேண்டில் பாரை 'பெண்ட்’ ஏதும் இல்லாமல் வைத்துக் கொண்டால், உடல் வலி பிரச்னை வராது என்பதுடன், இதற்கென தனியாக எந்தப் பராமரிப்புச் செலவும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick