பழைய கார் மார்க்கெட்டில் 5 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்லாமா ?

MAHINDRA SCORPIOசார்லஸ்

மிரட்டலான கார் வாங்க வேண்டும் என விரும்பும் பட்ஜெட் பார்ட்டி களுக்கான கார், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. பழைய கார் மார்க்கெட்டில் mHawk இன்ஜின்கொண்ட, ஏழு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய ஸ்கார்ப்பியோவை, 5 லட்ச ரூபாய்க்கு வாங்க முடியும்.

கொஞ்சம் வரலாறு!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, முதன் முதலாக 2002-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதில் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் துவங்கி ஓட்டுதல், கையாளுமை என பல துறைகளிலும் இருந்த குறைகளை நீக்கிவிட்டு, 2006-ம் ஆண்டு மீண்டும் புதிய ஸ்கார்ப்பியோவை விற்பனைக்குக் கொண்டுவந்தது மஹிந்திரா. 2008-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஸ்கார்ப்பியோவில்தான் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, பழைய 2.6 லிட்டர் CRDe இன்ஜினைவிட பெர்ஃபாமென்ஸில் சிறந்த இன்ஜின். 2008-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்த இந்த மாடல் ஸ்கார்ப்பியோ, கடந்த ஆண்டுதான் மாற்றம் கண்டது. இங்கே பழைய கார் மார்க்கெட்டில் நாம் பார்க்க இருப்பது, 2008 முதல் 2014 வரை வெளிவந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாடல்.


பெர்ஃபாமென்ஸ்!

2.2 லிட்டர் mHawk இன்ஜின், அதிக மைலேஜ் தரக்கூடியது என்பதோடு, பெர்ஃபாமென்ஸிலும் ஸ்மார்ட். மிட் ரேஞ்ச் பவர் சிறப்பாக இருப்பதால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வது சுலபம். ஆனால், சஸ்பென்ஷன் செட்டிங் மிகவும் சாஃப்ட்டாக இருப்பதால், சாதாரண சாலைகளில்கூட, காருக்குள் உட்கார்ந்திருப்பவர்களைக் குலுக்குவது ஸ்கார்ப்பியோவின் ஹாபி. ஸ்டீயரிங் ஃபீட்பேக் சுமாராகவே இருக்கும். நெடுஞ்சாலையில் வேகமாகப் பறக்கும்போது, ஓட்டுபவருக்குப் பயம் கலந்த உணர்வைத் தரும். மேலும், திருப்பங்களில், வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, பாடி ரோல் அதிகமாகவே இருக்கும்.

ஏன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ?

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் மிகச் சுமாரான காராக இருந்தாலும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் எஸ்யுவி, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. இதற்கான காரணம் அறிய பெரிய கண்டு பிடிப்புகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த விலையும், அதிக இடவசதியும், மிரட்டலான தோற்றமும் மட்டுமே ஸ்கார்ப்பியோவை வாழவைக்கிறது. குறைந்த விலைக்கு அதிக மைலேஜ் தரக்கூடிய, அதிக ஆட்களுடன் பயணிக்கக்கூடிய கார் என்பதைத் தாண்டி, ஸ்கார்ப்பியோவின் பாரமரிப்புச் செலவுகளும் குறைவுதான். ஸ்கார்ப்பியோ, நகருக்குள் லிட்டருக்கு 10.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 13.6 கி.மீ மைலேஜ் தரும்.

கவனிக்க வேண்டியவை!

பொதுவாக, 1 லட்சம் கி.மீ-க்கு மேல் ஓடிய ஸ்கார்ப்பியோ, மார்க்கெட்டில் அதிகமாக விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனால், முதலில் ஓடோ மீட்டர் மற்றும் சர்வீஸ் ஹிஸ்டரியைப் பாருங்கள். சில யூஸ்டு கார் டீலர்கள், ஓடோ மீட்டரை மாற்றிவிட்டு, காரை விற்க முயற்சி செய்கிறார்கள். அதனால், கவனம் தேவை.

கியர் மாற்றும்போது, கிளட்ச்சில் வித்தியாசமான சத்தம் அல்லது உதறல் ஏதும் இருக்கிறதா எனப் பாருங்கள். கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்கும்போது, அரைப்பது போன்ற சத்தம் வருகிறதா எனக் கவனியுங்கள். இவை எல்லாம் கிளட்ச் அசெம்பிளி மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதன் அறிகுறிகள். கிளட்ச் அசெம்பிளியை மாற்ற 16,000 ரூபாய் வரை செலவாகும். ஆரம்பத்தில் விற்பனைக்கு வந்த mHawk ஸ்கார்ப்பியோ கார்களில், 25,000 கி.மீ-லேயே கிளட்ச் ஓவர்ஹால் செய்யப்பட்டன. கான் சென்ட்ரிக் சிலிண்டர்களில் ஏற்பட்ட கோளாறே இந்த பிரச்னைக்குக் காரணம். 2008-2009 மாடல் என்றால், 25,000 கி.மீ-ல் கிளட்ச் ஓவர்ஹால் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். இல்லை என்றால், 7,000 ரூபாய் வரை செலவாகும்.

ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் உண்டு. ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடலில், பார்க்கிங் மோடில் இல்லாமல் டிரைவிங் மோடில் வைத்து காரை ஸ்டார்ட் செய்தாலும் ஸ்டார்ட் ஆகும். இதனால், D-மோடில் வைத்தே ஸ்டார்ட் செய்து ஓட்டியிருந்தால், பார்க்கிங் - டிரைவிங் மோடு லீவர் மாற்றுவதில் சிரமம் இருக்கும். இந்தப் பிரச்னை இருந்தால், புதிதாக சென்ஸார்களை மாற்றுவதற்கு 15,000 ரூபாய் வரை செலவாகும்.

காரின் ஏ.சியை ஆண்டுக்கு ஒருமுறை முறையாக சர்வீஸ் செய்திருக்க வேண்டும். இல்லை என்றால், ஏ.சி காயிலில் பிரச்னைகள் ஏற்படும். இதைச் சரிசெய்வதற்கு 14,000 ரூபாய் வரை செலவாகும். 60,000 கி.மீ-க்கு ஒருமுறை சஸ்பென்ஷன் வேலை வைக்கும். ஒரு பக்க சஸ்பென்ஷன் யூனிட்டைச் சரிசெய்வதற்கு, 25,000 ரூபாய் வரை செலவாகும்.
ஸ்கார்ப்பியோவின் பவர் விண்டோஸ்களில் பிரச்னைகள் இருப்பதாகப் புகார்கள் அதிகம் வந்திருக்கின்றன. அதனால், பவர் விண்டோ, பட்டன்களைத் தட்டியவுடன் கண்ணாடி கீழே இறங்குகிறதா என்று பாருங்கள். இல்லை என்றால், இதைச் சரிசெய்ய 5,000 ரூபாய் வரை செலவாகும்.

ஸ்கார்ப்பியோவை 10,000 கி.மீ-க்கு ஒருமுறை ரெகுலர் ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்கு 4,000 ரூபாய் வரை செலவாகும். 40,000 கி.மீ-க்கு ஒருமுறை பெரிய சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்கு 12,000 ரூபாய் வரை செலவாகும். மூன்று ஆண்டுகள் ஆன பழைய ஸ்கார்ப்பியோவுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க 14,000 ரூபாய் வரை செலவாகும்.

5 - 6 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட். ஆனால், ஏழு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய கார் வேண்டும் என்றால், ஸ்கார்ப்பியோவைத் தாராளமாக வாங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick