ஆடியின் விலை குறைந்த கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஆடி Q2தொகுப்பு: ராகுல் சிவகுரு

டி தன் கார்களின் டிஸைனை, முதலில் கற்களில்தான் உருவாக்குகிறது. பெர்ஃபெக்ட் அளவுகள், டீட்டெய்லிங், வடிவம் என அசத்தும் ஆடியின் அத்தனை அம்சங்களும், மக்களின் மனதைக் கவர்ந்தவை. ஓவர் டிஸைனிங் இல்லாத காரணத்தால், காலங்களைக் கடந்தும் ஆடியின் கார்கள் நவீனமாகத் தெரிகின்றன.

ஆனால், இந்த விதிகள் அனைத்தையும் Q2 காரை வடிவமைக்கும்போது ஆடி மறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், ஆடி கார்களுக்கே உரிய அறுகோண வடிவ கிரில் மற்றும் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் தொடர்ந்தாலும், ஒட்டுமொத்தமாக காரின் டிஸைன், பல்வேறு அம்சங்களுடன் படு ஷார்ப்பாக இருக்கிறது.

ஆடி Q3, Q5 காரைவிட இதன் ஸ்டைலிங் சிறப்பாக இருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

டிஸைன்

Q2 காரின் முன்பக்கம் இருக்கும் சிங்கிள் ஃப்ரேம் கிரில், சமீபத்திய ஆடி கார்களில் இருப்பதைவிடப் பெரிதாகவும், அகலமாகவும் இருக்கிறது. ஹெட்லைட்டுக்குக் கீழே இருக்கும் மெட்டல் வேலைப்பாடுகள் க்ளாஸ் ரகம். காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் பாடி லைன் மற்றும் கறுப்பு நிற C-பில்லர், காரின் ஸ்டைலிங்கை உயர்த்துகின்றன. பின் பக்க டிஸைன் சிறப்பாகவே இருக்கிறது என்றாலும், ஹேட்ச்பேக் கார்களை நினைவுபடுத்துகிறது. 2 வீல் டிரைவ் (Semi Independent Suspension) மற்றும் 4 வீல் டிரைவ் (Fully Independent MultiLink Suspension) மாடல்களின் பின்பக்க சஸ்பென்ஷனில் வித்தியாசம் இருக்கின்றன. ஆடி A3 தயாரிக்கப்படும் அதே MQB பிளாட்ஃபார்மில் Q2 தயாரிக்கப்பட்டிருந்தாலும், சில விஷயங்கள் புதிதாகச் சேர்க்கப் பட்டுள்ளன.

காரின் இரட்டை கிளட்ச் ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸ், Haldex 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஸ்டீயரிங் சிஸ்டம் ஆகியவை இந்த காருக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. Q2 காரை ஆடி எஸ்யுவி என்று சொன்னாலும், அதைப் பறைசாற்றும் வகையிலான லோ ரேஞ்ச், டிஃப்ரன்ஷியல் லாக், லிமிடெட் சிலிப் டிஃப்ரன்ஷியல் போன்றவை இல்லாதது மைனஸ். ஆனால், காரின் வீல்கள் போதுமான கிரிப்/ட்ராக்‌ஷன் கிடைக்காமல் திணறினால், பிரேக்குகள் தானாகச் செயல்பட்டு, பவர் டெலிவரியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் பணியைச் செய்வது, Q2 காரில் இருக்கும் எலெக்ட்ரானிக் லிமிடெட் சிலிப் போன்ற அமைப்பு.

கேபின், இடவசதி

Q2 காரின் வெளிப்புற டிஸைன் சிலருக்குப் பிடிக்காமல் போனாலும், உள்பக்கம் அனைவருக்கும் பிடித்த வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், காரின் டிஸைனுடன் ஒப்பிடும்போது, கேபின் டிஸைன் அதிரடியாக இல்லை. ஆனால், ஆடியின் விலை குறைவான கார்களில் ஒன்றான Q2 காரின் கேபின் உயர்தரத்தில் இருப்பதுடன், அதிகப்படியான சிறப்பம்சங்களையும் கொண்டிருப்பது ஆச்சரியம். விலை அதிகமான ஆடி கார்களில் காணப்படும் வெர்ச்சுவல் காக்பிட் மற்றும் MMI இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கன்ட்ரோல்கள், ஸ்விட்சுகள் தரமாக இருக்கின்றன.  A3 காரில் இருப்பதுபோன்ற ஏ.சி வென்ட்கள் இதிலும் தொடர்கின்றன. டேஷ்போர்டின் மேல்பகுதி, தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருந்தாலும், சென்டர் கன்ஸோல் மற்றும் டோர் பேட் ஆகியவற்றின் இறுக்கமான பிளாஸ்டிக் தரம் சுமார் ரகம். ஆனால், டேஷ்போர்டு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், இது ஒரு குறையாகத் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick