வருகிறது டட்சன் பட்ஜெட் கார்!

ஆல்ட்டோவுக்குப் போட்டி!

 

திரடித் திட்டங்களுடன் தயாராகிவிட்டது நிஸான். இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால், மாருதி ஏற்கெனவே போட்டு வைத்திருக்கும் வழிதான் சரியான வழி என்பது நிஸானுக்குப் புரிந்துவிட்டது. 2012-ம் ஆண்டின் துவக்கத்தில், தனது பழைய பிராண்டான டட்சன் மூலம் விலை குறைவான பட்ஜெட் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக அறிவித்தது நிஸான். மூன்று லட்ச ரூபாய் விலையில் நிஸான் அறிமுகப்படுத்த இருக்கும் டட்சன் கார்தான், ஆல்ட்டோவுடன் நேரடியாகப் போட்டி போட இருக்கும் கார். 

சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் தயாராக இருக்கும் டட்சனின் இந்த சின்ன காரை, ஜூலை மாதம் 15-ம் தேதி டெல்லியில் அறிமுகப்படுத்த இருக்கிறார் ரெனோ - நிஸான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோன்.

இரு சக்கர வாகன ஓட்டிகளை டார்கெட் செய்து, 1 லட்ச ரூபாய் கார் என அறிவித்து, எல்லோரும் வாங்கிவிடுவார்கள் எனக் கணக்குப் போட்டது டாடா. ஆனால், டாடாவின் கனவு - கார் விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே தகர்ந்துபோனது. மாதந்தோறும் 25,000 மேல் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நானோ, 2013 மே மாத விற்பனை வெறும் 1,014 கார்கள் மட்டுமே!

''இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக, நிச்சயம் ஒரு காரைத் தயாரிக்க முடியாது. இரு சக்கர வாகனத்தின் மைலேஜை நிச்சயம் எந்த காரும் தராது. இரு சக்கர வாகனம் என்றால், பார்க்கிங் பிரச்னை இல்லை, டிராஃபிக் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து, சீக்கிரம் போக வேண்டிய இடத்துக்குப் போகலாம் என இரு சக்கர வாகனங்களுக்கு இருக்கும் பலங்கள் எதையுமே ஒரு காரால் ஈடுகட்ட முடியாது. அதனால், நாங்கள் இரு சக்கர வாகனத்துக்குப் போட்டியாக ஒரு காரைத் தயாரிக்கவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகள், முதல் காராக வாங்கக்கூடிய குறைந்த விலை, அதே சமயம் தரமான காரைத்தான் தயாரிக்கிறோம். வார நாட்களில் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்திவிட்டு, வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் காரில் பயணிக்க விரும்பும் மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள்தான் எங்கள் டார்கெட்'' என்று சொல்லியிருக்கிறார் டட்சன் கார்கள் பிரிவுத் துணைத் தலைவர் வின்சென்ட் கோபி. நானோ விஷயத்தில் டாடா செய்த தவறைச் செய்துவிடக் கூடாது என்பதில், நிஸான் கவனமாக இருப்பது புரிகிறது.

டட்சன் கார்களுக்கென்று சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் தனி அசெம்ப்ளி லைன் தயாராகிவருகிறது. 'கே2’ எனும் குறியீட்டு எண்ணுடன் அழைக்கப்படும் டட்சனின் முதல் கார், மாருதி ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயானுடன் போட்டி போடும். இந்த காரின் மார்க்கெட்டிங் திட்டமே, மாருதி ஆல்ட்டோவைவிட 30 சதவிகிதம் வரை விலை குறைவான காராக விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே! அந்த வகையில் பார்த்தால், ஆல்ட்டோவின் பேஸிக் மாடல் சென்னை ஆன் ரோடு விலை 3,05,000 ரூபாய். இதை விடக் கிட்டத்தட்ட 90,000 ரூபாய் குறைவாக டட்சன் கார் விற்பனைக்கு வரும் என்பதால், அந்த காரைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது.

டட்சனின் முதல் கார், நிஸான் மைக்ரா அளவுக்கு நீள, அகல, உயர அளவுகளில் பெரிய காராக இருப்பதால் இதை நானோ, ஆல்ட்டோ போன்று சின்ன கார் என ஒதுக்கிவிட முடியாது. மைக்ராவில் இருக்கும் அதே பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட இருக்கிறது என்றாலும், 1 லிட்டர் இன்ஜினாக சிசி திறன் குறைக்கப்படும். அதேபோல், மைலேஜ் அதிகம் கிடைக்கும் வகையில் இதன் பவரும் கிட்டத்தட்ட 60bhp அளவுக்கு குறைக்கப்படும் எனத் தெரிகிறது. எடையிலும் மைக்ராவைவிட 100 கிலோவுக்கும் மேல் டட்சன் காரின் எடை குறைவாக இருக்கும் என்பதால், பிக்-அப் மற்றும் மைலேஜும் அதிகமாக இருக்கும் என நம்பலாம்.

சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, மைக்ராவில் இருப்பது போலவே மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், டார்ஷன் பீம் சஸ்பென்ஷனே டட்சன் காரிலும் பொருத்தப்பட இருக்கிறது. இதனால், மேடு பள்ளங்களைச் சமாளிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், டயர்களைப் பொருத்தவரை மைக்ராவில் இருக்கும் 14 இன்ச் டயர்களுக்குப் பதில், 13 இன்ச் டயர்கள் இதில் பொருத்தப்பட இருக்கின்றன.

டட்சனின் முதல் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. வெறும் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே. 3-4 லட்ச ரூபாய் கார் மார்க்கெட்டில் டீசல் தேவையில்லை என்கிறது நிஸான். பெரும்பாலும் நகருக்குள் பயணிக்கப் போகிற இந்த காரில், டீசல் இன்ஜின் கொண்ட மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்தாலும், அது அதிகம் விற்காது என்பது நிஸானின் வாதம்.

கே2 காரைத் தொடர்ந்து மாருதி ஸ்விஃப்ட் காருக்குப் போட்டியாக, மற்றும் ஒரு விலை குறைவான ஹேட்ச்பேக் காரையும், டிசையர் காருக்குப் போட்டியாக, மிட் சைஸ் செடான் காரையும் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது டட்சன். இரண்டு கார்களுமே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

நிஸான் டீலர்ஷிப்புகளில் டட்சன் கார்களுக்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட இருக்கிறது. மாருதி, ஹூண்டாய் கார்களுடன் மோத வேண்டும் என்றால், இந்தியா முழுக்க டீலர்ஷிப்புகளை அமைத்தால் மட்டுமே முடியும் என்பதால், ஒவ்வொரு ஊர்களிலும் புதிய டீலர்ஷிப்புகளை அமைத்துவருகிறது நிஸான். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், கோவை என ஏழு ஊர்களில் டீலர்ஷிப்புகளை அமைத்திருக்கும் நிஸான், விரைவில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் டீலர்ஷிப்புகளைத் துவங்க இருக்கிறது.

2014-ம் ஆண்டில் இருந்து, மாருதியின் மார்க்கெட்டைப் பிடிக்க நிஸான் - டட்சன் ரெடி!

 பெயர்க் காரணம்!

அமெரிக்காவில் இன்ஜினீயராகப் பணிபுரிந்த மசுஜிரோ ஹசிமோட்டோ என்பவர், 1914-ம் ஆண்டு தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'டட் (DAT)மோட்டார் கார்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார். DAT என்பது மூன்று நண்பர்களின் இன்ஷியல். பெரிய கார்களைத் தயாரித்து வந்த இந்த நிறுவனம், சின்ன கார் ஒன்றைத் தயாரித்து அதை சன் (SON) எனப் பெயரிட்டது. இதன் மூலம்தான் 'டட்சன்’ என்ற பெயர் வந்தது. 1933-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தை ஜப்பானின் நிஸான் நிறுவனம் வாங்கி, DATSON என்ற பெயரை DATSUN என மாற்றியது. SON என்றால் ஜப்பானிய மொழியில் நஷ்டம் என்கிற அர்த்தம் வருவதால்தான் SUN என மாற்றியது நிஸான். ஜப்பானின் தேசியக் கொடியில் சூரியன் இடம் பெற்றிருப்பதால் 'சன்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது நிஸான். டட்சன் கார்களின் தயாரிப்பு 1986-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick