பழைய கார் மார்க்கெட்டில் சொகுசு கார் வாங்குவது லாபமா?

சார்லஸ்

”பெருசா ஒண்ணும் ஆசை இல்லைங்க.... ஒரு பென்ஸ் இல்லைனா, பிஎம்டபிள்யூ வாங்கி, பசங்களோட ஜாலியா ஒரு வீக் எண்ட் டிரைவ் போயிட்டு வரணும். அது போதுங்க!’’ - கார் பிரியர்களின் ஆசை, கனவு, லட்சியம் என்பதெல்லாம் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களை தங்கள் வாழ்நாளில் சொந்தமாக்கிவிட வேண்டும் என்பதுதான். ஒருகாலத்தில் பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக இருந்த இவை, இப்போது சென்னையின் பல சுமாரான வீடுகளிலும் சர்வசாதாரணமாக நிற்பதைப் பார்க்க முடிகிறது.

உண்மை என்னவென்றால், இப்போது புத்தம் புதிய சொகுசு காரை வாங்குவதைவிட, இரண்டு மூன்று ஆண்டுகள் பழைய சொகுசு காரை வாங்கும் ட்ரெண்ட் அதிகமாகியிருக்கிறது. இன்றைக்கு, பழைய கார் மார்க்கெட்டில் சொகுசு கார்கள் செம டிமாண்ட்டோடு விற்பனையாகின்றன. பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களே தங்கள் ஷோரூமில் பழைய கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன. ‘வாங்கினால் புது கார்தான் வாங்குவேன்’ என்று கொள்கையோடு இருந்தவர்கள், இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், பழைய கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களை வாங்குவது லாபமா? சர்வீஸ் செலவுகள் எப்படி? சொகுசு கார்களை வாங்கிவிட்டு தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டால்?

15-20 லட்சம் ரூபாய்க்குப் புதிதாக ஒரு கார் வாங்குவதற்குப் பதில் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஓடிய பழைய சொகுசு காரை வாங்கலாம். இரண்டு ஆண்டு பழைய கார் என்றாலும் ஆடி, பென்ஸ் கார்களை யாரும் மிக மோசமாகப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். முறையான சர்வீஸ், மெயின்டனன்ஸ் ரெகார்டு எல்லாம் பக்காவாக இருக்கும் என்பதுதான், சொகுசு கார்கள் அதிக அளவில் விற்பனையாவதற்கான காரணம்.

கரோலா விலைக்கு BMW?

 உங்களுடைய பட்ஜெட் 20 லட்சம் ரூபாய். இந்த விலைக்கு டொயோட்டா கரோலா, செவர்லே க்ரூஸ், ஹூண்டாய் எலான்ட்ரா, ரெனோ ஃப்ளூயன்ஸ், ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, ஸ்கோடா ஆக்டேவியா போன்ற எக்ஸிக்யூட்டிவ் செடான் கார்களை வாங்கலாம். ஆனால், இதே 20 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஆண்டுகள் பழைய BMW X1, பென்ஸ்  C கிளாஸ் போன்ற என்ட்ரி லெவல் சொகுசு கார்களை வாங்க முடியும். கரோலா ஆல்டிஸின் பெட்ரோல் மாடல் சென்னை ஆன்- ரோடு விலை 18 லட்சம் ரூபாய். 5 லட்சம் ரூபாய் முன்பணம் கட்டி, இந்த காரை லோனில் வாங்கும் போது, ஐந்து ஆண்டுகளுக்கு மாதத் தவணை 26,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் பிஎம்டபிள்யூ X1 டீசல் காரை, பழைய கார் மார்க்கெட்டில் 16 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடியும். யூஸ்டு கார்களுக்கு வட்டி விகிதம் அதிகம். 4 லட்சம் ரூபாய் முன்பணம் கட்டிவிட்டு 12 லட்சம் ரூபாய்க்கு லோன் வாங்குகிறீர்கள், வட்டி விகிதம் 14.5 சதவிகிதம் என்று கணக்கிடும்போது, பழைய பிஎம்டபிள்யூவுக்கு நீங்கள் மாதம் சுமார் 26,000 ரூபாய் தவணை கட்ட வேண்டியிருக்கும்.

புதிய கரோலாவை சர்வீஸ் செய்ய, பொதுவாக 7,000 ரூபாய் வரை செலவாகும். இதே பிஎம்டபிள்யூ X1 காரை ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் செய்ய, 32,000 ரூபாய் ஆகும். அடிக்கடி மாற்றக்கூடிய பாகங்களைப் பொறுத்தவரை, கரோலா ஆல்டிஸின் ஏர் ஃபில்டர் விலை 1,000 ரூபாய். பிஎம்டபிள்யூ X1 காரின் ஏர் ஃபில்டர் விலை 5,000 ரூபாய். கரோலாவின் ஃப்யூல் ஃபில்டர் விலை 2,400 ரூபாய். X1 காரின் ஃப்யூல் ஃபில்டர் விலை 6,000 ரூபாய். பக்கவாட்டு மிரர்கள் அடிபட்டுவிட்டன... மாற்ற வேண்டும் என்றால், கரோலாவுக்கு நீங்கள் 11,500 ரூபாயும், பிஎம்டபிள்யூவுக்கு 70,000 ரூபாயும் செலவு செய்ய வேண்டும். கரோலாவின் டெயில் லேம்ப் விலை 8,000. பழைய X1 காரின் டெயில் லாம்ப் விலை, 42,000. சொகுசு கார்களை யூஸ்டு கார் மார்க் கெட்டில் வாங்கும் விலை குறைவாக இருந்தாலும், பழைய கார் என்பதற்காக ஸ்பேர் பார்ட்ஸில் எந்த விலைக் குறைப்பும் இருக்காது. அதனால் சர்வீஸ், மெயின்டனன்ஸ் செலவுகளைச் சந்திக்க முடியும் என்றால் மட்டுமே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களை வாங்கும் முடிவுக்கு வரலாம்.

சொகுசு கார்களைப் பொறுத்தவரை மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகம் என்பது உண்மைதான். ஆனால், மிகவும் சொகுசான, மிகவும் பாதுகாப்பான, தரத்தில் சிறந்த, இன்ஜினீயரிங்கில் மிகச் சிறந்த காரைப் பயன்படுத்துகிறோம் என்கிற உணர்வை இந்த கார்கள் தரும். மேலும், இப்போது கார்கள் என்பது ஸ்டேட்டஸ் சிம்பல். கரோலா ஆல்டிஸில் ஒரு பிசினஸ் மீட்டிங் போய் இறங்குவதற்கும், பிஎம்டபிள்யூவில் போய் இறங்குவதற்கும் வித்தியாசம் உண்டு.

அதனால், மெயின்டனன்ஸ் செலவுகள் பற்றிக் கவலை இல்லை என்பவர்கள், யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களைத் தாராளமாக வாங்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick