கார் ஓட்டும்போது செல்போன்?

ர.ராஜா ராமமூர்த்தி

சென்னையில் கார் ஓட்டும்போது எத்தனை பேர் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள்? சென்னையின் முதுகெலும்பான அண்ணா சாலை வழியாகச் சென்று பாருங்கள். ஐ.டி.யில் இருந்து டாக்ஸி வரை அனைத்துவிதமான டிரைவர்களையும் கையில் போனுடன் பார்க்க முடியும். ஒரு குறுந்தகவல் வந்தாலோ, அனுப்பினாலோ 4 முதல் 6 விநாடிகள் வரை சாலையைவிட்டு கண்கள் விலகுகின்றன. இந்த விநாடிகளுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

முன்னே செல்லும் வாகனம் திடீரென பிரேக் போடலாம். நீங்கள் கவனித்துவிட்டீர்கள் என நினைத்துக்கொண்டு, இன்னொரு வாகனம் சிக்னல் கொடுத்த பின்பு உங்கள் லேனுக்குள் நுழையலாம். திடீரென்று ஒரு டூவீலர், தவறான வழியில் வந்துகொண்டிருக்கலாம். நெடுஞ்சாலையானால், லேன் மாறுவதையே உணராமல் மாறிக் கொண்டிருக்கலாம். மாடுகள் சாலையைக் கடந்து கொண்டிருக் கலாம். இப்படி எத்தனையோ சம்பவங்கள் சில விநாடிகளுக்குள் நடந்துவிட முடியும். மணிக்கு 88 கி.மீ வேகத்தில் செல்லும்போது, 6 விநாடிகள் வரை சாலையைவிட்டு கண்கள் விலகினால், ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கான தூரத்தை, பார்க்காமலேயே கடக்கிறோம் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

தற்போது நிறைய பேர் டச் ஸ்க்ரீன் போன்கள் வைத்திருக்கிறார்கள். சாலையில் பதிந்திருக்க வேண்டிய அவர்களது பார்வை, போன்களில் நிலைகுத்தியிருந்ததைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக, இவர்களில் பெரும்பாலானோர் டாக்ஸி டிரைவர்கள் இல்லை. நல்ல வேலையில், நான்கு பேரை வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்களைப் போலத்தான் தெரிந்தார்கள்.

செய்வது தவறு என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இருப்பினும் ஃபேஸ்புக்கில் விழும் அந்த ஒரு லைக்கும், வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷனும் கண்ணையும் கையையும் இழுக்கிறது. அது மட்டுமல்ல, ஸ்டீயரிங்கில் பிரத்யேக ஹோல்டரில் போனைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தும் அளவுக்கு பலர் அடிமையாகிவிட்டதைக் காண முடிகிறது. டூவீலர்களும், ஆட்டோக்களும் நிறைந்திருக்கும் சென்னை போன்ற நகர டிராஃபிக்கில், சில விநாடிகள் கவனம் சிதறினால், என்ன ஆகும் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.

உலகின் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் மற்றும் ஆட்டோமொபைல் சந்தையாக, நம் நாடும் உருவெடுத்துவரும் நேரத்தில், இது குறித்த விழிப்புஉணர்வு அவசியம். உலகளவில், 10 பேரில் இருவர் கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துகிறார்களாம். நீங்கள் இந்த வாசகத்தைப் படிக்கும்போது, உலகம் முழுக்க 6,60,000 பேர் கையில் போனுடன் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்ஸோஸ் (Ipsos OTX) எனும் மார்க்கெட் ரிசர்ச் அமைப்பு, கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்தியா குறித்து அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லியிருக்கிறது.

அதன்படி, உலகிலேயே கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ள நாடு, சவுதி அரேபியா. அங்கு 43 சதவிகிதம் பேர் கார் ஓட்டிக்கொண்டே, போனைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா நாடுகள் வர, நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதாவது, நம் நாட்டில் இந்தக் கணக்கு 29 சதவிகிதமாம். நமக்கு அடுத்த இடங்களில் சீனாவும், அமெரிக்காவும் இருக்கின்றன. உலகிலேயே மிகவும் கடுமையான சாலை விதிகள் கொண்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் (18 சதவிகிதம்) இருக்கிறது. 

அமெரிக்காவின் யூடா (Utah) பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, கார் ஓட்டும்போது கையில் போன் இருந்தாலோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பயன்படுத்தினாலோ, ஓர் ஓட்டுநரின் எதிர்வினை நேரம், மது அருந்தி வாகனம் ஓட்டுபவரின் எதிர்வினை நேரத்தைவிட தாமதமாக இருக்கிறதாம். அப்படியானால் வருங்காலத்தில், மது அருந்தி வாகனம் இயக்குபவர்களைவிட, போன் பயன்படுத்திக்கொண்டே ஓட்டுபவர்களால், அதிக உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றனவா?

அமெரிக்க அந்நியன்!

அமெரிக்காவின் யூடா (Utah) பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, கார் ஓட்டும்போது கையில் போன் இருந்தாலோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பயன்படுத்தினாலோ, ஓர் ஓட்டுநரின் எதிர்வினை நேரம், மது அருந்தி வாகனம் ஓட்டுபவரின் எதிர்வினை நேரத்தைவிட தாமதமாக இருக்கிறதாம். அப்படியானால் வருங்காலத்தில், மது அருந்தி வாகனம் இயக்குபவர்களைவிட, போன் பயன்படுத்திக்கொண்டே ஓட்டுபவர்களால், அதிக உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றனவா?
செல்போனைப் பயன்படுத்திக்கொண்டே கார் ஓட்டுபவர்களைத் தண்டிக்க, அந்நியன் ஒருவர் இருக்கிறார் தெரியுமா? கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவில் சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரச் சாலைகளில் செல்போனைக் கையில் வைத்துக்கொண்டு கார் ஓட்டியவர்கள், ஒரு விளம்பர பேனரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் போனைக் கீழே போட்டுவிட்டு ஒழுங்காக வாகனம் ஓட்டினார்கள். அந்த விளம்பர பேனரில் என்ன இருந்தது தெரியுமா?

இவர்களைப் போன்றே கார் ஓட்டும்போது, போன் பயன்படுத்தியவர்களைப் புகைப்படம் எடுத்து, குற்றவாளிகள் போல, விளம்பர பேனரில் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. இதைச் செய்தது போலீஸ் அல்ல.  பிரையன் சிங்கர் என்ற சமூக ஆர்வலர்  Texting While in Traffic (TWIT - Twitspotting.com) என்ற பெயரில் இப்படி ஒரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார். கார் ஓட்டும்போது யாராவது செல்போன் பயண்படுத்தினால், அந்தக் காட்சியை அந்தச் சாலையில் பயணிக்கும் (வாகன ஓட்டுனராக அல்லாமல், பயணியாகப் பயணிக்கும்) யார் வேண்டுமானாலும், புகைப்படம் எடுத்து இவருக்கு அனுப்பலாம். இவரே சொந்த செலவில் விளம்பர பேனர் வைக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick