ஸ்மார்ட்டான பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு : ஹீரோ ஸ்ப்ளெண்டர் i ஸ்மார்ட் 110தமிழ், படங்கள்: தென்றல்

மல்ஹாசன் - திறமைசாலி; ரஜினிகாந்த் - அதிர்ஷ்டசாலி! ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர், ரஜினி மாதிரி! செல்ஃப் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக்ஸ், ட்ரிப் மீட்டர், அலாய் வீல் என எந்த வசதிகளும் இல்லாத காலத்திலேயே டாப்-10 பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது என்றால், அதற்கு இதன் இன்ஜின்தான் காரணம்.

‘போனால் போகட்டும்’ என்று ஸ்ப்ளெண்டரில் சில வசதிகள் செய்ததோடு, ஐ-ஸ்மார்ட் என்றொரு பைக்கைக் கொண்டுவந்தது ஹீரோ. 100 சிசியில் முதன்முறையாக ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்துடன் வந்த ஸ்மார்ட் பைக், ஐ-ஸ்மார்ட்தான். இப்போது 110 சிசியில், அதே தொழில்நுட்பத்தோடு புதிதாக ஒரு ஐ-ஸ்மார்ட்டைக் களமிறக்கி இருக்கிறது ஹீரோ. பழசுக்கும் புதுசுக்கும் சிசியில் மட்டும் வித்தியாசம் இல்லை. ‘ஆல் நியூ’ என்று ஐ-ஸ்மார்ட்டை ஹீரோ விளம்பரம் செய்வதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.

முழுக்க முழுக்க, ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோவின் CIT-ல் (Centre of Innovation and Technology) தயாரிக்கப்பட்ட முதல் பைக் - ஐ-ஸ்மார்ட் 110. ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கேன்’ என்பதுபோல, டெல்லியில் உள்ள ஹீரோவின் டெஸ்ட் டிராக்கில், ஃபர்ஸ்ட் ரைடுக்குத் தயாராக நின்றிருந்தது ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110.

டிஸைன்

மேலோட்டமாகப் பார்த்தால், ‘பழைய ஐ-ஸ்மார்ட் மாதிரிதான் இருக்கு’ என்று நினைக்கத் தோன்றும். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், டிஸைனில் கொஞ்சம் மெச்சூரிட்டி தெரிகிறது புதிய ஐ-ஸ்மார்ட் பைக்கில். பைக்கின் சிவப்பு/கறுப்பு, அடர்நீலம்/கறுப்பு என்ற டூயல் டோன் கலர், நிச்சயம் ஆபீஸ் டியூட்டி பார்க்கும் இளைஞர்களுக்குக்கூடப் பிடிக்கும். உற்றுப் பார்த்தால்... இந்த டூயல் டோன், ரியர்வியூ மிரர்களிலும் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். பெயின்ட் டச், iSmart ஸ்டிக்கர் வேலைப்பாடு, கிராஃபிக் டிஸைன் என்று எல்லாமே அருமை. வெல்டன் ஹீரோ டிஸைனர்ஸ். சாதாரண ஓடோவையும், ஸ்பீடோ மீட்டரையும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன கம்யூட்டர்களுக்கு, ஐ-ஸ்மார்ட்டின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பெஷல் ரகம். அனலாக் ஸ்பீடோ, ஃப்யூல் மீட்டருக்கு வலதுபுறம் சின்னதாக டிஜிட்டலில் ஓடோ மீட்டரும், ட்ரிப் மீட்டரும் அசத்தல். முக்கியமான அம்சம் - ஸ்பீடோ மீட்டருக்குக் கீழிருக்கும் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்.

பிகினி ஃபேரிங், கூர்மையான ஹெட்லைட், நியூ க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள், பின் பக்கம் ஸ்ப்ளிட் கிராப் ரெயில் என்று மொத்த டிஸைனும் பந்தாவாக இல்லை; ஆனால், எல்லாமே பக்காவாக இருக்கிறது. உதாரணத்துக்கு, பெட்ரோல் டேங்க்கை, கிரிப் இல்லாத சாலைகளில் தொடைகளை வைத்துத் தாங்கிப் பிடிக்கும்போது, ஒரு கம்ஃபர்ட் தெரிகிறது. மேலும், பழைய கிராப் ரெயில், கையாளுமைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது தடிமனான கிராப் ரெயில், பைக்கை பார்க் செய்ய ஈஸியாக இருக்கிறது. சீட்டுகள் அகலமாக இருப்பது, பில்லியன் ரைடருக்கும் ஓகேவாக இருக்கும். இப்படி எர்கானமிக்ஸ் விஷயத்திலும் ஐ-ஸ்மார்ட் பட்டையைக் கிளப்புவதால், பைக்கின் டிஸைன் எந்தவிதத்திலும் பயமுறுத்தவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick