தனியே தன்னந்தனியே... அஞ்சாதே!

சார்லஸ்
படங்கள்: கே.கார்த்திகேயன்

 பெண்கள் ஓட்டிச் செல்லும் ஸ்கூட்டர் நடுவழியில் நின்று விட்டால், அதோ கதிதான்! அடுத்து என்ன

செய்வது என குழம்பித் தவிப்பார்கள். சிலர், அப்படியே நின்ற இடத்திலேயே விட்டு விட்டு வந்து விடுவார்கள். இப்படி நடு ரோட்டில் திண்டாடும் பெண்கள் பலரை நாம் பரிதாபத்தோடு பார்த்திருப்போம். இரவு நேரங்களில் இதுபோல ஸ்கூட்டர் ஸ்ட்ரைக் செய்தால், அது இன்னும் மோசம். 'இதுபோன்ற சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது?’ என்று தெரிந்துகொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இது போன்ற சந்தர்ப்பங்கள் வராமல் தடுப்பதும் முக்கியம். ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள், என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.... இதோ ஒரு சிறிய செக் லிஸ்ட்!

 ஸ்கூட்டர் மேனுவலில் சொல்லி இருப்பதுபோல சீரான இடைவெளிகளில் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்ய வேண்டும். சிலர் நீண்ட காலமாக ஆயில் மாற்றாமல் ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். அப்படிச் செய்தால், இன்ஜின் 'சீஸ்’ ஆகிப் போகும். இன்ஜின் சீஸானால் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது செலவாகும்! சரியான இடைவெளியில் ஆயிலை மாற்றினால், அது, 150 - 200 ரூபாயோடு முடிந்து போய்விடும்.

ஸ்கூட்டர்களில் பொதுவாக ஆயில் டேங்க்கின் கொள்ளளவு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அதனால், ஒவ்வொரு ஆயிரம் கி.மீ.க்கும் ஒருமுறை ஆயில் அளவை செக் செய்து, மீண்டும் ரீ-ஃபில் செய்வது அவசியம்.

 பெட்ரோல் நிரப்பும்போதே வாரத்துக்கு ஒருமுறையாவது டயர்களில் காற்று சரியாக இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள். பஞ்சரிலிருந்து  டயரைப் பாதுகாக்க இதுவே சிறந்த வழி. டயர் நீடித்து உழைக்க வேண்டுமானால், அவ்வப்போது ஏர் செக் செய்ய வேண்டியது அவசியம். தேய்ந்து போயிருக்கும் பழைய டயர்களோடு எப்போதும் ஸ்கூட்டரைப் பயன்படுத்தாதீர்கள். திடீரென டயர் வெடித்தால், அது பெரிய ஆபத்தில் போய் முடியும்.

 ஸ்கூட்டர்களில் இருப்பது மிகவும் சிறிய சைஸ் டயர்கள். அதனால் சடர்ன் பிரேக் பிடிக்கும்போது 'ஸ்கிட்’ ஆகும் வாய்ப்பு அதிகம். அதனால், எப்போதுமே முன் மற்றும் பின் பக்க பிரேக்குகள் இரண்டையும் சேர்த்தே பிடிக்க வேண்டும்.

 காலை நேரங்களில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும். எனவே, அப்போது மட்டும் கிக் செய்தே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யுங்கள்; செல்ஃப் ஸ்டார்ட் வேண்டாம். ஸ்கூட்டரை ஓட்ட ஓட்டத்தான் பேட்டரி சார்ஜ் ஆகும். அதேபோல், தொடர்ந்து ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்திக் கொண்டே இருக்காதீர்கள். ஒரு முறை ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்திய பிறகு ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், குறைந்தது 15-20 விநாடி இடைவெளி விட்டுத்தான் அடுத்த முறை பட்டனை அழுத்த வேண்டும். சர்வீஸ் செய்யும்போது பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

 அடிக்கடி ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்னை செய்தால், ஸ்பார்க் பிளக்கை மாற்றி விடுங்கள். ஒவ்வொரு 7000 கி.மீ-க்கு ஒரு முறையும் ஸ்பார்க் பிளக்கை மாற்ற வேண்டும். செல்ஃப் ஸ்டார்ட் வேலை செய்யவில்லை என்றால், ஸ்டார்ட்டர் மோட்டாருக்கு கரன்ட் செல்கிறதா என்று செக் செய்யச் சொல்லுங்கள்.

 ஒரு மாதத்துக்கும் மேலாக ஸ்கூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை அகற்றி வைத்துவிடுவது நல்லது. அப்போதுதான் பேட்டரி லீக் ஆகாமல் நீண்ட காலம் உழைக்கும்.  

 ஸ்கூட்டரின் பர்ஃபாமென்ஸ் மிகவும் மந்தமாக இருப்பதாக உணர்ந்தீர்கள் என்றால், உடனடியாக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போய் கார்புரேட்டர், ஏர்ஃபில்டர், ஆகியவற்றைச் சரி பாருங்கள்.

 பிரேக், கிளட்ச் லீவர்களை இரண்டு மாதத்துக்கு ஒருமுறை செக் செய்யுங்கள். பிரேக், ஆக்ஸிலரேட்டர் கேபிள் ஒயர்கள் அறுபடும் நிலையில் இருந்தால், சிறிதும் தாமதிக்காமல் புதிதாக மாற்றி விடுங்கள். ரிஸ்க் வேண்டாம்.

 பெட்ரோலை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள். எந்த இடத்துக்குச் செல்கிறோமோ அந்த இடத்திற்கான வழியை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டு, அதன்படி செல்லுங்கள்.

 பிரேக் லீவரை நன்றாகப் பிடித்து ரிலீஸ் செய்யுங்கள். ஃபிரீயாக பிரேக் லீவர் மீண்டும் தனது பழைய பொசிஷனுக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பிரேக் லீவரை செக் செய்யுங்கள்.

  வழி தெரியாமலோ அல்லது தெளிவான திட்டமில்லாமலோ சுற்றும்போது பெட்ரோல் வீணாகும். மீண்டும் நீங்கள் பெட்ரோல் பங்க்கைத் தேடி அலைய வேண்டி இருக்கும்.

 எப்போதுமே ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டரைத் தொடாதீர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick