உதறுதே... உதறுதே...

வேல்ஸ்
ஓவியம்: அரஸ் 

லகத்திலேயே மிகவும் கர்ண கொடூரமான சத்தம் - ஓடும் காரிலிருந்து வருகிற உதறல் சத்தம்! காரின் அடிப்பாகம், சேஸி, கதவு, வைப்பர் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் இந்த உதறல் சத்தம் வரும். 'சத்தம் வரும் இடத்தில் எல்லாம் லூப்ரிகேஷன் ஆயிலைப் பயன்படுத்தினால், இந்த உதறல் சத்தம் வராது’ என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அதற்குப் பிறகும் கூட இந்தப் பிரச்னை சிலருக்கு வரத்தான் செய்கிறது.

 சஸ்பென்ஷன்

தினமும் போய் வரும் சாலையில் காரை ஓட்டிப் பாருங்கள். முந்தைக்கு இப்போது இதில் பயணம் செய்வது கடினமாக இருக்கிறதா? பள்ளங்களில் விழுந்து எழும்போது அந்த அதிர்வு இப்போது அதிகமாக இருக்கிறதா? காரின் உதறல் சத்தம் சஸ்பென்ஷனில் இருந்துதான் வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பிரேக்

பிரேக் அடிக்கும்போது கார் 'க்ரீச்’ என்ற சத்தம் எழுப்புகிறதா? பிரேக் டிரம்மில் தூசு சேர்ந்திருந்தால், இது போன்ற சத்தம் வரும். பிரேக் டிரம்மைச் சுத்தம் செய்தால் சத்தம் நின்று விடும். சில சமயம், பிரேக் பேடுக்கும் பிளேட்டுக்கும் இடையே இருந்தும்கூட சத்தம் வரலாம்.

டயர்

டயரின் பக்கவாட்டுப் பகுதி பழுதுபட்டு இருந்தால், டயரின் பலம் குறையும். அதனால், காரின் சஸ்பென்ஷனில் பாதிப்பு ஏற்பட்டு, உதறல் சத்தம் எழும். அதே போல, காரின் வீல்களை சரியான கால இடைவெளியில் ரீ-அலைன்மென்ட் செய்தாக வேண்டும். சில சமயங்களில் வீல் 'கேப்’ தளர்ந்தாலும் உதறல் சத்தம் எழும். வீல் கேப் சேதமடைந்திருந்தால், அதை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

எக்ஸாஸ்ட் பைப்

காரில் இருக்கும் தரை விரிப்புக்கு அடியிலிருந்து சத்தம் வந்தால், அதற்கு எக்ஸாஸ்ட் பைப் காரணமாக இருக்கக் கூடும். கார் இன்ஜினிலிருந்து காரின் அடிப்பக்கம் வழியாக காரின் பின்பக்கத்துக்கு நீள்வதுதான் எக்ஸாஸ்ட் பைப். இதிலிருந்து வெப்பம் காருக்குள் பரவாமல் தடுக்க, காரின் தரைப் பகுதிக்கும் எக்ஸாஸ்ட் பைப்புக்கும் இடையே 'ஹீட் ஷீல்டு’ ஒன்று இருக்கும். அது தளர்ந்திருந்தாலும் சத்தம் வரும்.

கதவுகள்

இருப்பதிலேயே மகா எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய சத்தம் கதவுகளிலிருந்து வரும் சத்தம். காரின் 'ஹிஞ்சை’ டைட் செய்தாலே இந்தச் சத்தம் அடங்கிவிடும். ரப்பர் லைனிங் வீணாகியிருந்தாலும் சத்தம் வரும். கண்ணாடிகளை ஏற்றி இறக்கும் மெக்கானிஸம் பழுதுபட்டு இருந்தாலும் இந்தச் சத்தம் வரும். சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்லும் நாள்வரை, கார் கண்ணாடியிலிருந்து சத்தம் வராமல் தடுக்க வேண்டும் என்றால், கார் கண்ணாடிச் சந்துகளில் டால்கம் பவுடரைக் கொட்டலாம்.

அதேபோல, லூஸாக இருக்கும் பார்சல் ட்ரே, டேஷ் போர்டு போன்ற இடங்களும் சத்தம் கிளப்பக் கூடியவையே! ஆக, காரில் எங்கிருந்து உதறல் சத்தம் வந்தாலும் நாள் கடத்தாமல் சரி செய்வதுதான் உத்தமம்!!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick