வெயிலை வெல்வோம்!

உச்சியைப் பிளக்கும் வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. பவர் கட் நேரம் படிப்படியாக உயர்ந்துவிட்டது. ஏ.ஸி வைத்த காரும், ட்ராஃபிக் இல்லாத பைக் பயணமும் மட்டுமே சுகமானதாக இருக்க முடியும். ஆனால், வாகனத்தைக் கவனமாகப் பராமரிக்காவிட்டால் உங்களை வியர்வை மழையில் குளிப்பாட்டிவிடும். 

காரில் உள்ள ரப்பர் பாகங்கள், அதிகப்படியான வெயில் சூட்டினால் இளகி, தன்மை மாறும் வாய்ப்பு அதிகம். எனவே, அவற்றை முறையாகப் பராமரிப்பதும், சேதமடைந்த ரப்பர் பாகங்களை மாற்றுவதும் அவசியம்.

 

பேட்டரி சரியாக சார்ஜ் ஆகிறதா என்று சோதியுங்கள். அதேபோல், ஒயரிங் லைனில் எந்தக் கசிவும் இல்லாமல் இருக்க வேண்டும். சில சமயம் ஒயர் சேதமடைந்து இருந்தால், மின் கசிவும் வெப்பமும் ஒரே சமயத்தில் தாக்கும் போது தீப்பிடிக்க வாய்ப்பு உண்டு.

ஏ.ஸி சிஸ்டத்தை முழுமையாகச் சோதித்துப் பார்ப்பது அவசியம். கேஸ் குறைவாக இருந்தால் அதை நிரப்ப வேண்டும். அதேபோல், ஏ.ஸி கம்ப்ரஷரில் ஆயில் சீல், 'ஓ’ ரிங் போன்ற ரப்பர் பாகங்கள் இருக்கின்றன. இவை சரியான முறையில் இருக்கின்றனவா எனச் சோதிப்பது அவசியம். அதேபோல் கன்டன்ஸர் பெல்ட், கூலன்ட் பெல்ட் ஆகியவை தன்மை மாறாமல் இருக்க வேண்டும்.

வெயிலில் நிறுத்திய காருக்குள் ஏறுவதற்கு முன்பு, சிறிது நேரம் கதவுகளை நன்றாகத் திறந்து வையுங்கள். அப்போதுதான் காருக்குள் இருக்கும் வெப்பக் காற்று வெளியேறும்.

காரை ஸ்டார்ட் செய்யும்போது, கண்ணாடியைத் திறந்து வைத்துக் கொண்டு ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னர்தான் அடைக்க வேண்டும். அதேபோல், இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் போது ஏ.ஸி-யை ஆஃப் செய்து விட்டு, இன்ஜின் இயங்கியதும் ஏ.ஸி-யை ஆன் செய்ய வேண்டும். இது மிக முக்கியம்.

வெயிலில் காரை நிறுத்தி வைத்தால், வைப்பர் பிளேடுகளில் உள்ள ரப்பர் உதடுகள் (லிப்) சேதமடைந்து விடும். எனவே, வெயிலில் நிறுத்த நேரும்போது வைப்பரை உயர்த்தி வைப்பது நல்லது... அல்லது வைப்பருக்கும் விண்ட் ஷீல்டுக்கும் இடையே தெர்மோ கோல் சீட் வைக்கலாம்.

வெயிலில் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், காரை கவர் கொண்டு மூடி வையுங்கள். அப்போதுதான் காரின் வண்ணத்தை வெயிலில் இருந்து காப்பாற்ற முடியும்.

காரின் டயர்கள் தேய்ந்ததாக இல்லாமல், பட்டன்களுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், வெயிலால் தார் சாலையும் சூடாக இருக்கும் போது, டயரும் தேய்ந்து இருந்தால் வெடிக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல், டயர்களில் காற்றின் அளவை அடிக்கடி சோதித்துக் கொள்வது நல்லது.

கா.பாலமுருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick