ஃபியட்டின் தரம்... மாறவில்லை பலம்!

கிளாஸிக் கார் / ஃபியட் யுனோஞா.சுதாகர், படங்கள்: த. ஸ்ரீநிவாசன்

ந்தியாவின் ஃபியட் வரலாற்றைப் புரட்டினால், ஃபியட் - பிரீமியர் கூட்டணியின் பத்மினி காரைத் தவிர்க்க முடியாது. ஃபியட் பத்மினி வெற்றிக்குப்  பிறகு, 1998–ல் யுனோ என்ற காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தது ஃபியட்.

அந்தக் காலத்தில் நவீன வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கிய கார், யுனோ. உலகில் அதிகம் விற்பனை ஆன ஃபியட் கார்களில் இதுவும் ஒன்று. இதன் உற்பத்தி 2004-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இன்றும் பழைய கார் சந்தையில் விரும்பி வாங்கப்படும் காராக இருக்கிறது யுனோ.

கோவையைச் சேர்ந்த செந்தில்குமார், யுனோ காரைத் தேடி வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.

“பத்மினி காருக்குப் பின்பு, ஃபியட் பெயர் இந்தியாவில் மிகவும் பிரபலமானபோது அறிமுகமான கார் யுனோ. இன்ஜின் பவர், பிக்-அப், நேர்த்தியான வடிவமைப்பு, உறுதியான கட்டுமானம் என அப்போது மிகவும் பேசப்பட்ட, விரும்பப்பட்ட கார். ஆனால், மோசமான சர்வீஸ் நெட்வொர்க் இதன் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது.

நான் இதுவரை 15 யுனோ கார்களுக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி விற்பனை செய்துள்ளேன். இப்போது வைத்திருக்கும் யுனோவை 2004-ல் வாங்கினேன். ஃபியட்டின் டீசல் இன்ஜின் தரம் அனைவரும் அறிந்ததே! அதை அப்போதே யுனோ காரில் நிரூபித்திருந்தது ஃபியட். இதன் பிக்-அப் தற்போது இருக்கும் கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளான பிறகும் சஸ்பென்ஷன் அதிர்வுகள் இல்லாமல் மென்மையாகவே இருக்கிறது. டீசல் இன்ஜினாக இருந்தாலும் சத்தம் குறைவுதான். லிட்டருக்கு 18- 20 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. நீண்ட தூரப் பயணங்கள், மலைப் பாதைகள் போன்ற இடங்களில் ஓட்டினாலும்கூட, களைப்பு ஏற்படாத அளவுக்கு ஓட்டுதல் தரம் இருக்கிறது. 5 பேர் வரை தாராளமாக உட்காரலாம்.
 
வீட்டில் புதிய கார் ஒன்றோடு, பழைய காரையும் வைத்துக்கொண்டு சின்னச் சின்னப் பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால், நான் ஒரே காராக யுனோ கார்களை மட்டுமே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். அதேபோல, பழைய காரில் நீண்ட தூரப் பயணம் என்றாலே சர்வீஸ் செலவு, பராமரிப்புச் செலவு அதிகம் வைக்கும் என நினைப்போம். ஆனால், பழைய கார்களை ஒப்பிடும்போது யுனோவின் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. இதில் அதிகபட்சம் 140 கி.மீ வேகம் வரை சென்றுள்ளேன். இதுவரை பழுதாகி சாலையில் நின்றது இல்லை. இப்போது விற்பனையில் இருக்கும் ஃபியட் கார்களின் கியர்பாக்ஸ் சிஸ்டத்துக்கு இந்த மாடல்தான் முன்னோடி. சிங்கிள் வைப்பர் மாடல் கொண்ட கார்களிலேயே வெற்றிகரமாக ஹிட் அடித்த ஒரே கார் இதுதான்.

இது விற்பனைக்கு வந்த சமயத்தில், 3 முதல் 4 லட்சம் வரை விலை இருந்தது. அப்போது, இதன் விலையும் ஒரு மைனஸ் எனலாம். 2004-ல் இது நிறுத்தப்பட்ட சமயத்தில்தான், டிமாண்ட் அதிகரித்தது. இப்போது 50,000 முதல் 1 லட்சம் வரை காரின் கண்டிஷனுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

அந்தக் காலத்தில் இந்த காரைப் பார்த்தவர்கள், பயன்படுத்தியவர்கள் மீண்டும் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதன் உதிரி பாகங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன!’’ என்கிறார் செந்தில்குமார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick