டாடாவின் 2 லட்ச ரூபாய் டீசல் கார்!

 

ந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே அதாவது, 1945-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் டாடா மோட்டார்ஸ். அப்போது 'டெல்கோ’ என அழைக்கப்பட்டது அது. 1945-ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டாலும் 1991-ம் ஆண்டுதான் 'சியாரா’ என்ற பெயரில் அது முதல் முதலாக பயணிகள் காரைத் தயாரித்து விற்பனைக்குக் களம் இறக்கியது. முழுக்க முழுக்க கமர்ஷியல் மற்றும் மல்ட்டி யுட்டிலிட்டி கார்களில் மட்டுமே கவனம் செலுத்திய டாடா, 1998-ம் ஆண்டு முதன் முதலாக இண்டிகாவை அறிமுகப்படுத்தி, சின்ன கார் மார்க்கெட்டில் அடி எடுத்து வைத்தது. இண்டிகா, டாக்ஸி மார்க்கெட்டைப் பிடித்ததே தவிர, மாருதி கார்களைப் போன்று மக்கள் காராக அடையாளம் பெறவில்லை. 

ரத்தன் டாடாவின் கனவு காரான 1 லட்ச ரூபாய் டாடா நானோ, 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் விலை குறைவான காரான டாடா நானோ, விற்பனையில் இப்போதுதான் வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், டாடாவுக்கு அடுத்து கார் மார்க்கெட்டில் களம் இறங்கிய மஹிந்திரா நிறுவனம், டாடா மோட்டார்ஸின் விற்பனையை அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. இது தவிர மாருதி, ஹூண்டாய், ரெனோ, நிஸான், ஹோண்டா, டொயோட்டா என கடும் போட்டி நிலவும் இந்திய மார்க்கெட்டில் சரியான கார்களைக் களம் இறக்காவிட்டால், இந்தியாவில் மார்க்கெட் அவுட் என்பதை உணர்ந்துவிட்டது டாடா!

9 மாதங்களில் 3 புதிய கார்கள் என்பதுதான் டாடாவின் ப்ளான். இதில் முக்கியமாக டாடா நானோவுக்கும், இண்டிகாவுக்கும் இடையே ஒரு சின்ன டீசல் காரைத் தயாரித்து வருகிறது டாடா. 'டால்ஃபின்’ என்ற குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்ட இந்த காரை, ஜாகுவார் டிசைனர்களைக் கொண்டு டாடா டிசைன் செய்து வருவதாக எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.

டால்ஃபின் மற்றும் நானோ டீசல் காருக்கான இன்ஜினை, கோவையில் உள்ள ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் டிசைன் செய்து டெஸ்ட் செய்து வருகிறது. இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்த காரை கடந்த மாதம் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் டெஸ்ட் செய்தார் நரேன் கார்த்திகேயன். இந்த டீசல் இன்ஜின் டெஸ்ட்டிங்குக்காக மும்பையில் இருந்து ரத்தன் டாடாவும் வந்திருந்தார். இது 800 சிசி திறன் கொண்ட, 3 சிலிண்டர், காமென் ரெயில் டீசல் இன்ஜினாக இருக்கும் எனத் தெரிகிறது.

அக்டோபர் இறுதியில் நானோ டீசல், பிறகு 2 லட்ச ரூபாய் டால்ஃபின், அதனைத் தொடர்ந்து சஃபாரி ஸ்டார்ம் என்று ஒவ்வொரு காராக அறிமுகப்படுத்துவதுதான் டாடாவின் திட்டம். புதிய பாதையில் பயணிக்க, டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனராக ஜெனரல் மோட்டார்ஸின் முன்னாள் தலைவரான கார்ல் ஸ்லிம்மை நியமித்திருக்கிறார் ரத்தன் டாடா. அக்டோபர் 1-ம் தேதி முதல் கார்ல் ஸ்லிம் டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்க இருக்கிறார். ஸ்டைலான, அதே சமயம் பெர்ஃபாமென்ஸிலும், மைலேஜிலும், தரத்திலும் சிறந்த, விலை குறைவான கார்களைக் களமிறக்கினால்... டாடாவுக்கு வெற்றி நிச்சயம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick