அலட்டல் அலாய்!

 

ந்த காரிலும் அதன் சாதாரண ஸ்டீல் வீல்களை எடுத்துவிட்டு, அலாய் வீல்களைப் பொருத்தினால், கூடுதல் ஸ்டைலாகத் தெரியும். அலாய் வீல்கள் சுமாரான கார்களைக்கூட 'கெத்’தாகக் காண்பிக்கும்! பெரும்பாலான விலை உயர்ந்த கார்களில், அலாய் வீல்கள் காருடனே அளிக்கப்படுகிறது. ஆனால், 15 லட்சத்துக்கும் குறைவான விலையில் உள்ள கார்களில் (விலை குறைந்த வேரியன்ட்) அலாய் வீல்கள் காருடன் வருவதில்லை. அந்த கார்களுக்கு நாம்தான் வெளிமார்க்கெட்டில் வாங்கி பொருத்திக்கொள்ள வேண்டும். 

இப்போது சந்தையில் உள்ள அலாய் வீல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இரண்டு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை. இவற்றில், நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அலாய் வீல்களுக்கு வாரன்டி கிடைக்கும். அதாவது, நான்கு வீல்களில் ஏதாவது ஒரு வீலில் மட்டும் பிரச்னை என்றால், அதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வீல்களில் ஒன்றில் பிரச்னை என்றாலும், நான்கையும் சேர்த்து ஒரு புதிய செட்டாகத்தான் வாங்க முடியும்! மேலும், அலாய் வீல் மாற்றியவுடன் வீல் பேலன்ஸிங் செய்ய வேண்டியது அவசியம்! இறக்குமதி செய்யப்பட்ட அலாய் வீல்களில் உள்ள மிகப் பெரிய நன்மை என்னவென்றால், விதவிதமான டிசைன்கள் தான். சில அலாய் வீல் டிசைன்கள் சும்மா ஆளை அசரடிக்கும்!

சென்னையைச் சேர்ந்த அலாய் வீல் டீலர் மதன்லாலிடம் அலாய் வீலின் சாதக பாதகங்கள் குறித்து கேட்டோம்.

''தமிழ்நாட்டில் அலாய் வீலுக்கான சந்தை எப்படி இருக்கிறது?''

''அலாய் வீல்கள் நம் நாட்டில் அறிமுகமான போது இருந்த வரவேற்பை விட, இப்போது வரவேற்பு நன்றாகவே உள்ளது. மக்கள் புத்தகங்களிலும் இணையத்திலும் நிறைய தெரிந்து கொண்டே வருவதால், அலாய் வீலைப் பற்றி அவர்களுக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. அலாய் வீலினால் கிடைக்கும் தொழில்நுட்ப நன்மைகளைவிட, வெளியே தன்னுடைய கார் மிகவும் ஸ்டைலான கார் என்பதைக் காண்பிக்கவே நிறைய பேர் விரும்புகிறார்கள்.  

விலையைவிட வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸ், பெரும்பாலும் அவர்களுக்குப் பிடித்த டிசைனாக இருக்கிறதா என்பதுதான். வெகு சிலர்தான் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் வருகின்றனர்!''

''அலாய் வீலுக்கும் சாதாரண ஸ்டீல் வீலுக்கும் என்ன வித்தியாசம்?''

''இரண்டுக்கும் உள்ள அடிப்படைத் தொழில்நுட்பமே வித்தியாசமானது. அலாய் வீலில் அலுமினியம் மற்றும் மெக்னீசியம் சேர்ந்த உலோகக் கலவை பயன்படுத்தப் படுகிறது. பின்னர் கேஸ்டிங், ஃபோர்ஜிங் போன்ற தயாரிப்பு முறைகள் மூலம் வீல் உருவாக்கப்பட்டு, பாலிஷ் செய்யப்படும். அலாய் வீல் அவ்வளவு சீக்கிரம் வளைந்து போகாது. ஆனால், ஸ்டீல் வீல்கள் விரைவில் வளைந்துவிடும். இப்போது எல்லா கார்களிலும் டியூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்படுகிறது. டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட ஸ்டீல் வீல் வளைந்து போனால், அதில் காற்று நிற்காது. மேலும், அலாய் வீல் எடை குறைவு என்பதால், காரின் ஸ்டெபிளிட்டி அதிகரிக்கும். பிரேக்கில் உருவாகும் வெப்பம், அதிக காற்று வீலில் படுவதால் விரைவில் தணிந்துவிடும். இதனால் பிரேக்குகளின் வாழ்நாள் அதிகரிக்கும். அவ்வளவு சீக்கிரம் துருப்பிடிக்காது. இவை எல்லாவற்றையும்விட அலாய் வீல் பொருத்தினால், அது காரை மேலும் அழகாகக் காட்டும் என்பதுதான் முக்கியமான ப்ளஸ் பாயின்ட்!''

''இறக்குமதி செய்யப்பட்ட அலாய் வீலுக்கும், உள்நாட்டு அலாய் வீலுக்கும் என்ன வித்தியாசம்?''

''தற்போது மார்க்கெட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அலாய் வீல்கள்தான் நிறைய விற்பனை ஆகின்றன. காரணம், அவை விதவிதமான டிசைன்களில் வருவதுதான். மேலும், அவை உலகத் தரத்தில் தயாரிக்கப்படுவதால், மக்களிடம் அது ஒரு தரமான பொருள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தைவான், சீனா, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து அலாய் வீல்கள் இறக்குமதி செய்யப்படுகிறன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் அலாய் வீல்கள் விதவிதமான டிசைன்களில் வருவதில்லை. இதில் எந்த வகையான அலாய் வீல்களுக்கும் வாரன்டியும் கிடையாது. மேடு பள்ளமான சாலைகளில் வேகமாகச் சென்று அதை சேதப்படுத்தினால்தான் பிரச்னை!''

''அலாய் வீல்களின் விலை?''

''அலாய் வீல்களின் விலை அதன் சைஸ், பிராண்ட் மற்றும் டிசைனைப் பொறுத்து அமையும். உதாரணமாக, ஒரு செட் 13 இஞ்ச் வீல்கள் 10,000 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரை கிடைக்கிறது. சூப்பர் டிசைன் என்றால், இன்னும் கொஞ்சம் கூடும். ஒரு செட் 14 இஞ்ச் வீல்கள் 13,000 ரூபாய் முதல் 16,000 வரை இருக்கும். 15 இஞ்ச் அலாய் வீல்கள் என்றால், 20,000 ரூபாய்க்கு மேல் ஆகலாம். எல்லா விலையும் டிசைனைப் பொறுத்து மாறும்.''

''என்னென்ன பிராண்டுகள் தற்போது மார்க்கெட்டில் பரபரப்பாக விற்பனை ஆகின்றன?''

''ப்ளிட்ஸ், லென்ஸொ, ஹெச்ஆர், ப்ரெஸ்டீஜ், ஸ்டார் போன்ற பிராண்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.''

''அலாய் வீல்களுக்கு என ஸ்பெஷல் பராமரிப்பு தேவையா?''

''ஸ்பெஷல் பராமரிப்பு தேவையில்லை. அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும். ஆனால், அலாய் வீல்கள் வாங்கும்போது சிறிது கவனம் தேவை. உதாரணமாக, டயர் இல்லாமல் 16 இஞ்ச் விட்டம் கொண்ட ஸ்டீல் வீலை மட்டும் மாற்ற வேண்டுமானால், 16 இஞ்ச் விட்டம் கொண்ட அலாய் வீல்தான் மாற்ற வேண்டும். பெரிய சைஸ் அலாய் வீல் வேண்டும் என்றால், அதற்கேற்ப டயர் அளவையும் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கையாளுமையில் மாற்றம் ஏற்படும்!''

 

ர.ராஜா ராமமூர்த்தி  >> ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick