மோட்டார் கிளினிக்

கேள்வி பதில்

அபுதாஹீர், திண்டுக்கல்.

கடந்த இதழ் மோட்டார் விகடனில் வெளியாகி இருந்த ஃபிகோ ஆஸ்பயர் டெஸ்ட் ரிப்போர்ட் படித்தேன். எனக்கு கார் மிகவும் பிடித்துவிட்டது. வாங்கலாம் என்கிற முடிவில் இருக்கிறேன். நான் மாதத்துக்கு 500 கி.மீ வரைதான் பயணிப்பேன். அதனால், பெட்ரோல் மாடலே போதுமானது. ஆனால், மாருதி புதிதாக ஒரு ஹேட்ச்பேக் காரை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாகப் படித்தேன். அது இந்த ஆண்டு விற்பனைக்கு வருமா அல்லது ஆஸ்பயரே வாங்கலாமா?

 நீங்கள் மாதத்துக்கு 500 கி.மீ-க்கும் குறைவாகத்தான் பயணிப்பீர்கள் என்றாலும், ஆஸ்பயர் வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால், டீசல் இன்ஜின் கொண்ட மாடலை வாங்குவதே நல்லது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைவிட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் சக்தி வாய்ந்தது. மைலேஜும் அதிகம் கிடைக்கும். ஃபிகோ, ஃபியஸ்டா என ஃபோர்டின் பல கார்களில் ஏற்கெனவே இருக்கும் 1.5 லிட்டர் இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. மெயின்டெனன்ஸ் செலவுகள் அதிகம் இருக்காது. மாருதியின் புதிய ஹேட்ச்பேக் காரான YRA இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும். ஆனால், இதில் ஆஸ்பயரில் இருப்பது போன்ற பவர்ஃபுல் இன்ஜின் இருக்குமா என்பது சந்தேகம்தான்!

வேல்முருகன், சேலம்.

 நான் துபாயில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய அப்பாவுக்கு ஒரு கார் பரிசளிக்க விரும்புகிறேன். அவரால் கியர் போட்டு ஓட்டுவது சிரமமாக இருக்கும் என்பதால், ஆட்டோமேட்டிக் கார்தான் வேண்டும். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, நிஸான் சன்னி, ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட், ஹோண்டா சிட்டி - இதில் எந்த காரை வாங்கலாம்?

 உங்களுடைய  லிஸ்ட்டில் இருந்து ஹோண்டா சிட்டி மற்றும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ ஆகிய இரண்டு கார்களை இறுதித் தேர்வாக எடுத்துக்கொள்ளலாம். இரண்டு கார்களுமே மிகச் சிறப்பான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் இன்ஜின் கொண்டவை. வென்ட்டோ ஓட்டுவதற்கு மிகவும் ஸ்போர்ட்டியாக இருக்கும். பெர்ஃபாமென்ஸும் மிகச் சிறப்பாக இருக்கும். ஓட்டுவதற்கு ஜாலியான கார் வேண்டும் என்றால், வென்ட்டோ வாங்கலாம். ஹோண்டா சிட்டி ஆட்டோமேட்டிக் - பிராக்டிக்கலான கார். நகருக்குள் ஓட்டுவதற்கும், நெடுஞ்சாலையில் வேகமாகப் பறப்பதற்கும் ஏற்ப சிட்டியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவை விட சிட்டியின் ஆட்டோமேட்டிக் நெடுஞ்சாலையில் அதிக மைலேஜ் தரும்.

ஃபெலிக்ஸ், திருச்சி.

 நான் ஸ்கோடா ஃபேபியாவின் ரசிகன். காம்பேக்ட்டான ஹேட்ச்பேக் கார்களில் மிகவும் தரமான கார் ஃபேபியா. இந்த காரை ஏன் ஸ்கோடா நிறுத்தியது என்றே புரியவில்லை. இப்போது கார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் நண்பன் ஒருவன், அடுத்த ஆண்டு ஸ்கோடா, புதிய ஃபேபியா காரை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாகச் சொன்னான். இது உண்மையா?

ரேபிட்டுக்கும் குறைவான விலை கொண்ட காரை, இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் எண்ணம் ஸ்கோடாவுக்கு இல்லை. மீண்டும் ஸ்கோடா ஃபேபியா இந்தியாவில் விற்பனைக்கு வராது.

சி.ஜே.சுந்தர், சென்னை.

 நான் கொஞ்சம் பவர்ஃபுல்லான பைக் வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறேன். என்னுடைய உயரம் 6 அடி. என் உயரத்துக்கு ஏற்ற மாதிரியும், அதேசமயம் பெர்ஃபாமென்ஸிலும் தரத்திலும் சிறந்த பைக்காகவும் இருக்க வேண்டும். பஜாஜ் பல்ஸர் 200NS மற்றும் சுஸூகி ஜிக்ஸர் பைக்குகளை இறுதி செய்து வைத்திருக்கிறேன். இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?

 சுஸூகி ஜிக்ஸர் உங்களுக்குச் சரியான பைக்காக இருக்கும். இன்ஜின் தரத்திலும், பெர்ஃபாமென்ஸிலும், ஓட்டுதல் அனுபவத்திலும் சுஸூகி ஜிக்ஸரே சிறந்த பைக்.

அன்பரசன், கிருஷ்ணகிரி.

 வெளிநாடுகளில் கேடிஎம் 125சிசி பைக் விற்பனையில் இருக்கிறது. இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

 200சிசிக்குக் குறைவான கேடிஎம் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் எண்ணம் பஜாஜ் நிறுவனத்துக்கு இல்லை. கேடிஎம் 125 பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தால், அதன் விலை போட்டி பைக்குகளைவிட அதிகமாக இருக்கும் என்பதால்தான் இந்த முடிவு.

பிரேமா, நாகப்பட்டினம்.

 புதிதாக ஸ்கூட்டர் வாங்க வேண்டும். ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜுபிட்டர் - இரண்டில் எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்?

 ஹோண்டா ஆக்டிவா பவர்ஃபுல்லான ஸ்கூட்டர். டிவிஎஸ் ஜூபிட்டர் அதிக மைலேஜ் தரும். போதுமான அளவுக்கு பெர்ஃபாமென்ஸும் உண்டு. மைலேஜா பெர்ஃபாமென்ஸா  என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

நடேசன், செங்கல்பட்டு.

 எனக்கு செம ஸ்டைலான, பிரம்மாண்டமான ஒரு எஸ்யுவி வாங்க வேண்டும் என்பது கனவு. இப்போது அப்படி ஒரு கார் வாங்கும் அளவுக்குப் பணம் சேர்த்துவிட்டேன். 2012 மிட்சுபிஷி பஜேரோ அல்லது மஹிந்திரா தார் - இந்த இரண்டில் எதை வாங்கலாம்? உங்களுடைய கருத்து என்ன?

 உங்கள் கனவு நிறைவேற எங்களுடைய வாழ்த்துகள். பஜேரோ, தார் ஆகிய இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று ஒப்பிட முடியாத வித்தியாசமானவை. இரண்டுமே ஆஃப் ரோடர் எஸ்யுவிகள் என்பதைத் தாண்டி, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய எந்த அம்சங்களும் இல்லை. தார் ஜீப்பைவிட பல மடங்கு தரத்திலும், ஆஃப் ரோடு சாகசங்களிலும், கையாளுமையிலும் சிறந்தது பஜேரோ. ஆனால், பஜேரோவின் மெயின்டெனன்ஸ் செலவு அதிகம். விலை குறைவான ஆஃப் ரோடர் வேண்டும் என்றால் மட்டுமே மஹிந்திரா தார் ஜீப்பை வாங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick