கலர்ஃபுல் கஸின்ஸ்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

ரெட்ரோ இத்தாலிய டிஸைனுக்குப் புகழ்பெற்றது - பியாஜியோ.  இதன் தரமான வெஸ்பா தயாரிப்புகள், நமக்கு LX 125, VX 125, S 125 ஸ்கூட்டர்கள் வாயிலாக ஏற்கெனவே பரிச்சயமானவை. இப்போது VXL 150 மற்றும் SXL 150 என மேலும் இரு புதிய மாடல்களை, இந்தியாவின் பவர்ஃபுல் ஸ்கூட்டர்களாகத் தயாரித்துக் களமிறக்கியுள்ளது வெஸ்பா.

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

வழக்கம்போல பளிச் வண்ணங்கள் மற்றும் மேட் ஃபினிஷில் நம்மை ஈர்க்கிறது, புதிய ஸ்கூட்டரின் டிஸைன். அலாய் வீல்கள், ஸ்மார்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன. க்ரோம் பயன்பாடு ரசிக்கும் வகையில் உள்ளது. தரமான ஹேண்டில்பார் க்ரிப்புகள், அலாய் பிரேக் லீவர்கள் மற்றும் லைட்ஸ் ஸ்விட்சுகள் பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளன. க்ரோம் ஃபினிஷ் கொண்ட மிரர்கள், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. புதிதாக, சின்ன சிட்டி லைட் ஒன்று ஹெட்லைட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. VXL 150 மற்றும் SXL 150 என இரு வேரியன்ட்டுகளிலும், அனலாக் ஸபீடோ மீட்டர் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் கடிகாரம், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ் ஆகியவை உள்ளன. ஹேண்டில்பாருக்குக் கீழே இரு பக்கங்களிலும், நீளமான இருக்கைக்கு அடியிலும், ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கால்களை வைப்பதற்கு நிறைய இடம் இருந்தாலும், ஃப்ளோர் போர்டின் டிஸைன் காரணமாக, பயன்படுத்துவதற்கு வசதியாக இல்லை. இரு மாடல்களிலும் ஸ்கூட்டருக்கு அத்தியாவசியமான பிரேக் லாக் க்ளாம்ப் இல்லாதது மைனஸ். தவிர, SXL 150 மாடலில், கறுப்பு நிற அலாய் வீல்கள், செவ்வக வடிவிலான ஹெட்லைட் மற்றும் மிரர்கள், சீட் லைனிங் ஆகியவை - VXL 150 மாடலுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக உள்ளது. மேலும், SXL 150 மாடலில் க்ராப் ரெயில் இல்லாதது அதிர்ச்சி. இரு மாடல்களின் ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் பெயின்ட் குவாலிட்டி சூப்பர்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

VXL 150 மற்றும் SXL 150 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன், புதிதாக வடிவமைக்கப்பட்ட 3 வால்வுகள் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 150 சிசி கார்புரேட்டட் இன்ஜினைக் கொண்டுள்ளன. பவர் மற்றும் டார்க் முறையே 11.5bhp@7000rpm மற்றும் 1.17kgm@5,500rpm. இது மற்ற ஸ்கூட்டர்களைவிட அதிகம். CVT கியர்பாக்ஸ், இன்ஜினை சிக்கலின்றி இயங்க வைக்கிறது. மேலும், பவர் டெலிவரி ரெஸ்பான்ஸிவ்வாக இருப்பதால், ஆரம்பம் மற்றும் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் அட்டகாசமாக உள்ளது.  மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, 80 கி.மீ வேகத்தில் வசதியாக நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்ய முடிகிறது. இன்ஜின் ஸ்மூத்தாகவும், அதிர்வுகள் இல்லாமலும் செயல்படுகிறது. ஆனால், எக்ஸாஸ்ட் சத்தம் அதிகமாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

வெஸ்பாவின் ஸ்பெஷல் மோனோகாக் ஸ்டீல் ஃப்ரேம், ஸ்கூட்டரின் ஸ்டெபிளிட்டியையும், பில்டு குவாலிட்டியையும் உயர்த்த உதவுகிறது. சொகுசான இருக்கை, இருவர் வசதியாக உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் ஸ்பிரிங்குகள், அனைத்து வகைச் சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு, முன்பக்க லோ ப்ரொஃபைல் 11 இன்ச் மற்றும் பின்பக்க லோ ப்ரொஃபைல் 10 இன்ச் மேக்சிஸ் ட்யூப்லெஸ் டயர்கள் உறுதுணையாக இருக்கின்றன. முன்பக்க 200மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 140மிமீ டிரம் பிரேக், ஓட்டுநருக்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் இயங்குகின்றன.


VXL 150 மற்றும் SXL 150 ஸ்கூட்டர்களின் சென்னை ஆன்ரோடு விலை - ரூ. 99,342 மற்றும் ரூ. 1,03,856. அதிக விலைதான் வெஸ்பா ஸ்கூட்டர்களின் மிகப் பெரிய மைனஸ் என்றாலும், அதை நியாயப்படுத்த பல விஷயங்களைச் சேர்த்துள்ளது பியாஜியோ. தவிர, எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத ஸ்டைல், தரம், பெர்ஃபாமென்ஸ், சிறப்பம்சங்கள் என ஆல் ரவுண்டராக இருக்கிறது வெஸ்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick