வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி?

 

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிய மறுதினமே மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு என்றதும், ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது. மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடக்கக் காரணமாக இருந்தது ஹம்மர் கார். உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் இந்த எஸ்யூவி, முறையான ஆவணங்களுடன் வாங்கப்பட்டதா என்பதை ஆராயத்தான் சிபிஐ சோதனை. இதில், உதயநிதியின் ஹம்மர் சிக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் மட்டும் 33 ஆடம்பர சொகுசு கார்கள் முறையான இறக்குமதி வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வாங்கி இருப்பதாகத் தெரிகிறது. 

கார்களை இறக்குமதி செய்ததில், அலெக்ஸ் சி.ஜோசப் என்பவர்தான் பெரும்பாலான கார்களை, போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து தந்தவர் எனத் தெரியவந்திருக்கிறது.

சரி, கார்களை முறைப்படி சட்டரீதியாக இறக்குமதி செய்யவது எப்படி?

கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்து தரும் 'எஸ்பிகே இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் அபிஷேக்கிடம் பேசினேன். அபிஷேக் 100 சதவிகிதம் சட்ட ரீதியாக கார், பைக்குகளை இறக்குமதி செய்துதருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

''நம் நாட்டில், கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்வதற்குத்தான் வரி அதிகம். கார் என்றால் 169 சதவிகிதமும் பைக் என்றால் 137 சதவிகிதமும் சுங்க வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் இரண்டு விதிமுறைகளின்படிதான் கார் மற்றும் பைக்குகளை இறக்குமதி செய்ய முடியும்.

இதில், முதல் விதிமுறை - ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ். இந்த முறைப்படி 40 ஆயிரம் யுஎஸ் டாலருக்கு (21 லட்சத்துக்கும் அதிகமான) மேல் விலைகொண்ட, 3,000 சிசிக்கும் மேல் இன்ஜின் திறன்கொண்ட பெட்ரோல் கார் அல்லது 2,500 சிசிக்கும் மேல் திறன்கொண்ட டீசல் கார்களைத்தான் இறக்குமதி செய்ய முடியும்.

உதாரணத்துக்கு, ஃபெராரி 458 இட்டாலியா காரை எடுத்துக்கொள்வோம். இத்தாலியில் இதன் விலை 1.37 கோடி ரூபாய். இந்த விலையில் 169 சதவிகிதம் வரி என்பது 2.32 கோடி ரூபாய். இதனுடன் ஷிப்பிங் செலவு 2 லட்சம். ஆக மொத்தம், காரின் விலை மட்டும் 3 கோடியே 71 லட்சம். இப்போது காரை இறக்குமதி செய்தபிறகு, தமிழ்நாட்டில் பதிவு செய்ய 10 லட்சத்துக்கும் அதிகம் விலை கொண்ட கார்களுக்கு, சாலை வரி 20 சதவிகிதம். 3 கோடியே 71 லட்சம் ரூபாய் விலைகொண்ட ஃபெராரி காருக்கு, சாலை வரி மட்டும் 74 லட்சம் ரூபாய். இப்போது காரின் விலை மட்டும் 4 கோடியே 45 லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. இதற்கு அடுத்து இன்ஷூரன்ஸ் 3.5 சதவிகிதம். ஆக மொத்தம், ஒரு ஃபெராரி இட்டாலியா 458 காரை நீங்கள் சென்னையில் வாங்கும்போது, அதன் விலை 4 கோடியே 50 லட்சம் ரூபாயை நெருங்கிவிடும். வரியாக மட்டுமே 3 கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்த வேண்டும்.  

அடுத்த விதிமுறைப்படி - 40 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 3 லிட்டர் பெட்ரோல் கார். அதேபோல், 2.5 லிட்டர் திறனுக்கும் குறைவான டீசல் காரை இறக்குமதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு வரி 137 சதவிகிதம். ஆனால், இங்கு பெரிய பிரச்னையே 'ஹோமோலகேஷன்’ செய்ய வேண்டும். அதாவது, காரை நீங்கள் இறக்குமதி செய்தவுடன், அதை புனேவில் உள்ள அராய் (Automotive Research Association of India) அலுவலகத்தில் ஒப்படைத்து ஹோமோலகேஷன் சான்றிதழ் பெற வேண்டும். அங்கு, ஹோமோலகேஷன் செய்து மீண்டும் காரை உங்களிடம் கொடுக்க குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும். அது மட்டுமல்ல, இதற்கு 15 - 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதனால், இந்த விதிமுறைக்கு கார் தயாரிப்பாளர்கள் மட்டுமே  வருவார்கள்.

அடுத்தமுறைதான் முக்கியமானதும் மோசடிகள் நடக்க அதிக வழிகளும் உள்ள முறை. 'டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்’ என்று சொல்லப்படும் டி.ஆர் முறை. இந்த முறையின்படி நீங்கள் பழைய காரை இறக்குமதி செய்ய முடியும். இந்த முறையில் நீங்கள் காரை இறக்குமதி செய்வதற்கு 170 சதவிகிதம் வரி கட்ட வேண்டும். மேலும், வெளிநாட்டில் யார் காரை வைத்திருக்கிறார்களோ, அவர் இந்தியாவில் நிரந்தரமாக செட்டில் ஆகிறார் என்றால் மட்டுமே இந்த முறையில் இறக்குமதி செய்ய முடியும். அதற்கு அவர், வெளிநாட்டில் குறைந்தது 2 ஆண்டுகளாவது தங்கி இருந்திருக்க வேண்டும் என்பதோடு, இறக்குமதி செய்கிற கார் அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுக்கும் மேலான பழைய காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. மேலும், இடது பக்க ஸ்டீயரிங்கொண்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாது. தூதரக அதிகாரிகள் மட்டுமே இடது பக்க ஸ்டீயரிங் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய முடியும்.

பழைய கார் எனும்போது டிப்ரிசியேஷன் (மதிப்பிறக்கம்) செய்ய முடியும். ஒரு ஆண்டு பழைய கார் என்றால், 16 சதவிகிதமும், 2-3 ஆண்டுகளுக்குள்ளான கார் என்றால், 12 சதவிகிதமும் மதிப்பிறக்கம் செய்ய முடியும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு மேலான கார் எனும்போது, காரின் விலையில் இருந்து அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மதிப்பிறக்கம் செய்ய முடியும்.

அதாவது, 2 கோடி ரூபாய் காருக்கு 80 லட்சம் ரூபாய் வரை டிப்ரிசியேஷன் கோர முடியும். அப்போது, காரின் விலை 1 கோடியே 20 லட்சமாகக் குறைந்துவிடும்.

இதில், ஹோட்டல்கள் மற்றும் கோல்ஃப் ரெசார்ட்டுகள் கார்களை இறக்குமதி செய்ய ஒருவழி இருக்கிறது. 'எக்ஸ்சேன்ஜ் ப்ரமோஷன் கேப்பிட்டல் கூட்ஸ்’ என்ற பிரிவின் கீழ் வெளிநாட்டு கார்களை இவர்கள் இறக்குமதி செய்யலாம். ஆனால், இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சம் 3 கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.

மோட்டார் சைக்கிள்

மோட்டார் சைக்கிள்களைப் பொறுத்தவரை, 800 சிசிக்கு அதிகமான திறன்கொண்ட பைக்குகளை மட்டுமே 'ஓ.ஜி.எல்’ பிரிவின்படி இறக்குமதி செய்ய முடியும். இதற்கு 137 சதவிகிதம் வரி.

கார்களைப் போலவே இங்கேயும் 800சிசிக்குக் குறைவான பைக்கை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு பைக்கை புனேவில் உள்ள அராய் நிறுவனத்துக்கு 'ஹோமோலகேஷன்’ செய்ய அனுப்ப வேண்டும். கார்களைப் போலவே பைக் முடிந்துவர 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை ஆகும் என்பதோடு, லட்சங்களில் செலவாகும்.

இதற்கு அடுத்தபடியாக டி.ஆர் முறைப்படி  பழைய பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால், இங்கே எத்தனை ஆண்டு பழைய மாடலாக இருந்தாலும் இம்போர்ட் பண்ணலாம். ஆனால், அதிகபட்சம் 40 சதவிகிதம்தான் மதிப்பிறக்கம் செய்ய முடியும். வெளிநாட்டில் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ, அவர் பெயரிலேயேதான் இங்கேயும் பதிவு செய்ய முடியும்.

 புது கார்களை இறக்குமதி செய்ய...

 வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்யப் பயன்படும் முக்கியமான இரண்டு முறைகள்...

முதல் வழி - ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ்

காரின் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் இருக்க வேண்டும். இன்ஜின் திறன் 3 லிட்டர் (பெட்ரோல்) அல்லது 2.5 லிட்டருக்கு (டீசல்) மேல் இருக்க வேண்டும். இதற்கு ஹோமோலகேஷன் தேவை இல்லை.

காரின் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். இன்ஜின் திறன் 2.5 லிட்டர் (பெட்ரோல்) அல்லது 3 லிட்டருக்குக் (டீசல்) குறைவாக இருந்தால், புனேவில் உள்ள அராய் மையத்தில் ஹோமோலகேஷன் செய்ய வேண்டும். இதற்கு 15 - 20 லட்சம் ரூபாய் செலவாகும். 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இரண்டாவது வழி - டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்

இந்தியராக இருக்க வேண்டும்.  வெளிநாட்டில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் அவர் தங்கி இருந்திருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அந்த வாகனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு, குறைந்தது ஒரு ஆண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். இதற்கு வரி 170 சதவிகிதம்.

 போலி ஆவணங்கள் மூலம் எப்படி மோசடி நடக்கிறது?

 போலி ஆவணங்கள் மூலம் கார், பைக்குகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலும் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் துணை இல்லாமல் செய்ய முடியாது. போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்துதரும் புரோக்கர்கள், கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். இப்போது துபாயில் இருந்து ஒரு புதிய லேண்ட் க்ரூஸர் காரை இறக்குமதி செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம். முதலில் துபாயில் அந்த காரின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட்டில் ஏற்கெனவே அங்கே பதிவு செய்யப்பட்ட பழைய காரின் இன்ஜின் நம்பர், மற்றும் சேஸி நம்பரை வைத்து மாற்றிவிடுவார்கள். புது காரை 2 ஆண்டுகள் ஆன பழைய கார் போல மாற்றிவிட்டு, 40 சதவிகிதம் வரை டிப்ரிசேஷனும் க்ளெய்ம் செய்வார்கள்.  

 வெளிநாட்டு  கார்கள் வைத்திருக்கும் கோடீஸ்வர அரசியல்வாதிகள்!

 திமுக தலைவர் கருணாநிதி, டொயோட்டா ஆல்ஃபர்ட் கார் வைத்திருக்கிறார். இந்தியாவில் இது விற்பனைக்கு இல்லை. இதை வாங்க வேண்டும் என்றால், ஜப்பான் அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அமெரிக்காவில் இந்த காரின் விலை 25 லட்சம் ரூபாய். இந்தியாவுக்குள் இதைக் கொண்டுவரும்போது காரின் விலை 1 கோடி ரூபாயை நெருங்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 கார் வைத்திருக்கிறார். இந்த கார், தற்போது சென்னையிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் விலை 1 கோடியே 41 லட்சம்.

மு.க.ஸ்டாலின் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் வைத்திருக்கிறார். இதுவும் தற்போது சென்னையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரின் விலை 1 கோடியே 9 லட்சம் ரூபாய்.

 கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 4,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. லம்போகினி, ஃபெராரி உள்ளிட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதன் மூலம், அரசுக்கு ஒரு காருக்கு 1.5 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

 சார்லஸ்

அபிஷேக் மொபைல் எண் - 9840718534

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick