செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

ஃபர்ஸ்ட் லுக் : டாடா நெக்ஸான் தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியச் சந்தையில் தான் இழந்த இடத்தை மீட்க, கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். அதன் வெளிப்பாடாக அற்புதமான டிஸைன்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. அதை சமீபத்தில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கண்கூடாகக் காண முடிந்தது. அங்கு வந்த அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்திய ஒரே கார், டாடாவின் முதல் காம்பேக்ட் எஸ்யுவியான நெக்ஸான். அப்போது அதிகமாகக் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, ‘நான் எப்போது காரை வாங்கலாம்?’ அந்தக் கேள்விக்கு டாடாவிடமே தெளிவான பதில் இல்லை.

டாடா, கார் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு எல்லைக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல், மாற்றி யோசித்ததன் விளைவை, 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே பார்க்க முடிந்தது (போல்ட், நானோ ட்விஸ்ட், ஜெஸ்ட், நெக்ஸான், கனெக்ட்நெக்ஸ்ட் கான்செப்ட்). இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மாருதி சுஸூகி கார்களின் ஸ்டைலிங், பெரும்பாலும் சதுர வடிவிலேயே இருந்தாலும், அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். முதல் கார் வாங்கும் இன்றைய இளைய தலைமுறைக்கான கார்களைத் தயாரிக்க, முழு முயற்சியுடன் தற்போது ஈடுபட்டுள்ள டாடா, மக்களின் கவனத்தைத் தனது பக்கம் திருப்ப வேண்டுமென்றால், இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டில், மற்ற கார்களைப் புரட்டிப் போடும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. 4 மீட்டர் நீளத்துக்குள்ளான கார்களின் பின்பக்க டிஸைனில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். மேலும், எஸ்யுவி எனும்போது மக்கள் அதிக உயரம், அதிக இடவசதி ஆகியவற்றைக் கட்டாயம் எதிர்பார்ப்பார்கள். இந்தச் சவால்கள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில் எஸ்யுவி கூபேவாகத் தயாராகியிருக்கிறது நெக்ஸான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick