ஆட்டோமோபைல் படிக்கலாமா?

>>ந.வினோத்குமார்  

 

லெக்ட்ரானிக்ஸ், கணினி சார்ந்த பொறியியல் படிப்புகளை மாணவிகள் விரும்புகிறார்கள் என்றால், மாணவர்களின் ஆர்வம்... மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பக்கம்தான். ஆட்டோமொபைல் துறையில் ஜொலிக்க... ஆட்டோமொபைல் துறை சார்ந்த படிப்புகள் என்னென்ன இருக்கின்றன என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சொன்னார்.

''பொதுவாக, ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்புகளையே டிசைன் சார்ந்தவை, தயாரிப்பு சார்ந்தவை, சேவை சார்ந்தவை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் போன்ற மற்ற இன்ஜினீயரிங் படிப்புகளும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்பும் சுமார் 75 சதவிகித அளவுக்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். செய்முறை வகுப்புகள் மட்டும் அந்தந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப தனிப்பட்ட கவனத்துடன் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றுடன் கேட், கேம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றால் நல்ல பயன் உண்டு'' என்று சொன்னவர், மாணவர்களின் சாய்ஸுக்கு சில படிப்புகளைப் பட்டியலிடுகிறார்.

ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்

புரொடக்ஷன் இன்ஜினீயரிங்

மேனுஃபாக்சரிங் இன்ஜினீயரிங்

இன்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்

ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ்

இந்தத் துறைக்கான படிப்புகள் மூலம் எந்த அளவு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்றும், அதற்கு மாணவர்கள் எந்த வகையான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிபுணர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது, அவர் மேலும் சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

''இன்று எந்தத் துறை பிரகாசமாக இருக்கிறதோ, அதை மட்டும் தேர்வு செய்யாமல் வருங்காலத்தில் எது பயனுள்ளதாக இருக்கும் என்று கவனத்துடன் கணித்து அந்தப் படிப்புகளைப் படிக்க வேண்டும். அந்த வகையில், ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஆட்டோமொபைல் துறை வேகமான வளர்ச்சியைக் காட்டி வருகிறது. எதிர்காலத்தில் இந்தத் துறையில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. ஆகவே, ஆட்டோமொபைல் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தாராளமாகப் படிக்கலாம்.

இன்றைய நிலவரப்படி, ஆட்டோமொபைல் துறையில் பொறியியல் படிப்பு படித்தவர்களைக் காட்டிலும் டிப்ளமோ எனும் பட்டயப் படிப்பு படித்தவர்களைத்தான் அதிகமாக நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. நிறுவனங்களில் உள்ள 'மிடில் லெவல்’ பணிகளுக்கு டிப்ளமோ படிப்பு படித்தவர்களே பொருத்தமானவர்களாக இருப்பார்கள். ஐ.டி.ஐ படிப்பு படித்தால் ஆட்டோமொபைல் பணிமனைகளில் வேலை கிடைக்கும்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு காரில் மெக்கானிக்கல் மட்டுமல்ல... எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் போன்ற தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. முழுக்க முழுக்க கணினியினால் கட்டுப்படுத்தப்படுகிற கார்கள்கூட வந்து விட்டன. இந்த நிலையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், புரோடக்ட் டிசைன் ஆகிய படிப்புகளைப் படித்தாலும் பிரகாசமாக வாய்ப்புகள் உள்ளன. மேலும், எந்தெந்த கல்லூரிகள் எந்தெந்த நிறுவனங்களுடன் 'டை அப்’ வைத்திருக்கின்றன; என்ன மாதிரியான பாடத் திட்டங்கள், பயிற்சிகள் வைத்திருக்கின்றன; கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள என்ன முயற்சிகள் எடுக்கின்றன என்பவை பற்றிய தகவல்களையும் தெரிந்துகொண்டு, மாணவர்கள் இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்!'' என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

அப்புறமென்ன... ஸ்டார்ட் பண்ணி வேகமெடுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick