பெர்சனாலிட்டி கார்கள்!

FIAT புன்ட்டோ ஈவோ Vs NISSAN மைக்ராசார்லஸ், சுரேன், படங்கள்: சுரேன்

எல்லோரிடமும் இருக்கும் காராக இருக்கக் கூடாது. அதேசமயம், என்னுடைய பர்சனாலிட்டியை எடுத்துச் சொல்லும் காராகவும் இருக்க வேண்டும்’- முதல் கார் வாங்கும் பலரின் எதிர்பார்ப்பு இதுதான். நிஸான் மைக்ரா, ஃபியட் புன்ட்டோ ஈவோ ஆகிய இரண்டுமே மாஸ் செல்லர் கார்கள் இல்லை. ஆனால், இவை யுனிக் விரும்பிகளின் சாய்ஸ். இரண்டு கார்களையும் நகரின் எந்த சந்து பொந்துகளுக்குள்ளும் ஓட்டிச் செல்ல முடியும். அதேசமயம், நெடுஞ்சாலைகளிலும் பயணிக்கலாம். ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் சாய்ஸாக இருக்கும் இந்த இரண்டு கார்களில் சிறந்தது எது?

டிஸைன்

மைக்ராவின் டிஸைன் சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. ஆனால், எல்லோருக்குமே பிடித்த அழகிய டிஸைனுடன் இருக்கிறது புன்ட்டோ ஈவோ.
ஒரு ராணுவ பீரங்கி எப்படித் தயாரிக்கப்பட்டிருக்குமோ, அதுபோல மிக மிக உறுதியான, தரமான பாகங்களால் செய்யப்பட்டிருக்கும் கார் என்பது, காரைத் தொட்டுப் பார்க்கும்போதே தெரிகிறது.

மேற்புறம் வரை நீளும் ஹெட் லைட்ஸ், பானெட்டின் மீது இரண்டு க்ரீஸ் கோடுகள், கிரில் டிஸைன் என பழைய புன்ட்டோவைவிட மேலும் மெருகேறியிருக்கிறது புன்ட்டோ ஈவோ.

பழைய மைக்ராவுக்கும், புதிய மைக்ராவுக்கும் டிஸைனில் பல மாற்றங்கள் இருந்தாலும், மைக்ராவின் டிஸைன் கவரும் வகையில் இல்லை. புதிய கிரில், புதிய பானெட், புதிய ஹெட்லைட்ஸ், பின்பக்கம் எல்இடி விளக்குகள் என புதுமைகள் இருந்தாலும் குமிழ் வடிவ காரின் பேஸிக் டிஸைன் மாறவில்லை.

உள்பக்கம்

இரண்டுமே ஓட்டுநர்களின் கார் என்பதால், காருக்கு உள்ளே எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.புன்ட்டோ ஈவோவின் ஸ்போர்ட் மாடலில் மட்டுமே, முழுக்க முழுக்க கறுப்பு வண்ண டேஷ்போர்டு. மற்ற வேரியன்டுகளில் கறுப்பும், பழுப்பும் கலந்த இரட்டை வண்ண டேஷ்போர்டு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், புன்ட்டோவின் டேஷ்போர்டு மிக பேஸிக்காக இருக்கிறது. எட்டு லட்சம் ரூபாய் விலையை நியாயப்படுத்த சிறப்பம்சங்கள் இல்லை.

 இரட்டைக் குடுவை ஸ்பீடோ, ஓடோ டயல்களுக்கு இடையே, சின்ன ஃப்யூல் மற்றும் டெம்ப்ரேச்சர் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வகை கார்களில் டிரைவரின் இருக்கை சொகுசாக இருக்க வேண்டும் என்பதோடு, டிரைவிங் பொசிஷனும் சிறப்பாக இருந்தால்தான், சிட்டி டிராஃபிக்கில் நீண்டநேரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது. அந்த விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறது புன்ட்டோ ஈவோ.

பெடல்கள் மிகவும் உயரமாக வைக்கப்பட்டிருப்பதோடு, ஸ்டீயரிங்கும் டிரைவர் சீட்டுக்கு மிக அருகில் இருக்கிறது. கதவுக்கு மிக அருகில் டிரைவர் சீட் இருப்பதால், பெட்ரோல் டேங்க் திறப்பது, சீட் அட்ஜெஸ்ட் செய்வது என எல்லாமே சிரமமாக இருக்கிறது.

‘வாவ்’ எனச் சொல்லவைக்கும் எந்த விஷயங்களும் மைக்ராவுக்குள் இல்லை. ஆனால், சிம்பிளாகவும், பயன்படுத்துவதற்கு ஈஸியாகவும் இருக்கிறது மைக்ராவின் உள்பக்கம்.

கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, ப்ளூ-டூத், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல்களைத் தாண்டி புன்ட்டோவில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால், மைக்ராவில் கீ-லெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் கேமரா, கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல். ப்ளூ-டூத், யுஎஸ்பி போர்ட் என எல்லா வசதிகளும் இருக்கின்றன.

மைக்ராவின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், விசிபிளிட்டி வியக்கவைக்கிறது. முழுச் சாலையையும் பார்த்து ஓட்ட முடிகிறது. கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் பெடல்கள் என அனைத்துமே பயன்படுத்த சுலபமாக இருக்கின்றன. கிளட்ச் மிகவும் லைட்டாக இருப்பதோடு, ஸ்டீயரிங்கும் வளைத்துத் திருப்பி ஓட்ட ஈஸியாக இருக்கிறது. முன்பக்க இடவசதியைப் பொறுத்தவரை கால்களை நீட்டி, மடக்கி உட்கார மிகவும் ஈஸியான காராக இருக்கிறது மைக்ரா.
பின்பக்க இடவசதியைப் பொறுத்தவரை, இரண்டு கார்களிலும் இரண்டு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க இடம் உண்டு. மைக்ராவில் 251 லிட்டர் கொள்ளளவுகொண்ட டிக்கி இருக்க, புன்ட்டோ ஈவோவில் 280 லிட்டர் டிக்கி இருப்பதால், பொருட்கள் வைக்க இடம் கொஞ்சம் அதிகம். புன்ட்டோவின் டர்னிங் ரேடியஸ் 5 மீட்டர். மைக்ராவின் டர்னிங் ரேடியஸ் 4.65 மீட்டர். இதனால் யு-டர்ன் எடுப்பதற்கு மைக்ராவே சுலபமான காராக இருக்கிறது.

இன்ஜின்

ஃபியட் புன்ட்டோ ஈவோவில் இருப்பது, 90bhp சக்திகொண்ட 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின். காரின் அதிக எடை காரணமாக, பெர்ஃபாமென்ஸில் சீறும் காராக இல்லை புன்ட்டோ ஈவோ. டர்போ லேக் கொஞ்சம் அதிகம் என்பதால், வேகம் பிடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. நகருக்குள் மற்ற கார்களுடன் வேகம் பிடித்து ஓட்ட, அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. 90bhp சக்திகொண்ட இன்ஜின் என்று பெருமைப்பட்டுச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் இல்லை என்பது புன்ட்டோவின் மிகப் பெரிய பலவீனம்.

1461 சிசி திறன்கொண்ட மைக்ராவின் டீசல் இன் ஜின், புன்ட்டோ ஈவோ 90bhp காரைவிட 26bhp சக்தி குறைவு. சத்தம் போடாத இன்ஜினாக இருப்பதால், ஸ்டார்ட் செய்தவுடன் பெட்ரோல் காரோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது மைக்ரா. ஆனால், புன்ட்டோவைவிட 100 கிலோவுக்கும் மேல் எடை குறைவான கார் மைக்ரா. இதனால், பெர்ஃபாமென்ஸில் இரண்டு கார்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. டர்போ லேக் இல்லை என்பதே, மைக்ராவை ஈஸி டு டிரைவ் காராக மாற்றிவிடுகிறது.

0-100 கி.மீ வேகப் போட்டியில், புன்ட்டோ இந்த வேகத்தை அடைய 15.88 விநாடிகள் எடுத்துக்கொள்ள, பவர் குறைந்த மைக்ரா 0-100 கி.மீ வேகத்தை 15.9 விநாடிகளில் எட்டிவிடுகிறது. இரண்டு கார்களிலும் உள்ள 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்த மிகவும் எளிதாக இருப்பதோடு, கியர்ஷிஃப்ட் மிகவும் ஈஸியாக இருக்கிறது.

கையாளுமை

புன்ட்டோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 185 மிமீ. மைக்ராவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ. இதனால், பெரிய மேடு பள்ளங்களில்கூட பயப்படமால் புன்ட்டோவை ஓட்டலாம். சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் புன்ட்டோதான் பெஸ்ட். அதேபோல், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது ஸ்டெபிளிட்டியில் வீழ்த்த முடியாத காராக முதல் இடத்தில் இருக்கிறது புன்ட்டோ ஈவோ.

ஸ்டெபிளிட்டியில் சிறப்பான காராக இல்லை மைக்ரா. ஸ்டீயரிங் மிகவும் லைட்டாக இருப்பது, அதிக வேகத்தில் செல்லும்போது பயத்தை வரவழைக்கிறது. சின்னப் பள்ளங்களை மைக்ராவின் சஸ்பென்ஷன் சமாளித்தாலும் பெரிய மேடு பள்ளங்களில் அலுங்கிக் குலுங்குகிறது.

மைலேஜ்

புன்ட்டோவின் அதிக எடை பெர்ஃபாமென்ஸில் மட்டும் அல்ல, மைலேஜிலும் காரைப் பின் தங்கவைத்துவிட்டது. ஃபியட் புன்ட்டோ ஈவோ நகருக்குள் லிட்டருக்கு 12.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.7 கி.மீ மைலேஜ் தருகிறது. நிஸான் மைக்ரா, நகருக்குள் 14.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.5 கி.மீ மைலேஜ் தருகிறது. 

ஃபியட் புன்ட்டோ காருக்குள் உட்கார்ந்ததும் ஒரு பாதுகாப்பான ஃபீல் தானாக வருகிறது. காரணம், காரின் பில்டு குவாலிட்டி.

  ஓட்டுதல், தரத்திலும், கையாளுமையிலும் புன்ட்டோவை மைக்ரா மட்டும் அல்ல, ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் வேறு எந்த காருமே வீழ்த்த முடியாது. ஆனால், 8.60 லட்சம் ரூபாய்க்கு ஃபியட் புன்ட்டோவின் பெர்ஃபாமென்ஸும், சிறப்பம்சங்களும் போதுமானதாக இல்லை. ஆரம்ப வேகத்தில் டர்போ லேக் அதிகம் இருப்பதும் புன்ட்டோவின் மைனஸ்.

மைக்ராவின் பில்டு குவாலிட்டியைப் பாராட்ட முடியாது. ஆனால், சிறப்பம்சங்கள், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என காரை வாங்க தீர்மானிக்கும் விஷயங்கள் அனைத்திலும் மைக்ரா முன்னால் நிற்கிறது. மேலும், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மைக்ரா டீசல் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 8.27 லட்சம் ரூபாய். விலையிலும் வின்னராக இருக்கிறது மைக்ரா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick