வாடகை கார்...

செல்ஃப் டிரைவ் சிஸ்டம்... ஓகேவா ?சார்லஸ்

ண்ட்ராய்டு, ஐபோன்களின் காலம் இது. ஓலா கேப் துவங்கி, மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் பல புதிய சேவைகள் வந்துவிட்டன. அதில் லேட்டஸ்ட், ஸூம் (Zoom) கார்ஸ். ‘மெர்சிடீஸ் பென்ஸ் காரை ஏன் வாங்க வேண்டும்? 190 ரூபாய் இருந்தால் போதும்; ஒரு மணி நேரத்துக்கு பென்ஸ் காரை விருப்பப்படி நீங்களே ஓட்டலாம். எந்த ஊருக்குப் போனாலும் வாடகை டாக்ஸியில் ஏன் பயணிக்க வேண்டும்? ஸூம் கார் இருக்கிறது; நீங்களே ஓட்டலாம்; பயன்படுத்தலாம்’ என ஆன்லைனில் ஸூம் கார் பற்றி ஏகப்பட்ட விளம்பரங்கள். சரி, ஸூம் கார் சேவை எப்படி இருக்கிறது? ஒரு வாடிக்கையாளராக ட்ரிப் அடித்தோம்.

ஸூம் கார், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் மூலமும் இயங்குவது. உங்கள் போனில் ஆப் ஸ்டோரில் இருந்து ஸூம் கார் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். எந்தத் தேதியில், எவ்வளவு நேரத்துக்கு கார் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்ததும், உங்கள் ஊரில் என்னென்ன கார்கள் எல்லாம் இப்போது பயணத்துக்குத் தயாராக இருக்கின்றன என்ற விவரங்கள் வரும். பென்ஸ், பிஎம்டபிள்யூ முதல் பலவிதமான கார்கள் இருக்கின்றன. இதில், நான் ஹோண்டா அமேஸ் காரைத் தேர்ந்தெடுத்தேன். நண்பகல் 3.30 மணிக்கு காரை எடுத்துவிட்டு, அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு காரை ஒப்படைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தேன். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள காரப்பாக்கம் மற்றும் கோடம்பாக்கத்தில் அமேஸ் கார் தயாராக இருப்பதாகத் தகவல் வந்தது. நான் கோடம்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் தேர்ந்தெடுத்த நேரத்துக்கு 1,995 ரூபாய் கட்டணம். டெபாசிட் தொகையாக 5,000 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். 6,995 ரூபாய் ஆன்லைனிலேயே செலுத்தியதும், என்னுடைய லைசென்ஸ் போட்டோவை அப்லோடு செய்யச் சொன்னது அப்ளிகேஷன். லைசென்ஸ் அப்லோடு செய்ததும், ‘உங்கள் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என்கிற தகவல் வந்தது.

‘தேர்ந்தெடுத்த நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, காரின் ரிஜிஸ்ட்ரேஷன் எண் அனுப்பப்படும்’ எனத் தகவல் வந்தது. 3.30 மணிக்கு கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு முன்பாகவே நான் கோடம்பாக்கம் சென்றுவிட்டேன். ‘ஸூம் கார்ஸ்’ என்று எங்காவது போர்டு இருக்கிறதா என்று தேடித் தேடி அலுத்துவிட்டது. அவர்கள் அனுப்பியிருந்த தகவலில், சரியான முகவரி இல்லாததுதான் குழப்பத்துக்குக் காரணம். அவர்கள் சொன்ன இடத்தில் ஒரு பெரிய பார்க்கிங் ஏரியா இருந்தது. அதற்குள் போனால், ஸூம் கார்ஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. நான் புக் செய்திருந்த அமேஸ் காரை ஒருவர் துடைத்துக்கொண்டிருந்தார்.

காரை மொபைல் போன் மூலமாகவே அன்லாக் செய்வார்கள். அதுவரை நாம் காரைத் திறக்க முடியாது. காருக்குள் தான் சாவி இருக்கும். 3.30 மணி வரை பொருத்திருந்தபோதும் ஸூம் அப்ளிகேஷனில் அன்லாக் ஆப்ஷன் வரவே இல்லை. கஸ்டமர் கேர் எண்ணைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் போன் மூலமாகவே காரை அன்லாக் செய்தனர். காருக்குள் ஏறி ஹெட்லைட், ஹாரன், ஏ.சி, பவர் விண்டோஸ், மியூஸிக் சிஸ்டம் எல்லாம் வேலை செய்கிறதா என்று பார்த்து செக் லிஸ்ட்டில் கிளிக் செய்துகொண்டே இருந்தேன். காரில் எதுவும் ஸ்க்ராட்ச் இருக்கிறதா என்று கடைசியாகக் கேட்டிருந்தார்கள். காரில் இருந்த ஸ்க்ராட்ச் குறித்து எழுதிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தேன்.

காரில் முழுவதுமாக டீசல் நிரப்பப் பட்டிருந்தது. ஸ்பேர் வீல், குடை, டார்ச் லைட் என எல்லாமே காருக்குள் இருந்தன. கூடுதலாக மொபைல் போன் சார்ஜர் கேபிளும் இருந்தது. காரில் இல்லாத கூடுதல் வசதியாக, ரிவர்ஸ் சென்ஸார் வைத்திருந்தார்கள்.

இதை அனைத்தையும் தாண்டிக் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், எல்லா கார்களிலுமே கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. காரின் வேகம் முதல் அனைத்துமே கண்காணிக்கப்படுகின்றன. இது, மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் வசதிகொண்டது என்பதால், ஜிபிஎஸ் மூலம் உங்கள் கார் எந்த இடத்தில் நிற்கிறது என்கிற விவரங்கள் ஸூம் கார் நிறுவனத்துக்குத் தெரியும். காரை எடுத்தவுடன் ஜிபிஎஸ் மூலம் நீங்கள் காரை மீண்டும் எந்த இடத்தில் விடவேண்டுமோ, அந்த இடத்துக்கான வழியும் காட்ட ஆரம்பித்துவிடுகிறது. காரின் ஸ்பீடோ மீட்டர் 125 கி.மீ வேகத்தைத் தாண்டினால், ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் அபராதம்.

முதல் 200 கி.மீ வரைதான் 1,995 ரூபாய். அதற்கு மேல் ஒரு கி.மீ-க்கு எட்டு ரூபாய் என்பதால், ட்ரிப் மீட்டரை ஸீரோ செய்து விட்டு பயணத்தை ஆரம்பித்தேன். நான் காரைப் பயன்படுத்திய 21 மணி நேரமும் காரில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. உண்மையிலேயே பயண அனுபவம் சிறப்பாக இருந்தது. 

பிளா பிளா கார்ஸ்!

‘Bla Bla கார்ஸ்’ என்பது, உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கார் ஷேரிங் மொபைல் அப்ளிகேஷன் சர்வீஸ். கடந்த ஜனவரியில் இந்த அப்ளிகேஷன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நீங்கள், ‘காரில் பெங்களூர் வரை தனியாகத்தான் செல்கிறேன்’ என்று போஸ்ட் போட்டால், உங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இணைந்துகொள்ளலாம். அதற்கான கட்டணத்தையும் நீங்களே வகுக்கலாம். சென்னையிலும் இப்போது இந்த பிளா பிளா கார்ஸ் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. ஆனால், கார் ஓட்டுநரின் நம்பகத்தன்மையைச் சோதிக்க முடியாது என்பது இதன் மைனஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick