மினி கம்பெனியில் டாடாவின் மெகா முதலீடு !

சந்திப்புச.ஜெ.ரவி , படம்: தி.விஜய்

டீசல், எலெக்ட்ரிக் உள்ளிட்ட புதிய மாடல்களில் நானோ கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் றெக்கை கட்டும் சூழலில், சத்தமே இல்லாமல் கோவையில் உள்ள ஆம்பியர் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார், ரத்தன் டாடா!

‘டாடா நிறுவனம் உங்களோடு இணைந்து எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட உள்ளதா?’ என்ற கேள்வியோடு, ஆம்பியர் நிறுவனத்தின் இயக்குனர் ஹேமலதா அண்ணாமலையைச் சந்தித்தோம்.
“நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். சுயமாக ஒரு தொழில் துவங்கி நடத்த வேண்டும் என்று யோசித்த காலகட்டத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால், இந்தத் தொழிலில் அடியெடுத்து வைத்தேன்.

தொழில் துவங்கும்போதே, ‘இந்த வண்டி ஸ்பீடு போகாது; லோடு எடுக்காது; மேடு ஏறாது; மழையில் நின்றுவிடும்; சர்வீஸ் இருக்காது’... என்று ஏகப்பட்ட கட்டுக்கதைகள் கிளம்பின.  இவையெல்லாம் உண்மையல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தித்தான் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டி இருந்தது. அதற்குள் தமிழகத்தில் மின்வெட்டு கடுமையானது. அதனால், எங்கள் வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகள் ஃபெயிலியர் ஆனதால், தொழிலும் முடங்கியது.

நாங்கள் தொழில் துவங்கியபோது, எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் 68 நிறுவனங்கள் இருந்தன. இப்போது வெறும் 12 நிறுவனங்கள்தான் உள்ளன.  முதலில் சைக்கிள், அதன் பின்னர் ஸ்கூட்டர், இப்போது சரக்கு வாகனங்கள் என பல வாகனங்களை நாங்கள் தயாரித்துவிட்டோம்!” என்றவர், ‘‘பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயரைக் காத்துக்கொள்ள பின்வாங்கினர். நாங்கள் எங்கள் பெயரை நிலைநிறுத்த கடுமையாகப் போட்டியிட்டோம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றுள்ளோம். இப்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றார்.

டாடாவுடனான சந்திப்பு மற்றும் அவரது முதலீடு குறித்த நம் கேள்விக்கு கொஞ்ச  நேரம் யோசித்த பிறகே பதிலளித்தார் ஹேமலதா.

‘‘கடந்த ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சிக்கு ரத்தன் டாடா வருவதாக அறிந்தேன். இதையடுத்து அவருக்கு நான் ஒரு மெயில் அனுப்பினேன். அவருக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மெயில் வரும். ஆனால், என் மெயிலுக்கு அவர் பதிலளித்தார். அதற்கு நான் மெயில் அனுப்பியதல்ல காரணம். என்ன எழுதினேன் என்பதுதான்.

நான் அந்தக் கடிதத்தில் அவரிடம்  3 கேள்விகள் கேட்டிருந்தேன். முதலாவது, ‘சீனாவில் 32 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றால், இந்தியாவில் ஏன் அந்தளவு உற்பத்தி செய்ய முடியவில்லை?’ இரண்டாவது, ‘எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பை ஏன் கிராமத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது?’ மூன்றாவது, ‘சீனாவில் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் 2 ஆயிரம் தயாரிப்பாளர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் ஏன் வெறும் 12 தயாரிப்பாளர்கள்தான் உள்ளனர். ஆட்டோமைபைல் துறை ஏன் பெரிய நிறுவனங்களை மட்டுமே சார்ந்து இருக்கிறது?’ - இந்தக் கேள்விகளைக் கொண்டுதான் அந்த மெயிலை அனுப்பியிருந்தேன்.
இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவைக்கு வந்த போது என்னை ரத்தன் டாடா நேரில் சந்திக்க அழைத்தார். என்னிடம் அவர் கேட்ட ஒரே கேள்வி, ‘How Can I help you?’ என்பதுதான். நான் எனது ஆலையை விரிவாக்கம் செய்ய விரும்புவதைச் சொன்னேன். ‘My office will contact you’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் நேரில் சந்தித்து எங்களுக்கு அரசாங்கத்தின் ‘Technology Development Board’-ல் லோன் கிடைக்க உதவினார். எங்களுக்கு கேரன்ட்டி கையெழுத்தை ரத்தன் டாடாதான் போட்டர். அதன் பின்னர் ‘நான் டாடா மோட்டார்ஸ், டாடா கேபிட்டல் என எதிலும் இல்லை. நான் ரிட்டயர்டு பெர்ஸன். முடிந்த அளவு உதவுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, ஒரு தொகையை எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். எவ்வளவு முதலீடு என்பது ரகசியம்.

 ‘எல்லாவற்றையும் தனித்துவமாகச் செய்ய வேண்டும். இறக்குமதி செய்யாமல் எல்லாவற்றையும் நாமே தயாரிக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கினார். அவரின் முதலீடு என்பது தனிப்பட்ட முதலீடு தான். டாடா நிறுவனத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை!’’ என்று மிகவும் பக்குவமாகப் பேசினார் ஹேமலதா!

ஆமாம்... ஆட்டோமொபைல் துறை ஏன் பெரிய நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick