இந்த கார்களை வாங்கலாமா?

சார்லஸ்

வாங்க வேண்டிய கார்கள் எவை என்பதைத் தெரிந்துகொள்வதைவிட, தவிர்க்க வேண்டிய கார்கள் எவை என்று தெரிந்துகொள்வதுதான் முக்கியம்.

டிஸைன் ஸ்டேஜில் இருந்து ஒரு கார் விற்பனைக்கு வருவதற்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். அதை உருவாக்க, பல கோடி ரூபாய் செலவாகும். அதனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த டிஸைன் தாக்குப்பிடிக்குமா, பெர்ஃபாமென்ஸ் பொருத்தமானதாக இருக்குமா என அனைத்தையும் முன்கூட்டியே கணித்துத்தான் தயாரிப்பில் இறங்குவார்கள். இப்படி பல அக்னிப் பரீட்சைகளைக் கடந்து விற்பனைக்கு வரும் ஒரு கார், மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கும் தோல்வியடைவதற்கும் பல காரணங்கள்!

ஒரு கார் மார்க்கெட்டில் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பதை விற்பனை விபரம் வெளியே சொல்லிவிடும். தற்போதைய கார் மார்க்கெட்டில், எந்த கார்களை எல்லாம் இப்போது வாங்குவது சரியாக இருக்காது என்று ஒரு லிஸ்ட் எடுத்தபோது, அது நீண்டுகொண்டே போனது. அந்த லிஸ்ட்டில் டாப் 9 கார்கள் மட்டும் இங்கே!

இந்தியாவில் தொழிற்சாலை துவக்கி, முதன்முதலாக நிஸான் விற்பனைக்குக் கொண்டுவந்த கார், மைக்ரா. ஹேட்ச்பேக் கார்களில் முதன்முறையாக இதில்தான் கீ-லெஸ் என்ட்ரி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய அப்டேட்களோடு கடந்த ஆண்டு இந்த கார் புத்துயிர் பெற்றது. ஆனால், விற்பனை தொடர்ந்து மோசம்தான். இந்த ஆண்டு இதன் அதிகபட்ச விற்பனையே வெறும் 1,361 கார்கள்தான். மைக்ராவின் நவம்பர் மாத விற்பனை வெறும் 394 மட்டுமே! பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுமே நல்ல பெர்ஃபாமென்ஸ் தரக்கூடிய இன்ஜின்கள் என்றாலும், மைக்ரா சொதப்புவதற்கு முக்கியக் காரணம் என்ன என்பது, அந்த நிறுவனத்துக்கே புரியாத புதிர். இந்த செக்மென்ட்டில் மாருதி 17,900 கார்களை விற்பனை செய்து முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக, ஹூண்டாய் எலீட் i20 நவம்பர் மாதத்தில் 10,552 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இந்த எண்களுடன் ஒப்பிடும்போது, ரெனோ பல்ஸ் 432 கார்கள் விற்பனையாக, கடைசி இடத்தில் இருக்கிறது மைக்ரா.

2010-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது மைக்ரா. விற்பனைக்கு வரும்போது இதன் விலை உயர்ந்த பெட்ரோல் மாடலின் விலை 6 லட்சம் ரூபாய். இப்போது மிக மிக நல்ல கண்டிஷனில் உள்ள காரை விற்பனை செய்தாலும் அது 2 - 2.30 லட்சம் ரூபாய்க்குள்தான் விற்பனையாகும். விலை உயர்ந்த டீசல் மாடல் கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. இப்போது இதன் விலை பழைய கார் மார்க்கெட்டில் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவு. இந்த காருக்கான ரீ-சேல் வேல்யூ குறைந்துகொண்டே போகிறது என்பதால், இப்போதைக்கு நிஸான் மைக்ரா வாங்குவது நல்ல சாய்ஸ் இல்லை.

‘பிரியோ நல்ல கார் இல்லையா?!’ - இந்த லிஸ்ட்டில் இந்த காரைப் பார்த்ததும் எல்லோருடைய ரியாக்‌ஷனும் இதுவாகத்தான் இருக்கும். ஆம், பிரியோவின் நவம்பர் மாத விற்பனை 1,050 கார்கள் மட்டுமே! ஜூலை மாத விற்பனை வெறும் 74 கார்கள்தான்.

பிரியோவின் வில்லனே இதன் ஸ்டைல்தான். மிகவும் சின்ன கார் போன்ற தோற்றத்தில் இருப்பதோடு, பின்பக்கக் கதவு முழுக்கவே கண்ணாடி. டிக்கியிலும் பொருட்கள் வைக்க இடம் மிகக் குறைவு. மேலும், கிராண்ட் i10 காரின் வருகை பிரியோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பிரியோவின் இன்ஜின் நல்ல இன்ஜின்தான் என்றாலும் ஆரம்ப வேகம் சிறப்பாக இல்லை. 2011-ம் ஆண்டு ஹோண்டா பிரியோ விற்பனைக்கு வரும்போது, விலை உயர்ந்த மாடலின் சென்னை விலை 6 லட்சம் ரூபாய். இப்போது இந்த காரை 3.5 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடியும். 6 லட்சம் ரூபாய்க்கு இதே செக்மென்ட்டில் ஏகப்பட்ட சாய்ஸ்கள் இருப்பதால், பிரியோவை இப்போது வாங்குவது சரியான சாய்ஸாக இருக்காது.

விற்பனைக்கு வந்ததில் இருந்தே மாதம் ஆயிரம் கார்களைக்கூடத் தாண்டாத வெரிட்டோ வைப் காரின் நவம்பர் மாத விற்பனை, வெறும் 83 கார்கள்!
இதில் இருப்பதோ ரெனோவின் டீசல் இன்ஜின். இடவசதி அதிகம் என்றாலும், காரின் பின்பக்க டிஸைன் அரதப் பழசு. பெர்ஃபாமென்ஸும் சுமார். ஏ.சி கன்ட்ரோல்கள் மற்றும் பவர் விண்டோஸ் பட்டன்கள் பயன்படுத்த எளிதாக இல்லை. பெடல்களும் உயரமாக இருப்பதால், நீண்டதூரம் ஓட்டும்போது தொடை வலிக்கும். உள்ளே கைப்படியும் வசதியான இடத்தில் இல்லை.

இதன் விலை 7 லட்சம் ரூபாய். இந்த விலைக்கு இந்த காரை வாங்குவதற்கு ஸ்விஃப்ட், i20, போலோ, ஃபிகோ என ஏகப்பட்ட சாய்ஸ்கள் இருக்கின்றன. யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் வெரிட்டோ வைப் காருக்கான மதிப்பு, மிக மிகக் குறைவு.

நிஸான் சன்னிக்கும் ரெனோ ஸ்காலாவுக்கும் பானெட்டிலும் டிக்கியிலும் உள்ள லோகோ மட்டும்தான் வித்தியாசம். மற்றபடி இரண்டும் ஒன்றுதான்.
ரெனோ ஸ்காலாவின் நவம்பர் மாத விற்பனை வெறும் 86 கார்கள் மட்டுமே! இதன் விலை உயர்ந்த மாடல் 11 லட்சம் ரூபாய். காருக்குள் ஐந்து பேர் தாராளமாக உட்காரக்கூடிய இடவசதியும், விசாலமான டிக்கியும் இருந்தாலும் வேகமாகச் சென்று பிரேக் அடிக்கும்போது, பிரேக்கின் செயல்பாடு சிறப்பாக இல்லை. டயர் சத்தமும், டீசல் இன்ஜின் சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கின்றன. ப்ரீமியம் காருக்கான எந்தத் தனித்துவமும் இதில் இல்லை.

ரீ-சேல் மார்க்கெட்டிலும் 6 - 7 லட்சம் ரூபாய்க்குள் இரண்டு ஆண்டுகள் பழைய ரெனோ ஸ்காலா காரை வாங்கிவிடலாம் என்பதால், இப்போது தவிர்க்க வேண்டிய கார்களில் ரெனோ ஸ்காலாவும் இடம் பிடிக்கிறது.

மாதந்தோறும் 2.08 லட்சம் கார்கள் விற்பனையாகும் இந்திய மார்க்கெட்டில், ஸ்கோடா யெட்டியின் ஸ்கோர் 10 கார்கள் மட்டுமே! 5 பேர் மட்டுமே உட்கார்ந்து செல்லக்கூடிய இந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பதுதான் யெட்டியின் முதல் எதிரி. இதே செக்மென்ட்டில் எக்ஸ்யுவி 500, டாடா சஃபாரி ஸ்டார்ம், ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட 7 சீட்டர் கார்களைக் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வாங்க முடியும் என்பதோடு, இதே விலைக்கு மெகா சைஸ் எஸ்யுவி-களான இசுஸூ எம்யு-7, எண்டேவர், பஜேரோ ஆகிய கார்களும் கிடைக்கின்றன.

25 லட்சம் ரூபாய்க்கு 7 சீட்டர் இல்லாததே மைனஸ் என்றால், யெட்டியில் ஐந்து பேர்கூட வசதியாக உட்கார முடியாது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை என்பதோடு, சர்வீஸுக்குப் போனால் கார் சீக்கிரத்தில் வீடு திரும்பாது. அப்படித் திரும்பினாலும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை, சாதாரணமாக இருக்காது என்பதும் ஸ்கோடா யெட்டியின் மிகப் பெரிய மைனஸ்.

‘லிங்கா’ படம் போல, செம எதிர்பார்ப்புடன் மார்க்கெட்டுக்கு வந்த கார் குவான்ட்டோ. ஆனால், கடந்த நவம்பர் மாதம் மஹிந்திரா குவான்ட்டோ வெறும் 56 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

குவான்ட்டோவின் தோல்விக்கு முக்கியக் காரணம், இதன் பில்டு குவாலிட்டிதான். ஒரு ஸ்டைலான எம்பிவி காராக இல்லை என்பதோடு, 4 மீட்டருக்குள் வடிவமைக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இடவசதியிலும் கோட்டை விட்டுவிட்டார்கள். இதில் இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கைகள் சும்மா பேருக்குத்தான். சின்னச் சின்ன மேடு பள்ளங்களில் ஏறி இறங்கினால்கூட, காருக்குள் இருப்பவர்கள் டான்ஸ் ஆட வேண்டியிருக்கும் என்பதோடு, ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் சுமார். பிரேக்குகளின் பெர்ஃபாமென்ஸும் குறிப்பிடும்படியாக இல்லை. ஆகவே, இது யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் எடுபடவில்லை.

ஃப்ளூயன்ஸின் நவம்பர் மாத விற்பனை வெறும் 7 கார்கள் மட்டுமே! க்ரூஸ், ஜெட்டா, ஆக்டேவியா உள்ளிட்ட கார்கள் பவர்ஃபுல் இன்ஜினைக்கொண்டிருக்க, ஃப்ளூயன்ஸில் இருப்பது 105 bhp சக்தியை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை என்பதோடு, டர்போ லேக்கும் அதிகம். வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கே அசெம்பிள் செய்யப்படும் கார் என்பதால், எர்கானமிக்ஸிலும் குளறுபடிகள் அதிகம். எல்லா கன்ட்ரோல்களுமே இடதுபக்க ஸ்டீயரிங் வீல்கொண்ட மாடலுக்கு ஏற்றபடி வசதியாக இருக்கின்றன. முதலில் பெட்ரோல் இன்ஜினோடு வந்த ஃப்ளூயன்ஸின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது.

செயில் மற்றும் செயில் யுவா இரண்டு கார்களுமே சீனாவில் உருவானவை. சீனாவில் இந்த கார்களுக்கு அமோக வரவேற்பு இருக்க, இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தது ஜெனரல் மோட்டார்ஸ். சிறப்பம்சங்களிலும் சரி; பெர்ஃபாமென்ஸிலும் சரி; இரண்டு கார்களுமே மிக மிக சுமாரான கார்கள். ஸ்டைலைப் பொறுத்தவரை இரண்டு கார்களும் குறைந்தது 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. உச்சகட்டமாக செயில் யுவாவின் பின்பக்கம், செயிலின் டிக்கியை பாதியிலேயே வெட்டி எடுத்ததுபோல இருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, சீட் ஹைட் அட்ஜஸ்ட், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல்ஸ் உள்ளிட்ட முக்கிய சிறப்பம்சங்கள் எதுவுமே இந்த இரண்டு கார்களிலும் கிடையாது.

எர்கானமிக்ஸிலும் இரண்டு கார்களுமே வீக்தான். டெட் பெடலும் இல்லை. பவர் விண்டோஸ் பட்டன்கள் கதவில் இல்லாமல் ஹேண்ட் பிரேக்குக்கு அருகே வைக்கப்பட்டுள்ளன. கதவுக் கைப்பிடியும் ரொம்பவும் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், காருக்குள் இருந்து சட்டெனக் கதவைத் திறந்து வரமுடியாது.

இந்தக் குறைபாடுகள்தான் இரண்டு கார்களையுமே செக்மென்ட்டின் ஃப்ளாப் கார்கள் லிஸ்ட்டில் கொண்டுவந்துவிட்டது. செயில் செடான் கடந்த நவம்பர் மாதம் 604 கார்களும், செயில் யுவா 375 கார்களும் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மாதத்துக்கு 1,000 கார்கள் என்ற அளவைக்கூட இந்த இரண்டு கார்களுமே தொடவில்லை. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick