''இன்ஷூரன்ஸ் பேப்பரை எடுங்க!''

சார்லஸ் 

 

ந்தியாவில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களில் 70 சதவிகிதம் பேர் வாகன இன்ஷூரன்ஸ் எடுப்பதில்லை என்கிறது புள்ளிவிவரம். ''கார்களுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் எடுத்தால் போதும்; பைக்குகளுக்கு எதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். பெரிசா பணம் எதுவும் கிடைக்காது'' என்பதுதான் பலரது கருத்து. ''இதையும் மீறி இன்ஷூரன்ஸ் எடுக்கும் 30 சதவிகிதம் பேர் போலீஸுக்குப் பயந்து இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள்தானே தவிர, அதைப் பற்றிய விழிப்பு உணர்வால் அல்ல!'' எனவும் கூறப்படுகிறது.

இன்று அதிக அளவில் விபத்துகளில் சிக்குவது இரண்டு சக்கர வாகனங்கள்தான்! இன்ஷூரன்ஸ் இல்லாத பைக்கை ஓட்டி, நீங்கள் அடுத்தவர்களை விபத்துக்குள்ளாக்கினால், அது கிரிமினில் குற்றம். அதேபோல், இன்ஷூரன்ஸ் இல்லாத பைக் காணாமல் போனால் ஒன்றுமே செய்ய முடியாது. பைக்கை பல நேரங்களில் தேடக்கூட மாட்டார்கள். அதேபோல், இப்போதெல்லாம் சென்னையில் அடிக்கடி பைக்குகளுக்கு தீ வைக்கும் விஷமம் நடக்கிறது. இன்ஷூரன்ஸ் இல்லாத பைக், தீ விபத்து ஏற்பட்டு தீக்கிரையானால் ஒரு ரூபாய்கூட திரும்பக் கிடைக்காது.

''இப்போதெல்லாம் பைக் இன்ஷூரன்ஸ் எடுப்பது என்பது 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரிதான். முன்புபோல் பைக்கை எடுத்துக்கொண்டு இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்குப் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், அங்கிருந்து யாராவது வந்து உங்கள் பைக்கை அலசும் அவசியமும் இல்லை. ரயில் டிக்கெட், சினிமா டிக்கெட் எடுப்பதுபோல ஆன் லைனிலேயே இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்க முடியும். உங்கள் பைக்கின் பெயர், முதன்முதலாக பைக் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்ட தேதியை அடித்தால் போதும். நீங்கள் எவ்வளவு பிரீமியம் கட்ட வேண்டும் என்ற விவரங்கள் இன்டர்நெட்டில் வந்துவிடும். அதன் பிறகு, உங்கள் பர்சனல் விவரங்களை நிரப்பிவிட்டுப் பணம் செலுத்திவிட்டால், உங்கள் இன்ஷூரன்ஸ் பேப்பரை அப்படியே பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம். எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை'' என்கிறார் ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அமிதாப் ஜெயின்.

இன்ஷூரன்ஸ் எடுத்த பிறகு, அதன் பிரின்ட் அவுட்டை எப்போதுமே பைக்கில் வைத்திருங்கள். பாலிஸி எண்ணை செல்போனில் பதிவு செய்து கொள்வது நல்லது. அதேபோல், நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்தின் கால் சென்டர் எண்ணையும் செல்போனில் குறித்து வைத்துக்கொள்ளும்போது, விபத்து ஏற்பட்டால் உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிக்க முடியும். விபத்து ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் சொல்ல மறக்காதீர்கள். விபத்தால் பைக் சேதமடைந்திருந்து, உடனடியாக நீங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்தால், உங்களுக்கு உரிய இன்ஷூரன்ஸ் பணம் திரும்பக் கிடைக்கும்!

இன்ஷூரன்ஸை அலட்சியப்படுத்துவதும், தாமதப்படுத்துவதும் பெரிய பிரச்னைகளில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறக்க வேண்டாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick