எந்திரன் - 12

பைக் கிளட்ச் எப்படி வேலை செய்கிறது?பரணிராஜன்

சென்ற இதழில் கிளட்ச் அடிப்படைச் செயல்பாடு பற்றியும், நான்கு சக்கர வாகனத்தில் பயன்படுத்தப்படும் Single Plate Dry Clutch பற்றியும் பார்த்தோம்.  இரு சக்கர வாகனத்தில் இடம்பெறும் Multi plate wet clutch பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

ரு சக்கர வாகனத்தின் கிளட்ச், இடவசதிக்கு ஏற்ப, அதன் அளவும் சிறியது. அதேசமயம், அதிக அளவிலான உராய்வுப் பரப்பு (Friction Surface) இதில் அடங்கியிருக்கும். நான்கு சக்கர வாகனத்தில் இருக்கும் பெரிய ஒற்றைத் தட்டுக்குப் பதில், இங்கே 4 - 5 சின்ன வட்டத் தகடுகள் அல்லது வளையங்கள் இருக்கும். அவற்றின் இரு பக்கமும் உராய்வுப் பரப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். எங்கெல்லாம் குறைந்த இடத்தில், அதிக உராய்வுப் பரப்பு தேவைப் படுகிறதோ, அங்கெல்லாம் இந்த மல்ட்டி பிளேட் வெட் கிளட்ச் பயன்படுகிறது.

 கிளட்ச் டிரம் (Clutch Drum):

கிளட்ச் அமைப்பின் வெளிப்புறத்தில் சூழ்ந்திருக்கும் இது, இன்ஜினுடன் இணைந்துள்ள ஃப்ளைவீலுடன் சுழலும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். கிளட்ச் டிரம்மின் சுழற்சி, இன்ஜின் சுழற்சியோடு இணைந்திருக்கும். டிரம்மின் வெளிப்புற ஆரத்தில் நீளமான ‘ப’ வடிவ வெட்டுக்களில் கிளட்ச் பிளேட்கள் (ஃப்ரிக் ஷன் பிளேட்கள்) வந்து அமர்வதற்கு வசதி இருக்கும்.

 கிளட்ச் ஹப் (Clutch Hub) :

இது, கிளட்ச் அமைப்பின் உள்ளே இருப்பது. ஹப்பின் நடுவில் இருக்கும் ஸ்ப்ளைன்கள் மூலம், டிரான்ஸ்மிஷன் டிரைவ் ஷாஃப்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். கிளட்ச் ஹப்பின் சுழற்சி, டிரான்ஸ்மிஷனின் சுழற்சியைத் தீர்மானிக்கும். இதன் வெளிப்புறம் சின்ன பற்சக்கரங்களால் அமைக்கப்பட்டிருக்கும். இதில், கிளட்ச் பிளேட்கள் (ஸ்டீல் பிளேட்கள்) வந்து அமரும்.

 கிளட்ச் பேக் (Clutch Pack): Clutch Friction Plate

இந்த கிளட்ச் பேக்கில் இரு வகையான பிளேட்கள் இருக்கின்றன. இந்த கிளட்ச் பிளேட்கள், வட்ட வடிவ வளையங்கள் போல இருக்கும். முதல் வகை, கிளட்ச் ஃப்ரிக்‌ஷன் பிளேட் (Clutch Friction Plate). இவற்றின் இரு பக்கமும் செராமிக் அல்லது ஃபைபர் போன்ற ஃப்ரிக்‌ஷன் மெட்டீரியல்கள் இருக்கும். இவையே முக்கிய கிளட்ச் செயல்பாடான, உராய்வுடன் பற்றுதலுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த ஃப்ரிக்‌ஷன் பிளேட்களின் வெளிப்புறம் பெரிய பற்சக்கரங்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். இவை கிளட்ச் டிரம்மின் ‘ப’ வடிவ வெட்டுக்களின் உள்ளே பொருந்தும். ஃப்ளைவீலுடன் இணைந்து, கிளட்ச் டிரம் சுற்றும்போது, ‘ப’ வெட்டுக்களில் உட்கார்ந்திருக்கும் இந்த கிளட்ச் ஃப்ரிக்‌ஷன் பிளேட்களும் சுழலும். சுருக்கமாகச் சொன்னால்... இன்ஜினின் சுழற்சியே கிளட்ச் ஃப்ரிக்  ஷன் பிளேட்களின் சுழற்சியாகும்.

 கிளட்ச் பேக் (Clutch Pack): (Steel or Aluminium Plate)

இரண்டாவது வகை, ஸ்டீல் அல்லது அலுமினியம் பிளேட்கள் ஆகும். இவையும் வட்ட வளையங்கள்தான். இவற்றின் உட்புறம் பற்சக்கரங்கள் இருக்கும். இவை கிளட்ச் ஹப்பின் மேல் உள்ள பற்சக்கரங்களின் மேல் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த பிளேட்களின் சுழற்சி, இதனுடன் இணைந்திருக்கும் கிளட்ச் ஹப்பைச் சுழற்றும்.

கிளட்ச் ஹப், அதன் மேலிருக்கும் கிளட்ச் பேக் (கிளட்ச் பிளேட்கள்), அதனுடன் இணைந்திருக்கும் கிளட்ச் டிரம் - இவை யாவும் மொத்தமாக நான்கு அல்லது ஐந்து கிளட்ச் ஸ்பிரிங்குகள் மூலம் அழுத்தப்பட்டிருக்கும். இந்த மொத்த அமைப்பும் வெளியே கிளட்ச் கவர், போல்ட்டுகளின் மூலம் மூடப்பட்டிருக்கும். கிளட்ச் ஃபிரிக்‌ஷன் பிளேட்கள் மற்றும் ஸ்டீல் பிளேட்கள் ஸ்பிரிங்குகள் மூலம் அழுத்தப்படுவதால், அவற்றினிடையே இருக்கும் உராய்வுக் குணம் (Co-efficient of Friction) உயர்கிறது. இந்த உராய்வின் மூலம், கிளட்ச் டிரம்மின் சுழற்சி, கிளட்ச் ஃப்ரிக்‌ஷன் பிளேட்கள் வழியாக ஸ்டீல் பிளேட்களைச் சுற்றச் செய்யும். அதனோடு இணைந்திருக்கும் கிளட்ச் ஹப்பும், இன்ஜின் சுழற்சியோடு சேர்ந்து கொள்ளும். கிளட்ச் ஹப்பின் இயக்கம், டிரான்ஸ்மிஷனுக்கு ஸ்பிளைன்கள் வழியாகக் கடத்தப்படும். எப்போதும் கிளட்ச் ஸ்பிரிங்குகள் அழுத்திக்கொண்டே இருப்பதால், இன்ஜின் சுழற்சி, தொடர்ந்து டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்பட்டு, இரு சக்கர வாகனம் இயங்க உதவும். ஹேண்டில்பாரின் இடது கைப்பக்கம் உள்ள கிளட்ச் லீவரை அழுத்தும்போது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கேபிள் இழுக்கப்பட்டு, அது கிளட்ச் கவரை வெளித்தள்ளும். இந்த கிளட்ச் கவர் வெளித்தள்ளப்படுவதால், உள்ளே அழுத்தத்தில் இருக்கும் கிளட்ச் ஸ்பிரிங்குகளின் இறுக்கம் தளரும். அத்துடன் இரட்டையர்களாகச் சேர்ந்திருந்த கிளட்ச் ஃபிரிக்‌ஷன் பிளேட்கள் மற்றும் ஸ்டீல் பிளேட்களும் உராய்வை இழந்து, பிரியத் தொடங்கும். இப்போது இவ்விரு பிளேட்களின் சுழற்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் போகும். அவற்றுடன் இணைந்திருக்கும் கிளட்ச் டிரமும், கிளட்ச் ஹப்பின் சுழற்சியும் வெவ்வேறாகிவிடும். இதன் மூலம் இன்ஜின் சுழற்சி, டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்படாது. இந்த நேரத்தில் நாம் கியர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன் பின், கிளட்ச் லீவரை நம் பிடியிலிருந்து விடுவிப்போம். இப்போது மீண்டும் கிளட்ச் கவர் உள்ளே தள்ளப்படும். உள்ளிருக்கும் கிளட்ச் ஸ்பிரிங்குகள் மறுபடியும் அழுத்தப்பட்டு, கிளட்ச் பிளேட்கள் மீண்டும் உராயத் தொடங்கும். இப்போது இன்ஜினின் சுழற்சி, டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்படும்.

மிகச் சிறிய இடத்தில் அதிக உராய்வு நடப்பதால், ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க, இன்ஜின் ஆயிலே இங்கும் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது. அதனால், இது வெட் கிளட்ச் (Wet Clutch) வகையில் அடங்குகிறது.

 - (எந்திரன் பேசுவான்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick