டூரரா... ஸ்போர்ட்ஸ் பைக்கா?

BENELLI TNT 600i Vs BENELLI TNT 600 GTதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

 இத்தாலியில் டிஸைன் செய்யப்பட்டு, சீனாவில் தயாரிக்கப்படுகின்றன, பெனெல்லி பைக்குகள். இது இந்தியாவில், DSK-பெனெல்லி என்ற பெயரில், DSK நிறுவனம் மூலம் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெனெல்லியின் கவனம் குவிந்திருப்பது, 600 சிசி செக்மென்ட் மீதுதான். சூப்பர் பைக்குளை சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட சிரமமாக இருக்கிறது என்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ், இந்த செக்மென்ட்தான். இந்த செக்மென்ட்டில் TNT 600i, TNT 600 GT என இரண்டு பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வருகிறது பெனெல்லி. 600i, பக்கா ஸ்ட்ரீட் பைக்; 600 GT, டூரர் பைக். இரண்டையும் டெஸ்ட் செய்தோம்.

டிஸைன்

இரண்டுமே அடிப்படையில் ஒரே பைக் தான் என்றாலும், வெவ்வேறுவிதமான வாடிக்கையாளர்களுக்கானது என்பதால், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 600 GT டூரர் பைக்கின் டிஸைன், சாலையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைக்கும். இண்டிகேட்டர்கள், ஹெட்லைட்ஸ் - பைக்கின் முன்பக்க டிஸைனோடு இயைந்து இருக்கின்றன. 600i ஸ்டீரீட் பைக் ஸ்டைலாக இருந்தாலும், ஃபேரிங் டிஸைன் இத்தாலிய பைக்குகளுக்கே உரிய கைவண்ணம் இல்லாமல், பார்க்க சாதாரணமாக இருக்கிறது.

இரண்டு பைக்குகளின் ஒட்டுமொத்த டிஸைன், கச்சிதமான அளவுகோல்களில் இருக்கின்றன. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் கவர்ச்சியாக இருக்கிறது. 600i பைக்கின் இருக்கைகள் ஸ்ப்ளிட் டைப். 600 GT பைக்கில், டூரர் பைக்குக்கான ஸ்டைலில் அகலமான இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 600i பைக்கில் அண்டர் சீட் எக்ஸாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளின் ஒட்டுமொத்த தரமும் குறை சொல்லமுடியாத அளவு இருந்தாலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்விட்ச் கியர் இன்னும் லேட்டஸ்ட் டிஸைனில் இருந்திருக்-கலாம். பெரிய அலாய் ஸ்விங் ஆர்ம்ஸ், ஸ்டைலான அலாய் வீல்கள், அகலமான டயர்கள் இவற்றுக்கு கட்டுமஸ்தான தோற்றத்தைக் கொடுக்கின்றன. 600 GT பைக்கில் இருக்கும் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆப்ஷனலாகக் கிடைக்கிறது. இதற்கென தனி சாவியும் உண்டு. பைக்குக்காக ஃப்ளிப் டைப் சாவி அளிக்கப்படுகிறது.

இன்ஜின்

பெனெல்லி 600i, 600 GT: இரண்டும் இரண்டு விதமாக ட்யூன் செய்யப்பட்டிருந்தாலும், இரண்டிலும் இருப்பது ஒரே 600சிசி இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின்தான். கேபிள் மூலம் இயங்கும் கிளட்ச் சிஸ்டம், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இரண்டுக்கும் பொதுவானது. இரண்டு பைக்குகளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், எக்ஸாஸ்ட் பைப். 600i பைக்கில் இருக்கைக்கு அடியில் அண்டர் சீட் டைப் எக்ஸாஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. GT பைக்கில் வழக்கமான இடத்தில் எக்ஸாஸ்ட் உள்ளது.

இந்த 600சிசி இன்ஜின் 600i பைக்கில் 80.5 bhp சக்தியை 11,500 ஆர்பிஎம்மிலும், 600 GT பைக்கில் 11,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. முக்கியமான டியூனிங், டார்க்கில்தான். GT பைக்கில் 5.6 kgm டார்க் 8,000 ஆர்பிஎம்-லேயே கிடைத்துவிட, 600i பைக்கில் 5.3 kgm 10,500 ஆர்பிஎம்-ல்தான் கிடைக்கிறது.
டியூனிங், எக்ஸாஸ்ட் பைப் செட்டப் போன்ற வித்தியாசங்களால், ‘இரண்டு பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தானே’ என்ற உணர்வு இல்லை. 600i ஒரு பக்கா ஜாலி பைக்குக்கான சத்தத்தைக் எழுப்புகிறது. எக்ஸாஸ்ட் சத்தம் ‘இன்னும்... இன்னும்’ என ஆக்ஸிலரேட்டரைத் திருக வைக்கிறது. ஆனால், GT பைக்கின் இன்ஜின் ஒரு பக்குவப்பட்ட ஜீவனைப்போல நிதானமாக இயங்குகிறது. இயக்கத்தைப் பொறுத்த வரை செம ஸ்மூத். அதிர்வுகள் இல்லை.

கையாளுமை

600i பைக்கின் ரைடிங் பொசிஷன் ஸ்ட்ரீட் பைக்குக்கான அமைப்பில் இருக்கிறது. GT பைக், டூரருக்கான ரைடிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது. இரண்டு பைக்குகளின் முன்பக்கம் Marzocchi சஸ்பென்ஷன் கச்சிதமாகப் பொருந்துகிறது. பின்பக்கம் உள்ள மோனோஷாக் சஸ்பென்ஷனை, ஸ்பெஷல் டூல்ஸ் இல்லாமலேயே அட்ஜஸ்ட் செய்யலாம்.  இரண்டு வீல்களுக்கும் பைரலி டயர்கள். அதேபோல், முன்னும் பின்னும் 320 மிமீ ரேடியல் மவுன்ட்டட், 4 பிஸ்டன் மோனோபிளாக் பிரெம்போ காலிபர் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

ஓட்டுதல் தரம் ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பது ப்ளஸ். இரண்டு பைக்குகளின் டர்னிங் ரேடியஸுமே சற்று அகலம். இதனால் நகருக்குள் சட்டென யு-டர்ன் அடிப்பதெல்லாம் கொஞ்சம் சிரமம். பிரேக்குகள் மிகச் சிறப்பாக இயங்கினாலும், ஏபிஎஸ் இல்லாதது மைனஸ்.

இந்த 600 சிசி செக்மென்ட்டின் ராஜா என்றால், அது கவாஸாகிதான். நின்ஜா பைக்குடன் கவாஸாகி இங்கே நல்ல விற்பனையைக் காட்டியது. சமீபத்தில் அறிமுகமான கவாஸாகி ER-6n பைக்கும் இதே செக்மென்ட்தான். ஆனால், இந்த இரண்டு பைக்குகளிலும் இருப்பது, 2 சிலிண்டர் இன்ஜின்கள்தான். ஆனால் பெனெல்லி பைக்குகளில் இருப்பது தரமான இன்-லைன் 4 சிலிண்டர் பைக்குகள். 600i பைக்தான் ஓட்டவும், சத்தத்திலும் மிரட்டலாக இருக்கிறது. 600 GT ஒரு பக்குவப்பட்ட தொலைதூர ஓட்டுநருக்கான பைக்காக இருக்கிறது. எனவே, இந்த இரு பைக்குகளின் வெற்றியை நிர்ணயிக்கப்போவது விலை மட்டுமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick