அன்பு வணக்கம் !

மதுப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புஉணர்வு, தமிழகத்தில் பரவ ஆரம்பித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குவதோடு, சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிர்களோடும் விளையாடுகிறார்கள். ‘குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர்கள். இது போன்றவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அத்தகைய தண்டனை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும். இதன் மூலம், மதிப்பிட முடியாத மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும்’ என்று நெற்றிப் பொட்டில் அறைந்ததைப்போலக் கோபப்பட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இந்தக் கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்துகள் பற்றிய ஆய்வறிக்கையை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 15,190 பேர் சாலை விபத்துகளுக்குப் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் இதில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய விபத்துகள் மொத்தமே 587தான் எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ‘ட்ரங்க் அண்டு டிரைவ்’ விபத்துகளில், வெறும் 53 பேர் மட்டுமே கொல்லப்பட்டிருப்பதாகவும் அது கூறுகிறது. இந்த 53 பேரில், 47 பேர் சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறந்தவர்களாம். அப்படியெனில், சென்னையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வெறும் 6 பேர் மட்டுமே தமிழகத்தில் ‘ட்ரங்க் அண்டு டிரைவ்’ டிரைவ் விபத்துகளில் உயிர் துறந்திருக்கிறார்கள் எனச் சொல்கிற புள்ளிவிவரத்தை நம்ப முடியவில்லை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது முறையாக வழக்குகள் பதிவு செய்யப்படுவது இல்லை என்பதும், வேறு வழக்காக மாற்றிப் பதிவு செய்யப்படுகிறதோ என்கிற சந்தேகத்தையும் இது கூட்டுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தின் மிகப் பெரிய தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் ஓட்டுநர் ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மறு கையில் மது பாட்டிலையும் வைத்துக் குடித்துக்கொண்டிருப்பதை சமூக வலைதளங்களில் பார்த்து தமிழகமே அதிர்ச்சியடைந்தது. அந்தப் பேருந்தில் பயணித்த பெண் பயணிகள் கூச்சல் போட்டு, பேருந்தை பாதி பயணத்திலேயே நிறுத்தி, எல்லோரது உயிரையும் காப்பாற்றியிருக்காவிட்டால், ‘கட்டுப்பாட்டை இழந்த பஸ் இன்னொரு பஸ்ஸுடன் மோதியது’ என்றோ, ‘பிரேக் பிடிக்காததால் பஸ் மரத்தின் மீது மோதி விபத்து’ என்றோதான் வழக்கு பதிவாகியிருக்கும். உண்மையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தாரா என்பது தெரியாமலேயே போயிருக்கும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வேறு யாரோ, எங்கேயோ இருப்பவர்கள் அல்ல. நம்முடன்தான் நம் நண்பர்களாகவும், உறவினர்களாகவும், அலுவலக சகாக்களாகவும் இருக்கிறார்கள். நம் கண் முன்பு யார் ஒருவர் குடித்துவிட்டு வாகனத்தை எடுத்தாலும், அவரைத் தடுக்க வேண்டியது நமது கடமை. இனிமேலும் குடிபோதையால் நடக்கும் விபத்துகளைத் தொடர, நாம் யாருமே அனுமதிக்கக் கூடாது.

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick