இது என்ன பழக்கமோ!

>>எஸ்.ஷக்தி >> தி.விஜய்  

 

பிரேக்கைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லாத சூழலில், அதாவது எந்த தங்கு தடையுமில்லாமல் ஜிவ்வ்வ்வென பறக்கும் நிலையிலும்கூட பிரேக்கை லேசாக அழுத்தியபடியே செல்வது ஒரு பழக்கமாகவே பலருக்கும் ஆகிவிட்டது. ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வேளையிலும்கூட பிரேக்கையும் சேர்த்து மிதிக்கும் அளவுக்கு, பலர் பிரேக் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள்! கார் ஓட்டுபவர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. அதிலும், மலைப் பாதையில் இறங்குபவர்கள் பிரேக்கில் வைத்த காலை எடுப்பதேயில்லை.

'இப்படிச் செய்வதனால் வாகனத்துக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் வரும்’ என்பது பற்றி, கோவை பிரசன்னா ஹோண்டாவின் சர்வீஸ் பிரிவு மேலாளர் சந்தோஷ் நம்மிடம் சீரியஸாகப் பேசினார்.

''இந்தப் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. சாலையில் சென்றுகொண்டு இருக்கும் பல வாகனங்களின் பின் பக்கம் பார்த்தோம் என்றால், பிரேக் (ரெட்) லைட் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தால், பிரேக்கை அழுத்திக் கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க தவிர்க்கப்பட வேண்டிய செயல். தேவை இல்லாமல் தொடர்ந்து இப்படி பிரேக்கை உபயோகிப்பதன் மூலமாக பிரேக் டிஸ்க் அல்லது டிரம் மற்றும் பிரேக் பேடுகளில் (pads) உராய்வு உண்டாகிக்கொண்டே இருக்கும். இதனால், இந்த பாகங்கள் சீக்கிரமே தேய்ந்துவிடும். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் வரும். அது மட்டுமல்லாமல், பல சமயம் பிரேக் டிரம் அதிக சூடேறி, செயலிழந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

அதைவிட மிக முக்கியமான விஷயம், மைலேஜ் கணிசமாகப் பாதிக்கப்படுவதுதான். இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு 100 கி.மீ கிடைக்க வேண்டிய இடத்தில் 80 கி.மீதான் மைலேஜ் கிடைக்கும். காரோட்டுபவர்கள், மலைச் சாலையில் கீழிறங்கும்போது பல சமயம் டாப் கியரில் இறங்குவார்கள். வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரேக்கில் கால் வைத்தவாறே இறங்குவார்கள். இந்த மாதிரி சமயத்தில்தான் பிரேக் டிரம் சூடேறி கீறல் விழுந்து விடுவதுடன், ஆபத்திலும் முடிந்து விடலாம். பொதுவாக, 'எந்த கியரில் ஏறுகிறோமோ, அதே கியரில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம்’ என (இன்ஜினீயரிங் பிரின்ஸ்பல்) பொறியியல் விதியும்  சொல்கிறது!

அதனால், வாகனத்தின் உதிரி பாகங்களுக்கும், நம்மோட பர்ஸுக்கும் வேட்டு வைக்கும் இந்தப் பழக்கத்திலிருந்து உடனடியாக மீள வேண்டியது அவசியம்'' என்று எச்சரிக்கிறார் சந்தோஷ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick