DSG கியர்பாக்ஸ்... எது பெஸ்ட்?

தொகுப்பு:ர.ராஜா ராமமூர்த்தி

வாசகர்கள் கேட்கும் கேள்விகளில், பதில் சொல்ல சிக்கலானது, ‘ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களில் எதை வாங்கலாம்?’ என்பதுதான். ஏனெனில், இரண்டு கார்களுமே பார்க்க, ஓட்ட, பயணிக்க ஒரே மாதிரியான அனுபவத்தை அளிப்பவை. அடிப்படையில் இரண்டு கார்களுமே ஒன்றுதான்.

இந்த நிலையில், புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், DSG கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஸ்கோடா ரேபிட் ஃபேஸ்லிஃப்ட். இரண்டில் எதை வாங்கலாம்?

டிஸைன்

கடந்த ஆண்டு ரேபிட் காரை - புதிய ஸ்டீயரிங் வீல், புதிய பேட்ஜ், புதிய டிஸைனில் டிக்கி கதவு, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் உடன் அப்டேட் செய்தது ஸ்கோடா. அதனால், இப்போது புதிய இன்ஜின், கியர்பாக்ஸ், கொஞ்சம் வசதிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. நாம் டெஸ்ட் செய்த காரில், ‘பிளாக் பேக்’ என்ற ஐடியாவைச் சேர்த்திருந்தது ஸ்கோடா. இதில் ஹெட்லைட்ஸ், க்ரில், பனி விளக்குக் குடுவைகள், ரியர் வியூ மிரர்கள் போன்றவை கறுப்பு வண்ணத்தில் வரும். கறுப்பு வண்ண அலாய் வீல்களும் இந்த பேக்கில் உண்டு. ஆனால், இந்த பிளாக் பேக், ரேபிட் காரின் டிஸைனுடன் பொருந்தவில்லை.

விற்பனைக்கு வந்ததில் இருந்து, வென்ட்டோவுக்கு இது இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட். கடந்த முறை, கறுப்பு வண்ணத்தில் ஹெட்லைட்ஸும், புதிய அலாய் வீல்களும், 1.2 லிட்டர் TSI இன்ஜினும் சேர்க்கப்பட்டன. இந்த முறை, புதிய டீசல் இன்ஜின், புதிய ட்ரிம் வண்ணங்கள், ஸ்டீயரிங் வீல், ட்ரிப் கம்ப்யூட்டர், அலாய் வீல்ஸ், ஹெட்லைட்ஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இரண்டு புதிய கார்களையும் ஒப்பிடும்போது, ரேபிட் ஸ்போர்ட்டியாகவும், வென்ட்டோ உயர்தர காராகவும் தெரிகிறது. பழுப்பு வண்ணத்தில், பார்க்க மினி ஜெட்டா போல இருக்கிறது வென்ட்டோ.

உள்ளே

இரண்டு கார்களின் உள்பக்கத்தை ஒப்பிடும்போது, உயர்தர உணர்வை அளிப்பது வென்ட்டோதான். என்னதான் இன்டீரியர் இரண்டு கார்களிலும் ஒன்றுபோல இருந்தாலும், வண்ணங்கள், பாகங்களின் தரம் போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள்.

ரேபிட் காரின் கைப்பிடிகள், ஏ.சி வென்ட்களில் க்ரோம் பட்டை இருக்கிறது. ஆனால், வென்ட்டோவில் இருப்பது ப்ரஷ்டு-அலுமினியம்தான். இரண்டு கார்களிலும் டூயல் டோன், பீஜ் வண்ண டேஷ்போர்டுதான். ஆனால், வென்ட்டோவில் சென்டர் கன்ஸோல் மேட் (Matte) சில்வர் ஃபினிஷுடன் இருக்கிறது. ரேபிட் காரின் சென்டர் கன்ஸோல் டல்லடிக்கும் க்ரே வண்ண பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வென்ட்டோவின் கியர் லீவர் மெட்டல் எஃபெக்ட் கொண்டுள்ளது. ஆனால், ஸ்கோடாவில் இருப்பது பிளாஸ்டிக் கியர் லீவர். ரேபிட் காரின் ஸ்டீயரிங், பிடித்து ஓட்ட நன்றாக இருந்தாலும், வென்ட்டோவின் ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங்தான் சூப்பர்.

வசதிகளைப் பொறுத்தவரை க்ரூஸ் கன்ட்ரோல், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் எனக் கலக்குகிறது ரேபிட். ஆனால், டேஷ்போர்டில் இருக்கும் டிக்கெட் ஹோல்டர் பயன்படுத்த வசதியாக இல்லை. விலை உயர்ந்த வென்ட்டோ மாடலில் லெதர் இருக்கைகள் உள்ளன. ரேபிட் காரில் ஃபேப்ரிக் இருக்கைகள்தான். புதிய ரேபிட் காரில், பின்னால் லெக் ரூமை அதிகப்படுத்திக்கொள்ள, முன் பக்கப் பயணியின் இருக்கையில் இருக்கும் லீவர் இல்லை. வென்ட்டோவில் இந்த லீவர் உள்ளது. ரேபிட் காரின் ஃபேப்ரிக் இருக்கைகள், வென்ட்டோவைவிட சற்றே சாஃப்ட்டான குஷன் கொண்டுள்ளன. இரண்டு கார்களின் பின்னிருக்கை இடவசதி, செக்மென்ட் பெஞ்ச் மார்க்கான ஹோண்டா சிட்டி அளவுக்கு இல்லை.

இன்ஜின்

இரண்டு கார்களிலும் இருப்பது ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். இது, 103 bhp சக்தியை அளிக்கிறது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. இந்த இன்ஜின் கொஞ்சம் ரஃப்பான சத்ததைக் கொண்டிருந்தாலும், பவர் டெலிவரி சூப்பர். மிட் ரேஞ்ச் அருமையாக இருக்கிறது. DSG கியர்பாக்ஸுடன் இந்த காரை ஓட்டும்போது, டர்போ லேக்கை நன்றாகவே சமாளிக்கிறது இந்த கியர்பாக்ஸ். இதில் ஸ்போர்ட் மோடு, டிப்ட்ரானிக் மோடுகள் உள்ளன. டிப்ட்ரானிக் மோடு என்பது, பேடில் ஷிஃப்ட்டரைப்போல மேனுவலாக கியரை மாற்றக் கூடியது.

0-100 கி.மீ வேகத்தை 12.18 விநாடிகளில் கடக்கிறது ரேபிட். இது வென்ட்டோவைவிட 0.07 விநாடிதான் வேகமாக இருக்கிறது. இதே செக்மென்ட்டில் இருக்கும் ஹூண்டாய் வெர்னா டீசல் ஆட்டோமேட்டிக், இந்த இரண்டு கார்களைவிட வேகமான காராக இருந்தாலும், DSG கியர்பாக்ஸ் தரும் த்ரில், வெர்னாவில் இல்லை.

ஓட்டுதல் தரம், கையாளுமை

ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ ஆகிய இரண்டிலுமே ஒரே சேஸி, சஸ்பென்ஷன்தான். எனவே, ஓட்டுதல் தரம், கையாளுமையில் இரண்டு கார்களும் ஒன்று போல இருந்தாலும், கூர்ந்து கவனித்தால் சில வித்தியாசங்கள் புலப்படுகின்றன. வென்ட்டோவின் சஸ்பென்ஷன் சற்று சாஃப்ட்டாக இருக்கிறது. இருந்தாலும், இரண்டு கார்களின் ஓட்டுதல் தரம், கையாளுமை கிட்டத்தட்ட ஒன்றுதான்.

சேல்ஸ், சர்வீஸ்

இரண்டு கார்களுமே, DSG கியர்பாக்ஸுடன் இரண்டு வேரியன்ட்களில் அளிக்கப்படுகின்றன. வென்ட்டோ TDI DSG கம்ஃபோர்ட்லைன் வேரியன்ட்டின் விலை 10.70 லட்சம் ரூபாய். ஹைலைன் வேரியன்ட்டின் விலை 11.16 லட்சம் ரூபாய். ஸ்கோடா ரேபிட் காரின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் ஆம்பிஷன் வேரியன்ட்டின் விலை 10.49 லட்சம். எலிகன்ஸ் வேரியன்ட்டின் விலை 10.84 லட்ச ரூபாய் (விலைகள் அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி). ‘பிளாக் பேக்’ வேண்டுமென்றால், கூடுதலாக 13,000 ரூபாய் செலுத்த வேண்டும்.


 
விலையில் மட்டுமல்லாமல், சர்வீஸிலும் ஸ்கோடாதான் விலை குறைவாக இருக்கிறது. ரேபிட் காரின் சர்வீஸ் பில் சுமாராக  8,000 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை இருக்கும். ஆனால், வென்ட்டோவின் சர்வீஸ் பில் 10,000 ரூபாய் முதல் 11,000 ரூபாய் வரை இருக்கும். ஸ்பேர் பார்ட்ஸ் விலைகள் இரண்டு கார்களிலும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. ஸ்கோடாவின் சர்வீஸ் தரம் மோசமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுவதால், விரைவில் சர்வீஸ் விஷயத்தில் நல்ல  பெயரை எடுக்க, பல மாற்றங்கள் செய்யப்போவதாக சொல்கிறார்கள். ஃபோக்ஸ்வாகன் மீதும் சர்வீஸ் குறித்த புகார்கள் இருந்தாலும், ஸ்கோடா அளவுக்கு இல்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, இரண்டில் சிக்கனமான ஓனர்ஷிப் என்பது, ஸ்கோடா ரேபிட் காரில்தான்.

எதிர்பார்த்தது போலவே இரண்டு கார்களில் எது பெஸ்ட் என்று சொல்வது கடினம். சர்வீஸ் செலவுகள், விலை போன்றவற்றில் ஸ்கோடா ரேபிட் குறைவாக இருந்தாலும், ஸ்கோடாவின் சர்வீஸ் இமேஜை அந்த நிறுவனம் மாற்றும் வரை, இந்த பாசிட்டிவ் பாயின்ட் எடுபடாது. வசதிகளை வைத்துப் பார்க்கும்போது வென்ட்டோ சொகுசிலும், ரேபிட் ஸ்போர்ட்டினெஸ்ஸிலும் ஸ்கோர் செய்கின்றன. கொடுக்கும் விலைக்கான மதிப்பு ரேபிட்டில் அதிகம் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து, வென்ட்டோவின் விலை உயர்ந்த வேரியன்ட் வாங்கினால், மதிப்பு இன்னும் கூடும். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோதான் இந்த இரண்டில் பெஸ்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick