போதையின் பாதை!

ர.ராஜா ராமமூர்த்தி

கடந்த  அக்டோபர் 13ம் தேதி அதிகாலை. சென்னை வேளச்சேரி  தரமணி சாலையில் கட்டுப்பாடின்றி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. குறுக்கே ஒரு மாடு வர, அதன்மீது மோதி, அருகில் இருந்த நடைபாதையில் ஏறி தறிகெட்டு ஓடியது. சில விநாடிகளில் அங்கே ஒரு குடும்பத்தையே பலிகொண்டு, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது, மதுவின் கைப்பிடிக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த டாக்ஸி.

அந்த டாக்ஸியை ஓட்டியவரும், அதில் இருந்தவர்களும் மதுவின் தாக்கத்தில் இருந்தனர். நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாவின் மீதும், அவருடைய கணவரின்மீதும், ஒரு மூதாட்டியின்மீதும் கார் ஏறி இறங்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் ஒரு வயதே ஆகும் குழந்தை அன்பு, சற்றுத் தள்ளிப் படுத்திருந்ததால் தப்பித்தான். இந்த மொத்தச் சம்பவம் நடந்து முடிவதற்கு மூன்று விநாடிகள்தான் ஆகியிருக்கும். ஆனால், மூன்று உயிர்களைப் பறித்து, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது மது. காரில் இருந்தவர்களை காவல்துறை கைது செய்தது. இது விபத்து அல்ல; திட்டமிடப்படாத ஒரு கொலை. இப்போது அன்புக்கு யார் பதில் சொல்வது? மதுவின் பிடியில் கார் ஓட்டிவந்தவர்களா, டாஸ்மாக்கா, தமிழக அரசா, தமிழக மக்களா?

ஒவ்வொரு முறையும் இதுபோன்று ஒரு விபத்து நடந்தபிறகு, காவல்துறை குடிபோதையில் கார் ஓட்டுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக ஸ்டேட்மென்ட் விடுவதைப் பார்க்கலாம். இந்த விஷயத்தில் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், இன்னும் கடுமையான அணுகுமுறையை நிச்சயம் பின்பற்ற முடியும். சென்னை நகரின் மூலை முடுக்குகளில் நள்ளிரவில் காவல்துறை, வாகன ஓட்டிகளைச் சோதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. டாஸ்மாக்கின் வாசலிலும், நட்சத்திர ஹோட்டல்களின் வாசலிலும் நின்றுகொண்டு சோதனை செய்யவேண்டிய டிராஃபிக் போலீஸார், அங்கே நின்றுகொண்டு போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இங்கு சோதனை செய்தால், எத்தனை பேரைப் பிடிக்க முடியும் என்பது தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் காவல்துறைக்கு உத்தரவிடவேண்டிய தமிழக அரசின் கையைக் கட்டிப்போட்டிருப்பது எது?  

குடிபோதையில் வருபவர்களைப் பிடிக்க நிற்கும் காவலர்களின் நிலைமையும் மோசம்தான். உயர் அதிகாரியிடம்தான் ப்ரெத்தலைஸர் மெஷின் இருக்கும். மற்ற அதிகாரிகள் தங்கள் மேல் ஊதச் சொல்லித்தான் கண்டுபிடிக்கின்றனர். ஒரு விநாடி, அவர்களுடைய இடத்தில் நம்மை நிறுத்திப் பாருங்கள். எவ்வளவு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு காவலருக்குமே ஒரு ப்ரெத்தலைஸர் மெஷின் கொடுக்கலாம் அல்லவா? (இந்த ப்ரெத்தலைஸர் மெஷினில் ஊதும் குழலை மாற்றாமலே ஊதச் சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம்). சில 'உயர் ரக’ குடிமகன்கள், காவலர்களை மதிப்பதுகூட இல்லை.  

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கடுமையான சட்டங்களாலும், அபராதங்களாலும் திருத்த முடியாது. மனநிலையில் மாற்றம் இருந்தால்தான், மது அருந்தக் கூடாது என்ற தனிநலனும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்ற பொதுநலனும் உருவாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick