வருது பெனெல்லி!

பெனெல்லி BN302தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

எதிர்பாராத நேரத்தில், இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குக் கிடைத்த சர்ப்ரைஸ், பெனெல்லியின் வரவு. இத்தாலியின் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி, இந்தியாவின் DSK-மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவுக்குள் அடி எடுத்துவைக்கிறது.

பெனெல்லி, 300 சிசியில் இருந்து 1,130 சிசி வரை உள்ள ஐந்து பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. இதில் 300 சிசி, ட்வின் சிலிண்டர் BN302 மாடல்தான் விலை குறைந்த பைக்காக இருக்கும்.

இத்தாலி டிஸைன் பைக்கான BN302, தற்போது இந்தியாவில் இருக்கும் மற்ற பைக்குகளைப்போல கரடுமுரடான தோற்றம் அதிகம் இல்லாமல், கொஞ்சம் சாஃப்ட் டிஸைனைக்கொண்ட பைக்காக இருக்கிறது. பெட்ரோல் டேங்க் மிக அழகான டிஸைனைக்கொண்டுள்ளது. அலாய் வீல்கள் ஸ்லிம் ஸ்போக் டிஸைனைக் கொண்டிருக்கின்றன. லிக்விட் கூல்டு இன்ஜின்கொண்ட இந்த பைக்கில், ஸ்டீல் ட்யூப் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது.

BN302 பைக்கில் இருப்பது பேரலல் ட்வின், ஃப்யூல் - இன்ஜெக்டட், லிக்விட் கூல்டு, 300 சிசி இன்ஜின். ஒவ்வொரு சிலிண்டருக்கும் நான்கு வால்வுகள். 11,500 ஆர்பிஎம்-ல் 36.2bhp சக்தியையும், 9,000 ஆர்பிஎம்-ல் 2.7 kgm டார்க்கையும் அளிக்கிறது இந்த இன்ஜின். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கி.மீ-க்கு மேல். பெனெல்லி பைக்குகள் பெர்ஃபாமென்ஸ் டியூனிங் கொண்டவை என்பதால், பைக்கின் திராட்டில் ரெஸ்பான்ஸும், எக்ஸாஸ்ட் சத்தமும் மிரட்டலாக இருக்கும்.

தலைகீழாக அமைக்கப்பட்ட 41 மிமீ அப்சைடு டவுன் (Upside Down) ஃபோர்க் சஸ்பென்ஷனையும், பக்கவாட்டு முறையில் அமைக்கப்பட்ட பின்பக்க ஷாக் அப்ஸார்பரையும் கொண்டுள்ளது பெனெல்லி BN302. முன் பக்கம் 260 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின் பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இரண்டிலுமே வென்டிலேட்டட், பெட்டல் டைப் ரோட்டார்கள் உள்ளன. சீட் பொசிஷன் நேராகவும், ஹேண்டில்பார் பிடித்து ஓட்ட மிக வசதியாகவும் உள்ளது.

இந்த செக்மென்ட்டில் கவாஸாகி - நின்ஜா 300, Z250 என இரண்டு பைக்குளை விற்பனை செய்கிறது. 250 சிசி பைக்கான சுஸூகியின் இனஸுமா போட்டியில் இருந்தாலும், மார்க்கெட் லீடர் 200 மற்றும் 390 கேடிஎம் டியூக் பைக்குகள்தான். காரணம், விலை 2.50 லட்சம் ரூபாய்க்குள் பெனெல்லி விற்பனைக்கு வந்தால், கேடிஎம் பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பெனெல்லி!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick